வியாழன், 25 டிசம்பர், 2025

சிவ மகத்துவம்



*பேரின்பம் நல்கும் எம்பெருமானே* 


மாணிக்கவாசகர் சிவப்பரம்பொருளைக் கசிந்துருகப் பாடுகிறார்;  சிவனே இறைவன் எனப் போற்றிப் புகழ்ந்தேத்துகிறார். 


*ஈசன் அடி போற்றி!* 

*எந்தை அடி போற்றி!* 


தமக்குத் தந்தையும் தலைவனுமான சிவபெருமானே எல்லா உயிர்க்கும் தந்தையும் தலைவனும் ஆவான் எனத் தெளிவுபட எடுத்துரைக்கிறார். 


சிவனன்றிப் பிறதெய்வத்தை வணங்கி வழிபடுபவரைக் கண்டு அஞ்சுகிறார். 


உயிர்க்குச் சிவபெருமான் ஒருவனே கடவுள் என மணிவாசகர் ஓதியுணர்த்த காரணம் என்ன? 


நாம் (உயிர்) ஏன் சிவபெருமானை மட்டுமே கடவுளாகக் கொள்ள வேண்டும்? 


*ஏனெனில் சிவபெருமான் ஒருவனே உயிர்க்கு நீங்காத பேரின்பம் (முத்தி) நல்க வல்லவன்!* 


*ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!* 


சிவப்பரம்பொருள் நிலையான மெய்ப்பொருள்.


உயிரும் என்றும் உள்ள பொருள். 


அநாதி கேவலத்தில் ஆணவ அழுத்தத்தினால் உயிர் முழு அறியாமையில் இருந்தது.  அறியாமையைத் தவிர வேறொன்றும் துளியும் அறிய முடியாத நிலை. 


என்று உயிரோ அன்றே ஆணவம் உடனிருந்ததால் உயிர்க்கு ஏற்பட்ட துன்பநிலை. 


*பேராது நின்ற பெருங்கருணை பேராறே!* 


இயற்கையிலேயே அறிவு, இச்சை, செயல் உடைய உயிர் அறியாமையில் கிடக்கும் நிலைகண்டு சிவபெருமான் அவ் உயிர் அறிவு பெற்று அறியாமை நீங்கும் வண்ணம் அவ் உயிர்க்காக ஐந்தொழில் ஆற்றுகிறான். 


*ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் *அருள்தருவாய்* 

*போக்குவாய் என்னைப்* *புகுவிப்பாய் நின்தொழும்பின்* 


உயிர்க்கு அறிவு ஏற்பட வேண்டுமாயின் அஃது செயல்பட வேண்டும்.  உயிர் செயல்பட அதற்குண்டான நிலை பெற வேண்டும்.


பெருமான் உயிர்க்குத் தனு, கரணம், புவனம், போகம் ஆகியவற்றைப் படைத்துக் கொடுக்கின்றான். 


அவன் படைத்தவற்றைக் கொண்டு உயிர் குறிப்பிட்ட காலம் செயல்படும் வரை காத்தபடி இருக்கின்றான். 


இவ்வாறாக உயிருக்காகப் படைத்துக் காத்தவற்றை  அழிக்கின்றான். 


படைக்கப்பட்ட சடப்பொருளைக் கொண்டு வினை நுகரும் உயிர் பக்குவம் பெறும் பொருட்டுப் பெருமான் உயிரை உலகியலில் ஆழ்த்தச் செய்வான். தன்னை உயிர்க்குக் காட்டாது/ உயிர் உணரா வண்ணம் மறைத்துக் கொள்வான். இஃது அவனின் மறைத்தல் தொழில்.


இவ்வாறாகப் பல பிறப்புகளில் பக்குவப்பட்டுப் பெருமான் திருவருள் சார்ந்த உயிர்க்கு நீங்காதப் பேரின்பமாகிய திருவடி இன்பத்தை (முத்தி) நல்குவான். இஃது பெருமானின் அருளல் தொழிலாகும். 


இவ்வாறாக உயிர் பொருட்டுச் சிவபெருமான் ஆற்றுகின்ற ஐந்தொழிலும் அருட்செயலே! 


அநாதியே கேவலத்தில் ஆணவப் பிடியில் அல்லலுற்ற உயிரைச் சகலநிலைக்குக் (உயிரின் தற்போதைய நிலை) கொண்டு வந்த பெருமான்,  உயிர்களைச் சுத்த நிலை (உயிர் திருவருள் சார்ந்த நிலை) வரை இட்டுச் செல்லாமலா போவான்? 


*உயிர் பேரின்ப நிலை எய்தும் வரை பெருமான்* *உயிர்க்கு இடையறாது* *ஐந்தொழில் ஆற்றிய வண்ணமே இருப்பான்!* 


*எல்லா உயிர்க்கும் முத்தி நிச்சயம் உண்டு!!!* 


உயிர்க்கு இத்தகு பெருங்கருணையும் பேரிரக்கமும் காட்டும் பெருமானைக் கடவுளாகக் கொள்ளாமல் மற்றோர் தெய்வத்தைக் கடவுளாகக் கொள்வது எங்ஙனம் பொருந்தும்??!


*ஏகபெருமானை எண்ணத்தில் இருத்தி* *பிறவிப் பெருங்கடல் நீந்தி* *பேரின்பமென்னும்  கரை சேர்வோம்!!!* 


*அவனியில் புகுந்தெம்மை ஆட்கொள்ள வல்லாய் ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே!* 


கருதற்கினிய பெருங்கருணையாளனைக் கண்டு மகிழ கதிரவன் காரிருளைப் போக்கிவிட்டான்!


திருப்பள்ளியெழுச்சி 


பாடல் 10


*புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள்நாம்* 

*போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி* 

*சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று* *நோக்கித்* 

*திருப்பெருந் துறையுறை* *வாய்திரு மாலாம்* 

*அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்* 

*படவும்நின் அலர்ந்தமெய்க்*

*கருணையும் நீயும்* 

*அவனியிற் புகுந்தெமை* *ஆட்கொள்ள வல்லாய்* 

*ஆரமுதே பள்ளி* *எழுந்தருளாயே.* 


பொழிப்புரை :


திருப்பெருந்துறையில் வீற்றிருப்பவனே! திருமாலாகிய அவன், பூமியில் சென்று பிறவாமையினால் யாம் வீணாகவே நாளைக் கழிக்கின்றோம்; இந்தப் பூமியானது சிவபெருமான் நாம் உய்யும்படி அடிமை கொள்கின்ற இடமென்று பார்த்து விருப்பத்தை அடையவும், பிரமன் ஆசைப்படவும் அர்ச்சிக்கவும் உனது பரந்த உண்மையான திருவருட்சத்தியும், நீயுமாகப் பூமியில் எழுந்தருளி வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனே! அருமையான அமுதம் போன்றவனே! திருப்பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.


சிவசிவ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவ மகத்துவம்

*பேரின்பம் நல்கும் எம்பெருமானே*  மாணிக்கவாசகர் சிவப்பரம்பொருளைக் கசிந்துருகப் பாடுகிறார்;  சிவனே இறைவன் எனப் போற்றிப் புகழ்ந்தேத்துகிறார்.  ...