ஸ்ரீவாலைதாய்வீடு.. வாலையம்மன்
ஸ்ரீவித்யைக்கு முதல் படியான பாலா திரிபுர சுந்தரிக்கான தியான ஸ்லோகத்தின் பொருளாவது; சிவந்தநிறமுடைய கிரணங்களின் கூட்டங்களால் நிரம்பிய எல்லாத் திக்குகளையும் உடையவளும், இரு கைகளிலே ஜபத்திற்கான மாலையையும், புத்தகத்தையும் ஏந்தியும், மற்ற இரு கரங்கள் அபய-வரத முத்திரைகளுடனும், செந்தாமரையில் அமர்ந்து நிரந்தரமான ஸுகத்தை தருபவள் என் ஹ்ருதயத்தில் வசிக்கட்டும். அன்னையின் மேல் வலது கையில் ஜப மாலையும், மேல் இடது கையில் புஸ்தகத்தையும், கீழ் இடது-வலதுமுறையே அபய, வரத முத்திரைகளும் கொண்டதாக பாவிக்க வேண்டும்.
குண்டலினி யோகத்தில் முதல் இரு ஆதார சக்ரங்களில் அம்பிகையை பாலையாக பூஜிக்கச்சொல்லப்பட்டிருக்கிறது. சித்தர்களின் முதல்வரான அகத்தியரும் லலிதா சகஸ்ரநாமத்தில் “பாலா லீலா வினோதினி” என்று இவளைகுறிப்பட்டுள்ளார். கொங்கணவர் தனது வாலை கொம்மியில், “முக்கோண வட்ட கிணற்றுக்குள்ளே மூல மண்டல வாசிப் பழக்கத்திலே அக்கோண வட்டச் சக்கரத் திக்வாலை அமர்ந் திருக்கிறாள் வாலைப் பெண்ணே” (54) “காலனை காலால் உதைத்தவளாம் வாலை ஆலகால விடம் உண்டவளாம் மாளாச் செகத்தைப் படைத்தவள் இந்த மானுடன் கோட்டை பிடித்தவளாம்” (57) “வீணாசை கொண்டு திரியாதே இது மெய்யல்ல பொய்வாழ்வு பொய்க்கூடு காணாத வாலையைக் கண்டுகொண்டால் காட்சி காணலாம் ஆகாயம் ஆளலாமே” திருமூலர் தனது திருமந்திரத்தில், “சக்தி என்பாள் ஒரு சாதகப் பெண் பிள்ளை” (1199) “முக்திக்கும் நாயகி என்பதை அறிகிலர் ஓங்காரி என்பாள் அவள் ஒரு பெண் பிள்ளை” (1073) “நீங்காத பச்சை நிறம் உடையவள் ஆங்காரியாகிய ஐவரை பெற்றிட்டு ஹ்ரீங்காரத்துள்ளே இனித்திருந்தளே” என்பதாக கூறியிருக்கிறார். கருவூரார் கூறுகையில், “ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே ஆச்சர்யம் மெத்த மெத்த அதுதான் பாரு” என்று அன்னையை வாலைப் பெண்ணாக வைத்து அவளது மாயை போன்ற கூறுகளைப் பற்றிக் கூறுகிறார். பாலா பரபிரம்மத்தை காண நம்மை கைப்பிடித்து அழைத்து செல்பவள். இவளை மூல மந்திரங்கள் மூலம் ஜெபம் செய்ய சீக்கிரமே நம்வசப்படுபவள். மூன்று வித மான மூல மந்திரத்தின் மூலம் இவளை துதிக்கின்றனர். பாலா திரியட்சரி மூல மந்திரம் “ஓம் ஐம் க்லீம் சௌ” என்ற மந்திரம் பாலாவின் மூல மந்திரம் ஆகும். ஐம் என்பது பிரம்மா, வாணி பீஜம் ஆகும். க்லீம் என்பது விஷ்ணு, லட்சமி மற்றும் காளி பீஜமாகும். சௌம் என்பது சிவன், சக்தி மற்றும் முருகன் பீஜமாகும். எனவே பாலாவை இம்மந்திரத்தால் வழிபட கல்வி, செல்வம், வீரம் என அனைத்தும் கிடைக்கும்.
ஓம் ஐம் க்லீம் சௌ சௌ க்லீம் ஐம்” திரியட்சரி மூலமந்திரம் பலித்தமான பின்பு சடாட்சரியால் வழிபடலாம் பாலா நவாட்சரி மூல மந்திரம் “ஓம் ஐம் க்லீம் சௌ சௌ க்லீம் ஐம் ஐம் க்லீம் சௌ” சடாட்சரி மூல மந்திர பலத்தமான பின் நவாட்சரி மூல மந்திரத்தால் வழிபடலாம். பாலா தியான மந்திரம் “அருண கிருண ஜாலா ரஞ்சிதா சாவகாசா வித்ருத ஜப படீகா புஸ்தகா பீதி ஹஸ்தா இதரகர வராட்யா புஹ்ல கஹ்லார ஸம்ஸ்தா நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாண சீலா!!!” என்று அவளை தியானித்த உடனே குழந்தையாய் ஓடி வருபவள். வேத மந்திரங்கள் சரியான ஸ்வரத்தோடு ஓதப்பட வேண்டும். தப்பான ஸ்வரத்தோடு ஓதினால் அது விபரீத பலனை அளிக்கும். மந்திரங்களை, தகுந்த குருவின் அறிவுரைப்படி பாராயணம் செய்யும்படி தாழ்மையுடன்வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். ஒரு மந்திரத்தை ஓதுங்கால், அக்ஷரப் பிழையோ, ஸ்வரத்தில் பிழையோ வேறேனும் தவறோ ஏற்பட்டால், எஜமானனுக்கே தீங்கு விளைவிக்கும். ஒரு முறை குபேரன் அம்பிகையை பூஜிக்கையில், ‘நித்ய யெளவனா‘ என்ற நாமாவைச் சொன்னபோது அன்னையைக் கூர்ந்து நோக்கினானாம். அதாவது, தன்னை மறந்து, தான் செய்யும் பூஜையை மறந்து அன்னையின் பிம்பத்தினை தன் கண்களிலிருந்து மறைத்து அகக்கண்களில் அன்னையை கன்னியாக, குமரியாகக் காண தலைப்படுகிறான். உபமானங்களூக்கு அப்பாற்பட்ட அவளை மனக்கண் முன் கொண்டுவர இயலவில்லையாம். அப்போது ஈசன் அவன் முன் தோன்றி, பாலாவாக அன்னையைப் பார்க்க வேண்டுமானால் உஷத்காலத்தில் த்ரிஸாகர சங்கமத்தில், பாரதத்தின் தென் மூலையில் காணலாம் என்றாராம். அதே கன்யாகுமாரி கோவில் கொண்ட இடம் லலிதா சஹஸ்ரநாமத்தில் உள்ள “தாரா காந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா” என்னும் நாமம் இந்த குமரியம்மனுக்கே உரியதோ என்று தோன்றுகிறது. இந்த நாமத்தின் பொருள், நக்ஷத்திரத்தை விட அதிக ஒளிதரும் மூக்குத்தியை அணிந்தவள் என்பது. இந்த மூக்குத்தியே ஒரு சமயத்தில் கலங்கரை விளக்காக தடுமாறிய மாலுமிக்கு வழிகாட்டியது என்பர். இங்கே அம்பிகையை பிரதிஷ்ட்டை செய்தவர் பரசுராமர் என்று கூறப்படுகிறது. குழந்தைகள் இந்த அன்னையை வணங்கச் சொல்லிக் கொடுப்பதன் மூலம் அவர்களது கல்வி செழிப்புறும் என்பர். அம்பிகைக்கு சிறப்பான நாளான வெள்ளியில் அவளைப் போற்றி வணங்கிடுவோம். “
