*நற்றுணை நல்கும் நாதனே எம்பெருமானே*
இறைவன் யாரென உணராத உயிர்க்கு அநாதி கேவலம் முதல் ஆனந்தம் நல்கும் சுத்த நிலை வரை உடனிருந்து துணை நல்குபவன் நம்பெருமான்.
*அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை* *அகன்ஞாலத் தகத்துள் தோன்றி*
*வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு*
*வான்புலன்கள் அகத்தடக்கி* *மடவாரோடும்*
*பொருந்தணைமேல்* *வரும்பயனைப் போக மாற்றிப் பொதுநீக்கித்* *தனைநினைய வல்லோர்க் கென்றும்*
*பெருந்துணையைப் பெரும்பற்றப்* *புலியூரானைப்*
*பேசாத நாளெல்லாம்* *பிறவா நாளே* . 6.1.5
.
துணை நிற்பவன் ஈசனென துளியும் அறியாத உயிர்க்கு என்றென்றும் எந்நேரமும் இணைந்தே இருப்பவன் இறைவன்.
ஆனால் உயிரோ பெருமானை உணரும் வழி அறியாது அவனை உணர்வுக்கு எட்டாத தூரத்தில் இருப்பவனாகக் கருதும்.
_"புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க"_ 8.1
உயிரை நன்குணர்ந்தவன் இறைவன்.
இறைவன் என்னுள் உளன்; அவன் தான் என்னை வழிகாட்டி வழிநடத்தி வருகிறான் என்னும் உண்மையைச் சற்றும் அறியாதது/உணராதது உயிர்.
*தரையை அறியாது தாமே திரிவார்; புரையை உணரா புவி.*
திருவருட்பயன், குறள் 36
உற்றவன் உடனிருந்தும் உயிர் உணராதது ஏன்?
அநாதி கேவலத்தில் முழு அறியாமையில் ஆழ்ந்திருந்த உயிர்க்குத் தனு, கரணம், புவனம், போகம் ஆகியவற்றைத் தந்தருளினான்.
உயிர், தந்தவனை நினையாது தாமே பெற்றதாகக் கருதி உடல், உலகம் ஆகியவை தனக்குத் துணையெனப் பற்றி வாழ்கிறது. கருவி கரணங்கள் வழியே உணரப்படுகின்ற சுற்றம், உலகியல் சிந்தனைகள் ஆகியவை உயிருக்குப் பெருந்துணையாகக் காட்சியளிக்கும். அது வழியே உயிரும் செல்லும்.
இவ்வாறாக உயிர் தனக்குத் துணையென எண்ணிய அனைத்துப் படைப்புகளும் உரிய காலத்தில் அழியும். உயிர் மீண்டும் செயலற்ற நிலைக்குத் திரும்பும். மீண்டும் வினைக்கேற்ப பிறப்புப் பெறும். இதுவே உயிரின் நெடிய தொடர்ப் பயணம்!!
மெய்யறிவு சார்ந்த உயிர்க்கு மேற்கண்ட அனைத்தும் சடப்பொருள் என்ற உண்மை விளங்கும். விளங்குங்கால் அச்சடப் பொருளை விட்டு நீங்கும்.
இச்சமயம் தானே அறிவுள்ள பொருள் என்ற சிந்தனை உயிர்க்கு மேலோங்கும்.
இந்நிலை உயிர்க்குப் பாசஞானம் நீங்கி பசுஞானம் தோன்றிய நிலை.
தானே சடப்பொருளைச் சென்று சேரவில்லை; அச்சடப்பொருளும் எம்மை நாடி வரவில்லை என்ற சிந்தனை உயிர்க்குத் தோன்றும்.
அவ்வாறாக சிந்திக்குங்கால் தனு முதலானவற்றைத் தனக்குச் சேர்த்து வைத்த ஒருவன் இருந்திருக்க வேண்டும் என்ற தெளிவு உயிர்க்கு ஏற்படும்.
சேர்த்தவன் செம்பொருளாம் சிவபெருமான் என்னும் தெளிவு உயிர்க்குப் பிறக்கும். இந்நிலை உயிர் பசுஞானம் நீங்கி பதிஞானம் பெறும்.
இந்நிலையில் இறைவனன்றி வேறொரு துணை எமக்கு இல்லை என்ற உறுதியான உண்மை உயிர்க்குத் தெற்றென விளங்கும்.
இஃது உயிர்க்கு நிறைவான திருவருள் சார்ந்த சுத்த நிலை ஆகும்.
*உயிர் உணராத போதும் உயிர்க்குப்* *பெருந்துணை நல்கி வரும் பெருமானை*
*என்னவென்று புகழ்வது/ எங்ஙனம் போற்றுவது??!* சிவசிவ
பிறப்பு பலவானாலும் பெருமான் பெருந்துணை உயிர்க்கு என்றென்றும் வழுவாது இருக்கும் என அருளாளர் ஐயமின்றி உரைக்கின்றனர்.
நாவரசரின் நற்றமிழ் வாக்கு நவில்தற்கு இனியது!
*நற்றுணையாவது நமச்சிவாயவே*
உயிர்க்கு நல்ல துணையாவது நம்பெருமானே!!! இனி வருத்தம் எதற்கு? நலிவு வேண்டாமே??!
அருந்துணை நல்கும் அரனைக் காண அவனியில் ஆதவன் அமைவாய் தோன்றி விட்டான்.
*பெருந்துணையாய் நிற்கும் பெருமானின் பெருஞ்செயலைப்* *பாரார் அறியும் வண்ணம் பாடிப் பிறவிப்பயன் காண்போமே!!!*
திருவெம்பாவை
பாடல் 14
*காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்*
*கோதை குழலாட வண்டின் குழாமாடச்*
*சீதப் புனலாடிச் சிற்றம்* *பலம்பாடி*
*வேதப் பொருள்பாடி* *அப்பொருளா மாபாடிச்*
*சோதி திறம்பாடிச்* *சூழ்கொன்றைத் தார்பாடி*
*ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்*
*பேதித்து நம்மை வளர்த்தெடுத்த* *பெய்வளைதன்*
*பாதத் திறம்பாடி* *ஆடேலோர் எம்பாவாய்* .
பொழிப்புரை :
காதில் பொருந்திய குழை அசையவும், பசிய பொன்னால் ஆகிய அணிகள் அசையவும் பூமாலை கூந்தலில் இருந்து அசையவும் மாலையைச் சுற்றும் வண்டின் கூட்டம் அசையவும், குளிர்ச்சியாகிய நீரில் மூழ்கித் தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி, வேதப் பொருளாகிய சிவபிரானைப் பாடி, அப்பொருள் நமக்கு ஆகும் வண்ணம் பாடிப் பரஞ்சோதியின் தன்மையைப் பாடி, இறைவன் சென்னியில் சூழ்ந்துள்ள கொன்றையைப் பாடி, அவன் ஆதியான தன்மையைப் பாடி, அவன் அந்தமான முறையைப் பாடி, பக்குவமுறைகட்கு ஏற்ப வேறுபடுத்தி, நம்மை ஆக்கமாய வேறுபாடுறுத்தி உயர்த்திய, வளையலை உடைய உமாதேவியின் திருவடியின் தன்மையைப் பாடி ஆடுவாயாக.
சிவசிவ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக