வியாழன், 25 டிசம்பர், 2025

சிவ மகத்துவம்



*பேரின்பம் நல்கும் எம்பெருமானே* 


மாணிக்கவாசகர் சிவப்பரம்பொருளைக் கசிந்துருகப் பாடுகிறார்;  சிவனே இறைவன் எனப் போற்றிப் புகழ்ந்தேத்துகிறார். 


*ஈசன் அடி போற்றி!* 

*எந்தை அடி போற்றி!* 


தமக்குத் தந்தையும் தலைவனுமான சிவபெருமானே எல்லா உயிர்க்கும் தந்தையும் தலைவனும் ஆவான் எனத் தெளிவுபட எடுத்துரைக்கிறார். 


சிவனன்றிப் பிறதெய்வத்தை வணங்கி வழிபடுபவரைக் கண்டு அஞ்சுகிறார். 


உயிர்க்குச் சிவபெருமான் ஒருவனே கடவுள் என மணிவாசகர் ஓதியுணர்த்த காரணம் என்ன? 


நாம் (உயிர்) ஏன் சிவபெருமானை மட்டுமே கடவுளாகக் கொள்ள வேண்டும்? 


*ஏனெனில் சிவபெருமான் ஒருவனே உயிர்க்கு நீங்காத பேரின்பம் (முத்தி) நல்க வல்லவன்!* 


*ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!* 


சிவப்பரம்பொருள் நிலையான மெய்ப்பொருள்.


உயிரும் என்றும் உள்ள பொருள். 


அநாதி கேவலத்தில் ஆணவ அழுத்தத்தினால் உயிர் முழு அறியாமையில் இருந்தது.  அறியாமையைத் தவிர வேறொன்றும் துளியும் அறிய முடியாத நிலை. 


என்று உயிரோ அன்றே ஆணவம் உடனிருந்ததால் உயிர்க்கு ஏற்பட்ட துன்பநிலை. 


*பேராது நின்ற பெருங்கருணை பேராறே!* 


இயற்கையிலேயே அறிவு, இச்சை, செயல் உடைய உயிர் அறியாமையில் கிடக்கும் நிலைகண்டு சிவபெருமான் அவ் உயிர் அறிவு பெற்று அறியாமை நீங்கும் வண்ணம் அவ் உயிர்க்காக ஐந்தொழில் ஆற்றுகிறான். 


*ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் *அருள்தருவாய்* 

*போக்குவாய் என்னைப்* *புகுவிப்பாய் நின்தொழும்பின்* 


உயிர்க்கு அறிவு ஏற்பட வேண்டுமாயின் அஃது செயல்பட வேண்டும்.  உயிர் செயல்பட அதற்குண்டான நிலை பெற வேண்டும்.


பெருமான் உயிர்க்குத் தனு, கரணம், புவனம், போகம் ஆகியவற்றைப் படைத்துக் கொடுக்கின்றான். 


அவன் படைத்தவற்றைக் கொண்டு உயிர் குறிப்பிட்ட காலம் செயல்படும் வரை காத்தபடி இருக்கின்றான். 


இவ்வாறாக உயிருக்காகப் படைத்துக் காத்தவற்றை  அழிக்கின்றான். 


படைக்கப்பட்ட சடப்பொருளைக் கொண்டு வினை நுகரும் உயிர் பக்குவம் பெறும் பொருட்டுப் பெருமான் உயிரை உலகியலில் ஆழ்த்தச் செய்வான். தன்னை உயிர்க்குக் காட்டாது/ உயிர் உணரா வண்ணம் மறைத்துக் கொள்வான். இஃது அவனின் மறைத்தல் தொழில்.


இவ்வாறாகப் பல பிறப்புகளில் பக்குவப்பட்டுப் பெருமான் திருவருள் சார்ந்த உயிர்க்கு நீங்காதப் பேரின்பமாகிய திருவடி இன்பத்தை (முத்தி) நல்குவான். இஃது பெருமானின் அருளல் தொழிலாகும். 


இவ்வாறாக உயிர் பொருட்டுச் சிவபெருமான் ஆற்றுகின்ற ஐந்தொழிலும் அருட்செயலே! 


அநாதியே கேவலத்தில் ஆணவப் பிடியில் அல்லலுற்ற உயிரைச் சகலநிலைக்குக் (உயிரின் தற்போதைய நிலை) கொண்டு வந்த பெருமான்,  உயிர்களைச் சுத்த நிலை (உயிர் திருவருள் சார்ந்த நிலை) வரை இட்டுச் செல்லாமலா போவான்? 


*உயிர் பேரின்ப நிலை எய்தும் வரை பெருமான்* *உயிர்க்கு இடையறாது* *ஐந்தொழில் ஆற்றிய வண்ணமே இருப்பான்!* 


*எல்லா உயிர்க்கும் முத்தி நிச்சயம் உண்டு!!!* 


உயிர்க்கு இத்தகு பெருங்கருணையும் பேரிரக்கமும் காட்டும் பெருமானைக் கடவுளாகக் கொள்ளாமல் மற்றோர் தெய்வத்தைக் கடவுளாகக் கொள்வது எங்ஙனம் பொருந்தும்??!


*ஏகபெருமானை எண்ணத்தில் இருத்தி* *பிறவிப் பெருங்கடல் நீந்தி* *பேரின்பமென்னும்  கரை சேர்வோம்!!!* 


*அவனியில் புகுந்தெம்மை ஆட்கொள்ள வல்லாய் ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே!* 


கருதற்கினிய பெருங்கருணையாளனைக் கண்டு மகிழ கதிரவன் காரிருளைப் போக்கிவிட்டான்!


திருப்பள்ளியெழுச்சி 


பாடல் 10


*புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள்நாம்* 

*போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி* 

*சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று* *நோக்கித்* 

*திருப்பெருந் துறையுறை* *வாய்திரு மாலாம்* 

*அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்* 

*படவும்நின் அலர்ந்தமெய்க்*

*கருணையும் நீயும்* 

*அவனியிற் புகுந்தெமை* *ஆட்கொள்ள வல்லாய்* 

*ஆரமுதே பள்ளி* *எழுந்தருளாயே.* 


பொழிப்புரை :


திருப்பெருந்துறையில் வீற்றிருப்பவனே! திருமாலாகிய அவன், பூமியில் சென்று பிறவாமையினால் யாம் வீணாகவே நாளைக் கழிக்கின்றோம்; இந்தப் பூமியானது சிவபெருமான் நாம் உய்யும்படி அடிமை கொள்கின்ற இடமென்று பார்த்து விருப்பத்தை அடையவும், பிரமன் ஆசைப்படவும் அர்ச்சிக்கவும் உனது பரந்த உண்மையான திருவருட்சத்தியும், நீயுமாகப் பூமியில் எழுந்தருளி வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனே! அருமையான அமுதம் போன்றவனே! திருப்பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.


சிவசிவ

சித்தமருத்துவ கவி

 சித்த மருத்துவம் பாடல் இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் , 

இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும், 


இப்பாடல் 

அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது


சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்

    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

 

மூளைக்கு வல்லாரை

  முடிவளர நீலிநெல்லி

ஈளைக்கு முசுமுசுக்கை

   எலும்பிற்கு இளம்பிரண்டை


பல்லுக்கு வேலாலன்

  பசிக்குசீ  ரகமிஞ்சி

கல்லீரலுக்கு  கரிசாலை

  காமாலைக்கு கீழாநெல்லி


கண்ணுக்கு நந்தியாவட்டை

  காதுக்கு சுக்குமருள்

தொண்டைக்கு அக்கரகாரம்

  தோலுக்கு அருகுவேம்பு


நரம்பிற்கு அமுக்குரான்

  நாசிக்கு நொச்சிதும்பை

உரத்திற்கு  முருங்கைப்பூ

ஊதலுக்கு நீர்முள்ளி


முகத்திற்கு சந்தனநெய் 

  மூட்டுக்கு முடக்கறுத்தான் 

அகத்திற்கு  மருதம்பட்டை

  அம்மைக்கு வேம்புமஞ்சள்


உடலுக்கு  எள்ளெண்ணை

  உணர்ச்சிக்கு  நிலப்பனை

குடலுக்கு ஆமணக்கு

   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே


கருப்பைக்கு அசோகுபட்டை

  களைப்பிற்கு சீந்திலுப்பு

குருதிக்கு அத்திப்பழம்

  குரலுக்கு  தேன்மிளகே!


விந்திற்கு ஓரிதழ்தாமரை

  வெள்ளைக்கு கற்றாழை

சிந்தைக்கு  தாமரைப்பூ

  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை


 கக்குவானுக்கு வசம்புத்தூள்

  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                           

விக்கலுக்கு மயிலிறகு

   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி


நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்

  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்

வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ  

   வெட்டைக்கு சிறுசெருப்படையே 


தீப்புண்ணா குங்கிலியவெண்ணை

  சீழ்காதுக்கு நிலவேம்பு

நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்

   நஞ்செதிர்க்க அவரிஎட்டி 


குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்

    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்

பெரும்பாட்டிற்கு அத்திநாவல்

  பெருவயிறுக்கு மூக்கிரட்டை


கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்

  கழிச்சலுக்கு தயிர்சுண்டை 

அக்கிக்கு வெண்பூசனை

  ஆண்மைக்கு பூனைக்காலி


வெண்படைக்கு பூவரசு கார்போகி

   விதைநோயா கழற்சிவிதை 

புண்படைக்கு புங்கன்சீமையகத்தி

  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு


கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்

  கரும்படை வெட்பாலைசிரட்டை

கால்சொறிக்குவெங்காரபனிநீர்

  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே


உடல்பெருக்க உளுந்துஎள்ளு

   உளம்மயக்க கஞ்சாகள்ளு

உடல்இளைக்க தேன்கொள்ளு

   உடல் மறக்க இலங்கநெய்யே


அருந்தமிழர் வாழ்வியலில்

  அன்றாடம்சிறுபிணிக்கு

அருமருந்தாய் வழங்கியதை

  அறிந்தவரை உரைத்தேனே!!

திங்கள், 8 டிசம்பர், 2025

அகத்தியர் பஜனை பாடல்கள்

 சித்தர் நாயகன் ;  தமிழ் பித்த சேவகன்

சக்தி தாயவள் ; ப்ரிய பக்த பாலகன்
அத்தி மா முகன் ; வினை தீர்த்தமானவன்
தீர்த்த மாமலை ; திவ்ய ஆர்த்தி மங்களன்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்

கர்மத்தின் பலன் என் கனவில் சொன்னவன்
புண்யமாய் நிலம் இங்கு தானம் கொண்டவன்
என்னுடன் இரு என்று சொன்ன மன்னவன்
உன்னை கைவிடேன் என்று என்னில் நின்றவன்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்

தொலைந்த ஆவினம் தனை மீட்டு வருபவன்
தோஷம் நீங்கவே வழி காட்டி தருபவன்
குழந்தை வேண்டுவோர் மனை மழலை ஆனவன்
குழந்தை வேலவன் உபதேசமானவன்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்

ஆன மாமலை அடி அடக்கி ஆண்டவன்
வான மாமலை பதி வாழும் வாமனன்
ஊனமானுடம் உணவூட்டும் தாயவன்
தாணுமாலயன் தந்த பொதிகை நாயகன்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்

உச்சி வேளையில் உரையாடும் அச்சுதன்
சச்சிதானந்தம் ஆனா ஷண்முகன் சிவன்
சித்தர்கள் கணம் புடை சூழ வந்தவன்
பக்தர்கள் மனம் உரை மாய பக்குவன்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்

பச்சை முண்டுடன் திகழ் பத்ம பூஷணன்
இச்சையின் படி வரம் நல்கும் ஈஸ்வரன்
சப்த மண்டலம் தொழும் ஸ்வஸ்தி வாசகன்
சயன ஈஸ்வரன் தீர்த்த மலையில் வாழ்பவன்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்

உப்பு தேகத்தை காய கற்பம் செய்பவன்
ஒப்பிலாததோர் தூய வாழ்வு தருபவன்
அற்புதங்களாம் அருள் ஆற்றல் உள்ளவன்
பொற்பதம் தொழும் அடியார்க்கு நல்லவன்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்

அருணன் சந்திரன் அவன் அக்னி நேத்திரம்
அன்பர் அனைவரும் அகஸ்த்ய கோத்திரம்
வருண பாலகன் கொடை வைத்ய சாஸ்திரம்
வாழ்க வாழ்கவே அகஸ்தியர் வாழும் ஆஸ்ரமம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்

அம் அகஸ்தீசா
உம் அகஸ்தீசா
மம் அகஸ்தீசா
நம் அகஸ்தீசா
மம் அகஸ்தீசா
சிம் அகஸ்தீசா
வம் அகஸ்தீசா
யம் அகஸ்தீசா
ஓம் அகத்தீஸ்வராய
ஓம் அகத்தீஸ்வராய
ஓம் அகத்தீஸ்வராய
ஓம் அகத்தீஸ்வராய....   சிவாய நம ஓம்

சிவ மகத்துவம்

*பேரின்பம் நல்கும் எம்பெருமானே*  மாணிக்கவாசகர் சிவப்பரம்பொருளைக் கசிந்துருகப் பாடுகிறார்;  சிவனே இறைவன் எனப் போற்றிப் புகழ்ந்தேத்துகிறார்.  ...