வாலை வழிபாட்டு போற்றிகள் இது திருமூலர் கொங்கனர் கருவூரார் சித்தர்பாடல்களின் மூலத்திலிருந்து தொகுக்கப்பட்ட போற்றி துதிகள்
ஓம் அறிவாகிய அக்னி குண்டத்தில் தோன்றிய அன்னையே போற்றி ஓம்
ஓம் ஆசை வடிவான பாசக் கயிற்றை ஏந்திய அன்னையே போற்றி ஓம்
ஓம் தீமையை பொசுக்கும் கோப வடிவான அங்குசத்தை கையில் ஏந்தி ஒளிரும் அன்னையே போற்றி ஓம்
ஓம் மனமாகிய கரும்பு வில்லை உடைய அன்னையே போற்றி ஓம்
ஓம் ஐந்து புலன்களாலும் உணரப்படும் அன்னையே போற்றி ஓம்
ஓம் ஒலி தொடுகை உருவம் ரசம் மணம் என்ற ஐந்து தன்மாத்திரைகளையும் ஐந்து மலர் கணைளாக கொண்ட அன்னையே போற்றி ஓம்
ஓம் பாசக் கயிற்றால் பிணைப்பவரும் பின் தனது அங்குசத்தால் வெட்டி எறிபவருமான அன்னையே போற்றி ஓம்
ஓம் தீர்க்கமான நீண்ட கண்களையுடைய அன்னையே போற்றி ஓம்
ஓம் தன் சிவப்பொளி வெள்ளத்தில் அண்டங்கள் அனைத்தையும் மூழ்க செய்யும் அன்னையே போற்றி ஓம்
ஓம் தன் கால் நகவொளியில் வணங்குவோர் அகத்துறைந்த இருளை போக்கும் அன்னையே போற்றி ஓம்
ஓம் தாயே உன் பாதகமல தூசியே வேத மங்கையின் வகிட்டு குங்குமம் போற்றி ஓம்
ஓம் தன் கண்களை இமைத்து மூடுவதால் புவனங்களை ஆக்கி அழிப்பவளே போற்றி
: ஓம் ஆதியில் ஐந்தெழுத்தின் வாலை தாயே போற்றி ஓம்
ஓம் அந்தரி சுந்தரி வாலை தாயே போற்றி ஓம்
ஓம் ஆதியந்த வாலையவளிருந்த வீடே போற்றி ஓம்
ஓம் இம்மை மறுமையை நீக்கும் வாலை தாயே போற்றி ஓம்
ஓம் ஈடில்லா ஞானமதை அளிக்கும் வாலை தாயே போற்றி ஓம்
ஓம் இராச பாண்டி பெண்ணாம் வாலை தாயே போற்றி ஓம்
ஓம் உகமுடிந்த ஐந்தெழுத்தான வாலை தாயே போற்றி ஓம்
ஓம் உற்பனமான ஐந்தெழுத்தான வாலை தாயே போற்றி ஓம்
ஓம் ஊமை எழுத்தே உடலான வாலை தாயே போற்றி ஓம்
ஓம் எங்கும் நிறைந்த வாலை தாயே போற்றி ஓம்
ஓம் எல்லா கலைகளையும் அறிந்த குரு வாலை தாயே போற்றி ஓம்
ஓம் ஏற்றம் அளிக்கும் ஞான வாலை தாயே போற்றி ஓம்
ஓம் ஐந்தெழுத்தும் என்றும் பேரான வாலை தாயே போற்றி ஓம்
ஓம் ஒளிவுதனில் ஒளிவு உறுதி தரும் வாலை தாயே போற்றி ஓம்
ஓம் ஓசை மணி பூரமதிலுதிக்கும் வாலை தாயே போற்றி ஓம்
ஓம் ஓம் என்ற எழுத்தே உயிரான வாலை தாயே போற்றி ஓம்
ஓம் ஔவைக்கும் கவிநாத மீந்த வாலை தாயே போற்றி ஓம்
ஓம் அஃறிணைக்குள்ளும் நாத வடிவ வாலை தாயே போற்றி ஓம்
ஓம் தெளிவு தனில் தெளிவுதரும் வாலை தாயே போற்றி ஓம்
ஓம் சிவமயமும் காட்டுவிக்கும் வாலை தாயே போற்றி ஓம்
ஓம் நல்லவழி ஞானங் கூட்டும் வாலை தாயே போற்றி ஓம்
ஓம் மகத்தான வேதாந்த சித்திதரும் வாலை தாயே போற்றி ஓம்
ஓம் உற்பனத்தில் உற்பனமாய் உறுதிதரும் வாலை தாயே போற்றி ஓம்
ஓம் வெளியதனில் வெளியாகி நாதரூப வாலை தாயே போற்றி ஓம்
ஓம் விளங்கிநின்ற வாலையாம் வாலை தாயே போற்றி ஓம்
ஓம் ஆதியந்தம் வாலையவளிருந்த வீடே போற்றி ஓம்
ஓம் சோதியந்த நடுவீடு பீடத்தமர்ந்தாய் வாலை தாயே போற்றி ஓம்
ஓம் பாதிமதி சூடியதோர் வாலை தாயே போற்றி ஓம்
ஓம் பத்துவயதுமான வாலை தாயே போற்றி ஓம்
ஓம் காமி வெகு சாமி சிவகாமி ரூபி தாயே தாயே போற்றி ஓம்
ஓம் கற்புடைய பெண்ணரசி வாலை தாயே போற்றி ஓம்
ஓம் தேனென்ற மொழிச்சி தாயே போற்றி ஓம்
ஓம் தேகமதில் அமிர்தமூட்டும் தாயே போற்றி ஓம்
ஓம் ஊனென்ற உடலுக்குள் நடுவான தாயே போற்றி ஓம்
ஓம் உத்தமியாள் பத்து வயதான தாயே போற்றி ஓம்
ஓம் பஞ்சவண்ணமாகி நின்ற பிராபரை தாயே போற்றி ஓம்
ஓம் அண்டரோடு முனிவர்களும் போற்றும் தாயே போற்றி ஓம்
ஓம் சூட்சமிவள் வாசமது நிலைத்த வீடே போற்றி ஓம்
ஓம் சொல்லுதற்கே எங்குமாய் நிறைந்த வீடே போற்றி ஓம்
ஓம் தேசமதில் போய் விளங்கு மிந்த வீடே போற்றி ஓம்
ஓம் சித்தாந்த சித்தரவர் தேடும் வீடே போற்றி ஓம்
ஓம் ஓசைமணிப் பூரமதில் உதிக்கும் வீடே போற்றி ஓம்
ஓம் ஓகோகோ அதிசயங்களுள்ள வீடே போற்றி ஓம்
ஓம் ஆசுகவி மதுரமது பொழியிம் வீடே போற்றி ஓம்
ஓம் அவனருளும் கூடி விளையாடும் வீடே போற்றி ஓம்
ஓம் வீடுமது தலைவாசல் அதுமேல் வாசல் திறக்க வேணும் தாயே ஓம்
ஓம் சித்தர்கள் போற்றும் தாயே போற்றி ஓம்
ஓம் வாயு மனமுங் கடந்த மனோன்மணி தாயே போற்றி ஓம்
ஓம் பேயுங் கணமும் பெரிதுடைப் பிள்ளை போற்றி ஓம்
ஓம் ஆயும் அறிவும் கடந்த அரனுக்கு தாயும் மகளும் தாரமுமானாய் போற்றி ஓம்
ஓம் சக்தி என்ற ஒரு சாதக பெண்பிள்ளையே போற்றி ஓம்
ஓம் முக்தி அளிக்கும் நாயகியே போற்றி ஓம்
ஓம் ஓங்காரி என்னும் ஒரு பெண்பிள்ளையே போற்றி ஓம்
ஓம் நீங்காத பச்சை நிறம் உடையவளே போற்றி ஓம்
ஓம் ஆங்காரியாகிய ஐவரை பெற்றவளே போற்றி ஓம்
ஓம் ரீங்காரத்துள் இனித்திருந்த வாலையே போற்றி ஓம்
ஓம் உற்பனமான ஐந்தெழுத்தான வாலையே போற்றி ஓம்
ஓம் முச்சுடரான விளக்கான வாலையே போற்றி ஓம்
ஓம் தாய்வீடு கண்ட வாலையே போற்றி ஓம்
ஓம் சிரித்து மெல்ல புரமெரித்த வாலையே போற்றி ஓம்
ஓம் ஒருத்தியாக சுடர்தமை வென்ற வாலையே போற்றி ஓம்
ஓம் கொடுஞ்சூலி திரிசூலி வாலையே போற்றி ஓம்
ஓம் ஆயுசு கொடுக்கும் வாலையே போற்றி ஓம்
ஓம் நீரழிவு போக்கும் வாலையே போற்றி ஓம்
: ஓம் சத்தி சடாதரி வாலையே போற்றி ஓம்
ஓம் மாலின் தங்கையே வாலையே போற்றி ஓம்
ஓம் சோதிப்பெண்ணாம் வாலையே போற்றி ஓம்
ஓம் ஆண்டிப்பெண்ணாம் வாலையே போற்றி ஓம்
ஓம் இராச பாண்டி பெண்ணாம் வாலையே போற்றி ஓம்
ஓம் அந்தரி சுந்தரி வாலையே போற்றி ஓம்
ஓம் வல்லவள் அம்பிகை வாலையே போற்றி ஓம்
ஓம் தொல்லை வினை போக்கும் வாலையே போற்றி ஓம்
ஓம் அரிக்கு முந்தின தவ்வெழுத்தாம் வாலையே போற்றி ஓம்
ஓம் அரிக்குள் நின்ற ஐந்தெழுத்தாம் வாலையே போற்றி ஓம்
ஓம் ஆதியில் ஐந்தெழுத்தான வாலையே போற்றி ஓம்
ஓம் நாதியில் ஊமை எழுத்தான வாலையே போற்றி ஓம்
ஓம் ஊமை எழுத்தே உடலான வாலையே போற்றி ஓம்
ஓம் ஓம் என்ற எழுத்தே உயிரான வாலையே போற்றி ஓம்
ஓம் செகம் படைத்த ஐந்தெழுத்தான வாலையே போற்றி ஓம்
ஓம் சீவன் படைத்த ஐந்தெழுத்தான வாலையே போற்றி ஓம்
ஓம் உகமுடிந்த ஐந்தெழுத்தான வாலையே போற்றி ஓம்
பங்கய வாசனப் பாலை கமலைப் பராசக்தியே போற்றி ஓம்
ஓம் மனதை அழித்து ஞானம் அளிக்கும் மனோண் மணியே போற்றி ஓம்
ஓம் நித்ய யௌவனா வாலை பருவ பராசக்தியே போற்றி ஓம்
ஓம் எனும் ஓங்காரத்துள்ளே ஒரு மொழி ஆன வாலை தாயே போற்றி ஓம்
ஓம் எனும் ஓங்காரத்துள்ளே ஒரு அழகு ஆன வாலை தாயே போற்றி ஓம்
ஓம் எனும் ஓங்காரத்துள்ளே பல பேதம் ஆன வாலை தாயே போற்றி ஓம்
ஓம் எனும் ஓங்காரமாக ஓண் முத்தி சுத்தியான வாலை தாயே போற்றி ஓம்
ஓம் செங்கதிராற்றிசை பத்தையும் செம்மை செய் செவ்வுருவமே வாலை தாயே போற்றி ஓம்
ஓம் அங்கை நான்கில் வரதாபய மணிபக்க வடம் துங்க நற்புத்தகம் தாங்கிய ணீன் செந்தாரணியே வாலை தாயே போற்றி ஓம்
வாலை கன்னி அம்மன் அம்மானை பாடல்
1.
தேனமரும் சோலைத் திருவரங்கர்
எப்பொருளும் ஆனவர்தாம்
ஆண்பெண் அலியலார்காண்
அம்மானை ஆனவர்தாம்
ஆண்பெண் அலியலரே
ஆமாகில் சானகியை
கொள்வாரோ தாரமாய்
அம்மானை தாரமாய்?
தாரமாய் கொண்டதுமோர்
சாபத்தால் அம்மானை!
மூவருக்கும் முன்பிறந்த
மூத்தவளாம் பராசக்தி
முத்தி தரும் தாயவள்கு
பேரு என்ன அம்மானை?
பேறு என்ன அம்மானை?
இது திருவரங்க பெருமாளின் அம்மானை இதுபோன்று மூவர் சேர்ந்து கேள்வி பதில் தெளிவு என மூன்று பாடல்களில் ஐயம்தீரும் அம்மானை பாடல்
2.
முந்தி ஜெகம் பிறந்த
மனோன்மணி தாயவளின்
மகளாய் வந்தவள் பேர்
வாலைகன்னி அம்மானை
வாலைகன்னி அம்மானை
சத்திய பேருருவாம்
சித்தர்களின் தாய் வாலை
சித்தி என்ன அம்மானை
சித்தி என்ன அம்மானை
மாதா குமரி இவள்
மகிழ்ந்தமர்ந்த தாய் வீட்டில்
மாதவங்கள் சித்திக்கும்
வாலை அருள் அம்மானை
வாலையருள் அம்மானை
3.
சிரித்து புரமெரித்தாள்
சின்ன கன்னி ஆக வந்து
சென்ம வினையறுப்பாள்
வாலைகன்னி அம்மானை
வாலைகன்னி அம்மானை
சிங்க வாகினியாய்
மும்மலத்தை வேறருத்து
சின்மய ரூபம் காட்டும்
சித்தகத்தி அம்மானை
சித்தகத்தி அம்மானை
4.
மூன்று சத்தி ஓருவாய்
முளைத்தெழுந்த வாலைக்கு
நாதமென்ன அம்மானை
நாதமென்ன அம்மானை
ஓமெனவும் ஆமெனவும்
ஊமை எழுத்துடனே
ஆமென்று அழைப்பதுவே
அன்னை நாதம் அம்மானை
அன்னை நாதம் அம்மானை
முச்சத்தி ஆனவள்கு
முப்பீஜம் பிரணவமும்
மகாமந்திரமே அம்மானை
மகாமந்திரமே அம்மானை
5.
கன்னியாக நின்றவளை
குவலயத்தில் சித்தர் எல்லாம்
தாயாக ஏற்றதொரு
தன்மை என்ன அம்மானை
தன்மை என்ன அம்மானை
கருபிறந்த கர்மத்தை
கட்டறுத்து நின்றவளை
கண்டவராம் சித்தர்களின்
கன்னி வாலை அம்மானை
கன்னி வாலை அம்மானை
காலமெல்லாம் அறிந்தவளை
காலைனையும் உதைத்தவளை
சித்தர்கள் கழல்பணிந்தார்
அம்மானை கழல்பணிந்தார்
6
ஏடேந்தும் பாரதியாள்
தத்துவமாய் நின்றதனால்
வாலைக்கு ஆதி பீஜம்
ஐம் என்பார் அம்மானை
ஐம் என்பார் அம்மானை
சிரித்து புரமெரித்த
வாலை திரிபுரசுந்தரிக்கு
கிலியும் ஈராம் பீஜம்
என்பார் அம்மானை
ஈராம் பீஜமென்பார் அம்மானை
அல்லி மலர் தானமர்ந்த
வாலை மனோன்மணிக்கு
சவ்வுமே திரிபீஜம்
அம்மானை சவ்வுமே
திரு அம்மானை
7.
ஐயம் திரிபு நீக்கும்
ஆயி மகமாயி வாலை
அமர்ந்த இடம் பேருமென்ன
அம்மானை பேருமென்ன
அம்மானை
ஆதியந்த சோதிவீடு
அருந்தவத்தார் கூடும் வீடு
எங்கு இருக்கும் அம்மானை
எங்கு இருக்கும் அம்மானை
கோட்டை கட்டி நின்ற வீடு
கோடி சித்தர் கூடும் வீடு
உச்சிலே ஜோதி மேரு
ஒளி வீசும் தாயி வீடு
அம்மானை தாயி வீடு
அம்மானை
8.
மாற்றி பிறக்க செய்யும்
மாதா வாலை கன்னிகையை
சார்ந்தவர்க்கு என்ன பயன்
அம்மானை என்ன பயன்
அம்மானை
மாளா பிறவி தொடர்ந்து உழன்று
மறலிவாய் வீழாமல்
மானுடர் கரை சேர
வழிசெய்வாள் அம்மானை
வழிசெய்வாள் அம்மானை
ஊத்தை சடலமதில்
உள்ளார்ந்த ஜோதி வாலை
உள்ளமர்ந்து ஞானம் சொல்லி
உயர்த்துவாள் அம்மானை
உயர்த்துவாள் அம்மானை
9.
தேமல் உடலழகி
தேன்மொழிச்சி வாலைகன்னி
தொடர என்ன பயன்
அம்மானை தொடர
என்ன பயன் அம்மானை
முந்தை பிறவியதில்
விட்டகுறை தொட்டகுறை
வாசனை காரணமே
அம்மானை வாசனை
காரணமே அம்மானை
விதியில் இல்லாவிடில்
தாயை மதி காண ஒன்னாது
விதி சதி செய்யாது
காத்தருள்வாள் அம்மானை
காத்தருள்வாள் அம்மானை
10.
சிறுபிள்ளை ஆனவளை
சித்தர்கள் தொழுது நிற்கும்
சித்தம் என்ன அம்மானை
சித்தம் என்ன அம்மானை
சிதறும் மனம் ஒருமித்து
சீவகலை பெற்றாளும்
சதாகதியாய் சுழுமுனை தாயை
சார்ந்த நெறி அம்மானை
சார்ந்த நெறி அம்மானை
குளத்தில் நிறைந்த பாசி நீரை
மறைக்கும் கும்பத்தை உள்ளமிழ்த்த
குளபாசி விலகும் போல
கும்பக வாலை தாய்
அம்மானை வாலை தாய்
அம்மானை
11.
ஜோதி மணிவிளக்காம் வாலை
சிரசதிலே சூரிய சந்திரரை
சூடியதேன் அம்மானை
சூடியதேன் அம்மானை
வாசி வடிவமவள் வாமி சுழுமுனையே
இடக்கலை பிங்களையாம்
ரவிமதி சுடர் அம்மானை
ரவிமதி சுடர் அம்மானை
முச்சுடர் ஆனவளாம்
முப்புடம் செய்பளாம்
ஞானத்தை முழுமையாக்கும்
வாலை தாய் அம்மானை
முழுமையாக்கும் வாலை தாய்
அம்மானை
12.
வாலை தாயவளை வரித்துமே
பூசிக்க வருபவர் யார்
அம்மானை வருபவர் யார்
அம்மானை
தாமரை தாது தேனை உண்ண
தேடி வரும் தேன் குருவி போல்
தானுணர்வாய் கூடுவார்கள்
அம்மானை கூடுவார்கள்
அம்மானை
தேனிருக்கும் இடத்தையே
தேனீக்கள் தானறியும்
முன்னை வாசனையால் முயன்று வருவார்
அம்மானை முயன்று வருவார்
அம்மானை
வல்லமை காரியான
வாலை கன்னி தாயவளை
வழிபடும் முறைகள் என்ன
அம்மானை முறைகள் என்ன
அம்மானை
சிந்து கவிகள் பாடி
சிறுகையால் கொம்மி தட்டி
பாடி பரவிடவே
வாலை தாய் மகிழ்வாள்
அம்மானை வாலை தாய் மகிழ்வாள்
அம்மானை
மனதை ஒப்படைக்க
மமகாரம் அண்டாது
தன்னை அறிவதற்கு
தாய் தயை செய்வாள்
அம்மானை தயை செய்வாள்
அம்மானை
13.
சிறுபிள்ளையாக வந்து
சிரித்து விளையாடும்
சின்மயத்தை காண்பரிதோ
அம்மானை காண்பரிதோ
அம்மானை
சிந்தனையால் நினையாத
சடத்தவர்க்கு தூரமவள்
சிந்தனை செய்தோர்க்கு
சிறுகன்னி மடியமர்வாள்
அம்மானை மடியமர்வாள்
அம்மானை
ஒற்றை சடை போட்டு
ஒய்யார நடைநடந்து
தாம்பூல வாயழகி
தான் வருவாள் அம்மானை
தான் வருவாள் அம்மானை
14.
கருத்த நாகமதை
ஆபணமாய் பூண்டவளை
காண்பரிதோ அம்மானை
காண்பரிதோ அம்மானை
அன்னை என்று அழைத்தவுடன்
ஆனந்தமாய் ஓடிவரும்
அருள்வடிவம் தாய்வாலை
அம்மானை தாய்வாலை
அம்மானை
பணிந்தரை நிமிரவைக்கும்
பராபரை வாலை தாய்
பக்திக்கு இணங்கிடுவாள்
அம்மானை இணங்கிடுவாள்
அம்மானை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக