ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

வணக்கம் அகத்தியர் அடியார்களுக்கும் அனைத்துசித்தர்   அடியார்களுக்கும்அனந்த கோடி நமஸ்காரம் .காலதீபிகம் (காலத்தைபற்றியவெளிச்சம் )பலஆராய்ச்சிகள்கட்டுரைகள் ஆன்மிக தகவல்கள், இசை ,விவசாயம் ,மற்றும் பொது தகவல்களை  தரும் ஒரு தகவல் சேவையாக மட்டும் பயன்பட்டு வந்தது .இது நாள் வரையில் பலவிதமான வேலை பளுவினாலும் அகத்தியரின் கட்டளை படி இணையத்தில் கவணம் செலுத்த முடியவில்லை

காலத்தின் ஓட்டத்தோடு பயணிக்க அகத்தியரின் ஆசி யும் உத்தரவும்கிட்டியதால் நிகழும் துர்முகி ஆண்டு சித்திரை மாதம் 11ம் (24-4-2016) முதல் அகத்தியரின் ஆணைப்படியும் பிருகுவின் ஆசியாலும் காலதீபிகம் இனி அறிய சித்தர்கள் வழியில் ஸ்ரீ அகத்தியர்  நந்தி பிருகு ஜீவ நாடி நிலையம் சார்பில் சித்தர்கள் சார்ந்த தகவல்களும் பாரம்பரிய ஆகமமும் நாடி தகவல்களை பகிரும் ஒரு தளமாக இருக்கும்

என் பார்வைக்கு அப்பாற்பட்ட தகலவல்கள் இனி  காலதீபிகத்தில் வராது


காலதீபிகம் பிருகு முனிவரின் ஆசிரமம் தொடர்பானது இல்லை .இதில் பதியப்படும் அனைத்து தகவல்களும் பிருகு ஜீவ நாடி நிலையத்தின் பதிவாகும் .இதுசம்பந்தம்மான அனைத்து தகவல் தொடர்பிற்கு bjnaadi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை பயன் கொள்ளலாம் .

தங்களின் எந்த வித ஆலோசனையும் ஏற்றுகொள்ளபடும் .-----------

ஓம் அகத்தீசாய நமக -ஓம் பிருகு தேவாய நமக -ஓம்நந்தி தேவாய நமக
என்றும் அகத்தியர் அடியான் -இராமையா-தாமரைசெல்வன்
          இன்பமே சூழ்க ---------------


வெள்ளி, 22 ஏப்ரல், 2016


அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்
ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்
கரியதோர் எழுத்தையுன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்
தோஷ தோஷ பாவமாயை தூரதூர ஓடவே.


கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்
கலைகள் நூல்கள் ஞானமுங் கருத்தில்வந்து உதிக்கவே
பெரியபேர்கள் சிறிய பேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே.


ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.


ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.


உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தினால் இருத்தியே கபாலமேற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும்
அருள் தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே.


வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருவன் நத்தினால்
விடுவனோ அவனை முன்னர் வெட்டவேணும் என்பனே
நடுவன்வந்து அழைத்தபோது நாறுமிந்த நல்லுடல்
சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டி கைக் கொடுப்பரே.


என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்தஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான்உ ணர்ந்து கொண்டெனே.


நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள்நீ உனக்குள் நான் இருக்குமாற தெங்ஙனே.


மண்ணும்நீ விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும்நீ
எண்ணும்நீ எழுத்தும்நீ இசைந்தபண் எழுத்தும் நீ
கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவை நீ
நண்ணுநீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய்


அரியுமல்ல அயனுமல்ல அப்புறத்தில்அப்புறம்
கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள்
துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.


அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராம என்னும் நாமமே.


கதாவுபஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம்
இதாம்இதாம் இதல்லவென்று வைத்துழலும் ஏழைகளாள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் இராம ராம ராமஎன்னும் நாமமே.


நானதேது நீயதேது நடுவில் நின்றது ஏதடா
கோனதேது குருவதேது கூறிடுங் குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராமராம ராமஎன்ற நாமமே.


சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ
மாத்திரைப் போதும்முளே மறிந்து நோக்கவல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள்ஏது சத்திமுத்தி சித்தியே.


தூரம்தூரம் தூரம்என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும்விண்ணும் எங்குமாய்ப் பரந்தஇப் பராபரம்
ஊருநாடு காடுதேடி உழன்றுதேடும் ஊமைகாள்
நேரதாக உம்முளே அறிந்துஉணர்ந்து கொள்ளுமே.


நாலுவேதம் ஒதுவீர் ஞானபாத அறிகிலீர்
பாலுள்நெய்கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன்என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே.


வித்தில்லாத சம்பிரதாயம் மேலுமில்லை கீழுமில்லை
தச்சில்லாத மாளிகை சமைந்தவாறெ தெங்ஙனே?
பெற்ற தாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்
சித்தில்லாத போதுசீவன் இல்லைஇல்லை இல்லையே.


அஞ்சுமூணு மெட்டதாம் அநாதியான மந்திரம்
நெஞ்சிலே நினைந்துகொண்டு நூறுருச் செபிப்பிரேல்
பஞ்சமான பாதகங்கள் நூறுகோடி செய்யுனும்
பஞ்சுபோல் பறக்குமென்று நான்மறைகள் பன்னுமே.


அண்டவாசல் ஆயிரம் ப்ரசண்டவாசல் ஆயிரம்
ஆறிரண்டு நூறுகோடி ஆனவாசல் ஆயிரம்
இந்த வாசல் ஏழைவாசல் ஏகபோக மானவாசல்
எம்பிரான் இருக்கும் வாசல் யாவர்காண வல்லரே?


சாமம்நாலு வேதமும் சகலசாத் திரங்களும்
சேமமாக வோதினும் சிவனைநீர் அறிகிலீர்
காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின்
ஊமையான காயமாய் இருப்பன் எங் கள்ஈசனே.


சங்கிரண்டு தாரையொன்று சன்னல்பின்னல் ஆகையால்
மங்கிமாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை
சங்கிரண்டை யும்தவிர்த்து தாரையூத வல்லிரேல்
கொங்கை மங்கை பங்கரோடு கூடிவாழல் ஆகுமே.


தங்கம்ஒன்று ரூபம் வேறு தன்மையான வாறுபோல்
செங்கண் மாலும் ஈசனும் சிறந்திருந்தது எம்முளே
விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்றநாமம் நாமம்இந்த நாமமே.


அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தில் ஓரெழுத்து அறிந்த கூறவல்லிரேல்
அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே.


அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே அனாதியான அஞ்சுமே
பிஞ்சுபிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுறீர்
நெஞ்சில்அஞ்சு கொண்டு நீர் நின்று தொக்க வல்லிரேல்
அஞ்சும்இல்லை ஆறும்இல்லை அனாதியானது ஒன்றுமே.


நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர்
வாழவேணு மென்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே
காலன்ஓலை வந்தபோது கையகன்று நிற்பிரே
ஆலமுண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே.


வீடெடுத்து வேள்விசெய்து மெய்யினோடு பொய்யு மாய்
மாடுமக்கள் பெண்டிர்சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள்
நாடுபெற்ற நடுவர்கையில் ஓலைவந்து அழைத்திடில்
ஓடுபெற்ற அவ்விலை பெறாதுகாண் இவ்வுடலமே.


ஓடமுள்ள போதெலாம் ஓடியே உலாவலாம்
ஓடமுள்ள போதெலாம் உறுதிபண்ணிக் கொள்ளலாம்
ஓடம் உடைந்தபோது ஒப்பிலாத வெளியிலே
ஆடுமில்லை கோலுமில்லை யாருமில்லை யானதே.


அண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியே
பெண்ணும்ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணில் ஆணின் சுக்கிலம் கருவில் ஓங்கும் நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே.


பண்டுநான் பறித்துஎறிந்த பன்மலர்கள் எத்தனை
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
மிண்டராய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை.


அண்டர்கோன் இருப்பிடம் அறிந்தஉணர்ந்த ஞானிகாள்
பண்டறிந்த பான்மைதன்னை யாரறிய வல்லரே
விண்டவேத பொருளையன்றி வேறுகூற வகையிலா
கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்பதில்லையே.


நெருப்பை மூட்டி நெய்யைவிட்டு நித்தம்நித்தம் நீரிலே
விருப்பமொடு நீர்குளிக்கும் வேதவாக்கியம் கேளுமின்
நெருப்பும்நீரும் உம்முளே நினைத்துகூற வல்லிரேல்
கருக்கம்அற்ற சோதியைத் தொடர்ந்துகூடல் ஆகுமே.


பாட்டிலாத பரமனைப் பரலோக நாதனை
நாட்டிலாத நாதனை நாரிபங்கர் பாகனை
கூட்டி மெள்ள வாய்புதைத்து குணுகுணுத்த மந்திரம்
வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடாக முடிந்ததே.


செய்யதெங்கி இளநீர் சேர்ந்தகார ணங்கள் போல்
ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர்முன்னம் வாய்திறப்ப தில்லையே.


மாறுபட்ட மணிதுலக்கி வண்டின்எச்சில் கொண்டு போய்
ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே
மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும்
கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்ததே.


கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.


செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலுஞ் சிவனிருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்துநீர் உம்மை நீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே.


பூசை பூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ அனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ இன்னதென்று இயம்புமே.


இருக்கநாலு வேதமும் எழுத்தைஅற வோதிலும்
பெருக்கநீறு பூசினும் பிதற்றிலும் பிரானிரான்
உருக்கிநெஞ்சை உட்கலந்து உண்மைகூற வல்லிரேல்
சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்துகூடல் ஆகுமே.


கலத்தில்வார்த்து வைத்தநீர் கடுத்ததீ முடுக்கினால்
கலத்திலே கரந்ததோ கடுத்ததீக் குடித்ததோ
நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ
மனத்தின் மாயை நீக்கியே மனத்துளே கரந்ததே.


பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கம்இட் டிருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே.


வாயிலே குடித்தநீரை எச்சிலென்று சொல்லுறீர்
வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ
வாயில்எச்சில் போகவென்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயில்எச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே.


ஓதுகின்ற வேதம்எச்சில் உள்ளமந் திரங்கள்எச்சில்
மோதகங்க ளானதுஎச்சில் பூதலங்கள் ஏழும்எச்சில்
மாதிருந்த விந்தும்எச்சில் மதியும்எச்சில் ஒளியும்எச்சில்
ஏதில்எச்சில் இல்லதில்லை யில்லையில்லை யில்லையே.


பிறப்பதற்கு முன்னெலாம் இருக்குமாற தெங்ஙனே
பிறந்துமண் ணிறந்துபோய் இருக்குமாற தெங்ஙனே
குறித்துநீர் சொலாவிடில் குறிப்பில்லாத மாந்தரே
அறுப்பனே செவிஇரண்டும் அஞ்செழுத்து வாளினால்.


அம்பலத்தை அம்புகொண்டுஅசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும்வந்து அணுகுமோ
செம்பொன்அம்ப லத்துளே தெளிந்ததே சிவாயமே.


சித்தமேது சிந்தையேது சிவனேது சித்தரே
சத்தியேது சம்புவேது சாதிபேதம் அற்றது
முத்தியேது மூலமேது மூலமந் திரங்கள்ஏது
வித்திலாத வித்திலே இன்னதென்று இயம்புமே.


சித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம்
சத்தியற்று சம்புவற்று சாதிபேத மற்றுநன்
முத்தியற்று மூலமற்று மூலமந்தி ரங்களும்
வித்தைஇத்தை ஈன்றவித்தில் விளைந்ததே சிவாயமே.


சாதியாவது ஏதடா சலந்திரண்ட நீரெலோ
பூதவாசல் ஒன்றலோ பூதமைந்தும் ஒன்றலோ
காதில்வாளி காரைகம்பி பாடகம்பொன் ஒன்றலோ
சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே.


கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணை மோர்புகா
உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா
விரிந்த பூஉதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லையில்லை இல்லையே.


தறையினில் கிடந்தபோ தன்றுதூமை என்றிலீர்
துறையறிந்து நீர்குளித்த தன்றுதூமை என்றிலீர்
பறையறைந்து நீர்பிறந்த தன்று தூமை என்றிலீர்
புரையிலாத ஈசரோடு பொருந்துமாறது எங்ஙனே.


தூமைதூமை என்றுளே துவண்டலையும் ஏழைகாள்
தூமையான பெண்ணிருக்க தூமைபோனது எவ்விடம்
ஆமைபோல மூழ்கிவந் தனேகவேதம் ஓதுறீர்
தூமையுந் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே.

கொங்கணச் சித்தர் பாடல்
விநாயகர் துதி
கல்விநிறை வாலைப்பெண் காதலியென் றோதுகின்ற
செல்வியின் மேற் கும்மிதனைச் செப்புதற்கே - நல்விசய
நாதனின்சொல் வேதனஞ்சு போதன்மிஞ்சி மானகஞ்ச
பாதம் வஞ்ச நெஞ்சினில்வைப் போம்.
கும்மி
சத்தி சடாதரி வாலைப்பெண் ணாமந்த
உத்தமி மேற் கும்மிப் பாட்டுரைக்க
வித்தைக் குதவிய வொற்றைக்கொம் பாம்வாலை
சித்தி விநாயகன் காப்பாமே.
சரஸ்வதி துதி
சித்தர்கள் போற்றிய வாலைப் பெண் ணாமந்த
சத்தியின் மேற்கும்மிப் பாட்டுரைக்கத்
தத்தமி தோமென ஆடுஞ் சரஸ்வதி
பத்தினி பொற்பதங் காப்பாமே.
சிவபெருமான் துதி
எங்கும் நிறைந்தவள் வாலைப்பெண் ணாம்மாலின்
தங்கையின் மேற்கும்மி பாடுதற்குக்
கங்கை யணிசிவ சம்புவாஞ் சற்குரு
பங்கயப் பொற்பதங் காப்பாமே.
சுப்பிரமணியர் துதி
ஞானப்பெண் ணாமருள் சோதிப்பெண் ணாமாதி
வாலைப்பெண் மேற்கும்மி பாடுதற்கு
மானைப் பெண் ணாக்கிய வள்ளிக் கிசைந்திடும்
மால்முரு கேசனுங் காப்பாமே.
விஷ்ணு துதி
ஆண்டிப்பெண் ணாம்ராச பாண்டிப்பெண் ணாம்வாலை
அம்பிகை மேற்கும்மி பாடுதற்குக்
காண்டீப னாம்பணி பூண்டவன் வைகுந்தம்
ஆண்டவன் பொற்பதங் காப்பாமே.
நந்தீசர் துதி
அந்தரி சுந்தரி வாலைப்பெண் ணாமந்த
அம்பிகை மேற்கும்மி பாடுதற்குச்
சிந்தையில் முந்திநல் விந்தையாய் வந்திடும்
நந்தீசர் பொற்பதங் காப்பாமே.
நூல்
தில்லையில் முல்லையி லெல்லையு ளாடிய
வல்லவள் வாலைப் பெண் மீதினிலே
சல்லாபக் கும்மித் தமிழ்பா டவரும்
தொல்லை வினை போக்கும் வாலைப் பெண்ணே!
மாதா பிதாகூட இல்லாம லேவெளி
மண்ணும் விண்ணுமுண்டு பண்ணவென்று
பேதைப்பெண் ணாமுதல் வாலைப்பெண் ணாளென்று
புகுந்தா ளிந்தப் புவியடக்கம்
வேதமும் பூதமுண் டானது வும்வெளி
விஞ்ஞான சாத்திர மானதுவும்
நாதமுங் கீதமுண் டானது வும்வழி
நான் சொல்லக் கேளடி வாலைப் பெண்ணே!
முந்தச் செகங்களுண் டானது வும்முதல்
தெய்வமுந் தேவருண் டானதுவும்
விந்தையாய் வாலையுண் டானது வும்ஞான
விளக்கம் பாரடி வாலைப் பெண்ணே!
அரிக்கு முந்தின தவ்வெழுத்தாம் பின்னும்
அரிக்குள் நின்றதும் அஞ்செழுத்தாம்
தரிக்கும் முந்தின தஞ்செழுத்தாம் வாசி
பரிக்குள் நின்றது மஞ்செழுத்தாம்.
ஆதியி லைத்தெழுத் தாயினாள் வாலைப்பெண்
ஐந்தெழுத் துமென்று பேரானாள்
நாதியி னூமை யெழுத்திவள் தானல்ல
ஞான வகையிவள் தானானாள்.
ஊமை யெழுத்தே யுடலாச்சு மற்றும்
ஓமென் றெழுத்தே யுயிராச்சு
ஆமிந் தெழுத்தை யறிந்துகொண் டுவிளை
யாடிக் கும்மி யடியுங்கடி.
செகம்ப டைத்ததும் அஞ்செழுத்தாம் பின்னும்
சீவன் படைத்ததும் அஞ்செழுத்தாம்
உகமு டிந்தது மஞ்செழுத் தாம்பின்னும்
உற்பன மானது மஞ்செழுத்தாம்.
சாத்திரம் பார்த்தாலுந் தானுமென்ன வேதந்
தானுமே பார்த்திருந் தாலுமென்ன?
சூத்திரம் பார்த்தல்லோ ஆளவேணு மஞ்சு
சொல்லை யறிந்தல்லோ காணவேணும்
காணாது கிட்டாதே எட்டாதே அஞ்சில்
காரிய மில்லையென் றேநினைத்தால்
காணாதுங் காணலா மஞ்செழுத் தாலதில்
காரிய முண்டு தியானஞ் செய்தால்.
ஆயனு மைந்தா மெழுத்துக்குள் ளேயறி
வாயனு மைந்தா மெழுத்துக்குள்ளே
வாயனு மைந்தா மெழுத்துக்குள் ளேயிந்த
வாலையு மைந்தா மெழுத்துக்குள்ளே.
அஞ்செழுத் தானதும் எட்டெழுத் தாம்பின்னும்
ஐம்பத்தோர் அட்சரந் தானாச்சு
நெஞ்செழுத் தாலே நினையா மலந்த
நிசந்தெ ரியுமோ வாலைப் பெண்ணே
ஏய்க்கு தேய்க்கு தஞ்செழுத் துவகை
எட்டிப் பிடித்துக் கொளிரண்டெழுத்தை
நோக்கிக்கொள் வாசியை மேலாக வாசி
நிலையைப் பாரடி வாலைப் பெண்ணே!
சிதம்பர சக்கரந் தானறி வாரிந்தச்
சீமையி லுள்ள பெரியோர்கள்
சிதம்பர சக்கர மென்றால் அதற்குள்ளே
தெய்வத்தை யல்லோ அறியவேணும்.
மனமு மதியு மில்லாவி டில்வழி
மாறுதல் சொல்லியே யென்ன செய்வாள்
மனமு றுதியும் வைக்கவே ணும் பின்னும்
வாலை கிருபையுண் டாகவேணும்.
இனிவெ ளியினிற் சொல்லா தேயெழில்
தீமட்டு திந்த வரி விழிக்கே
கனிமொ ழிச்சியீர் வாருங்கடி கொஞ்சங்
கருவைச் சொல்லுவேன் கேளுங்கடி.
ஊத்தைச் சடலமென் றெண்ணா தேயிதை
உப்பிட்ட பாண்டமென் றெண்ணாதே;
பார்த்த பேருக்கே ஊத்தையில் லையிதைப்
பார்த்துக்கொள் உன்ற னுடலுக்குள்ளே.
உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்
வைத்த விளக்கும் எரியுதடி;
அச்சுள்ள விளக்கு வாலையடிஅவி
யாம லெரியுது வாலைப் பெண்ணே!
எரியு தேஅறு வீட்டினி லேயதில்
எண்ணெயில் லையமிழ் தண்ணீரில்லை;
தெரியுது போக வழியுமில் லைபாதை
சிக்குது சிக்குது வாலைப் பெண்ணே!
சிலம்பொ லியென்னக் கேட்டுமடிமெத்த
சிக்குள்ள பாதை துடுக்கமடி;
வலம்புரி யச்சங்க மூது மடிமேலே
வாசியைப் பாரடி வாலைப் பெண்ணே!
வாசிப் பழக்க மறியவே ணுமற்று
மண்டல வீடுகள் கட்டவேணும்;
நாசி வழிக்கொண்டு யோகமம் வாசியும்
நாட்டத்தைப் பாரடி வாலைப் பெண்ணே!
முச்சுட ரான விளக்கினுள் ளேமூல
மண்டல வாசி வழக்கத்திலே
எச்சுடராகி யந்தச் சுடர்வாலை
இவள் விட வேறில்லை வாலைப் பெண்ணே!
சூடாமல் வாலை யிருக்கிற தும்பரி
சித்த சிவனுக்குள் ளானதால்
வீடாமல் வாசிப் பழக்கத்தைப் பாருநாம்
மேல்வீடு காணலாம் வாலைப் பெண்ணே!
மேல்வீடு கண்டவன் பாணியடி விண்ணில்
விளக்கில் நின்றவன் வாணியடி
தாய்வீடு கண்டவன் ஞானியடிபரி
தாண்டிக் கொண்டான்பட் டாணியடி.
அத்தியி லேகரம் பத்தியி லேமனம்
புத்தியி லேநடு மத்தியிலே
நெற்றி சதாசிவ மென்றுசொன் னேனுன்றன்
நிலைமையைப் பாரடி வாலைப் பெண்ணே!
அழுத்தி லேசொல்லஞ் செழுத்தி லேநானும்
வழுத்தி னேன்ஞானப் பழத்திலே
கழுத்தி லேமயேஸ் வரனு முண்டுகண்
கண்டு பாரடி வாலைப் பெண்ணே!
அஞ்சிலே பிஞ்சிலே வஞ்சிய ரேநிதம்
கொஞ்சி விளையாடும் வஞ்சியரே!
நெஞ்சிலே ருத்திரன் சூழிருப் பானவன்
நேருட னாமடி வாலைப் பெண்ணே!
தொந்தியி லேநடுப் பந்தியி லேதிடச்
சிந்தையிலே முந்தி யுன்றனுடன்
உந்தியில் விண்ணுவுந் தாமிருப் பாரிதை
உண்மையாய்ப் பாரடி வாலைப் பெண்ணே!
ஆலத்தி லேயிந்த ஞாலத்தி லேவருங்
காலத்தி லேயனு கூலத்திலே
மூலத்தி லேப்ரமன் தானிருந் துவாசி
முடுக்கிறான் பிண்டம் பிடிக்கிறானே.
தேருமுண்டு ஐந்நூறும் ஆணியுண் டேஅதில்
தேவரு முண்டுசங் கீதமுண்டே
ஆருண்டு பாரடி வாலைத் தெய் வம்மதில்
அடக்கந் தானடி வாலைப் பெண்ணே!
ஒன்பது வாயில்கொள் கோட்டையுண் டேஅதில்
உள்ளே நிலைக்கார ரஞ்சுபேராம்;
அன்புட னேபரி காரர்க ளாறுபேர்
அடக்கந் தானடி வாலைப் பெண்ணே!
இந்த விதத்திலே தேகத்தி லேதெய்வம்
இருக்கையில் புத்திக்க றிக்கையினால்
சந்தோட வாலையைப் பாராமல் மனிதர்
சாகிறதேதடி வாலைப் பெண்ணே!
நகார திட்டிப்பே ஆன தினால் வீடு
வான வகார நயமாச்சு;
உகார முச்சி சிரசாச் சேஇதை
உற்றுப் பாரடி வாலைப் பெண்ணே!
வகார மானதே ஓசையாச் சேஅந்த
மகார மானது கர்ப்பமாச்சே;
சிகார மானது மாய்கையாச் சேஇதைத்
தெளிந்து பாரடி வாலைப் பெண்ணே!
ஓமென்ற அட்சரந் தானுமுண் டதற்குள்
ஊமை யெழுத்து மிருக்குதடி;
நாமிந்தெ ழுத்தை யறிந்து கொண் டோம்வினை
நாடிப் பாரடி வாலைப் பெண்ணே!
கட்டாத காளையைக் கட்டவே ணுமாசை
வெட்டவே ணும்வாசி யொட்டவேணும்
எட்டாத கொம்பை வளைக்கவே ணுங்காய
மென்றைக்கி ருக்குமோ வாலைப் பெண்ணே!
இருந்த மார்க்கமாய்த் தானிருந்து வாசி
ஏற்காம லேதான டக்கவேணும்;
திரிந்தே ஓடி யலைந்துவெந் துதேகம்
இறந்து போச்சுதே வாலைப் பெண்ணே!
பூத்த மலராலே பிஞ்சுமுண்டே அதில்
பூவில்லாப் பிஞ்சும் அனேகமுண்டு
மூத்த மகனாலே வாழ்வுமுண் டுமற்ற
மூன்றுபே ராலே அழிவுமுண்டு!
கற்புள்ள மாதர் குலம் வாழ்க நின்ற
கற்பை யளித்தவ ரேவாழ்க!
சிற்பர னைப்போற்றிக் கும்மிய டிகுரு
தற்பர னைப்போற்றிக் கும்மியடி.
அஞ்சி னிலேரண்டழிந்ததில் லையஞ்
சாறிலே யுநாலொ ழிந்ததில்லை;
பிஞ்சிலே பூவிலே துஞ்சுவ தாம்அது
பேணிப் போடலாம் வாலைப் பெண்ணே!
கையில்லாக் குட்டையன் கட்டிக்கிட் டானிரு
காலில்லா நெட்டையன் முட்டிக் கிட்டான்;
ஈயில்லாத் தேனெடுத் துண்டுவிட் டானது
இனிக்கு தில்லையே வாலைப்பெண்ணே!
மேலூரு கோட்டைக்கே ஆதர வாய்நன்றாய்
விளங்கு கன்னனூர்ப் பாதையிலே
காலூரு வம்பலம் விட்டத னாலது
கடுந டையடி வாலைப் பெண்ணே!
தொண்டையுள் முக்கோணக் கோட்டையி லேயிதில்
தொத்திக் கொடிமரம் நாட்டையிலே
சண்டைசெய் துவந்தே ஓடிப்போ னாள்கோட்டை
வெந்து தணலாச்சு வாலைப் பெண்ணே!
ஆசை வலைக்குள் அகப்பட்ட தும்வீட
அப்போதே வெந்தே அழிந்திட்டதும்
பாச வலைவந்து மூடிய தும்வாலை
பாதத்தைப் போற்றடி வாலைப் பெண்ணே!
அன்ன மிருக்குது மண்டபத் தில்விளை
யாடித் திரிந்ததே ஆண்புலியும்
இன்ன மிருக்குமே யஞ்சுகி ளியவை
எட்டிப் பிடிக்குமே மூன்று கிளி;
தோப்பிலே மாங்குயில் கூப்பிடு தேபுது
மாப்பிள்ளை தான் வந்து சாப்பிடவும்
ஏய்க்கு மிப்படி யஞ்சா றாந்தை
இருந்து விழிப்பது பாருங்கடி.
மீனு மிருக்குது தூரணி யிலிதை
மேய்ந்து திரியுங் கலசா வல்;
தேனு மிருக்குது போரையிலே யுண்ணத்
தெவிட்டு தில்லையே வாலைப் பெண்ணே!
காகமிருக்குது கொம்பிலே தான்கத
சாவ லிருக்குது தெம்பிலேதான்;
பார்க்க வெகுதூர மில்லை யிதுஞானம்
பார்த்ததால் தெரியுமே வாலைப் பெண்ணே!
கும்பிக் குளத்திலே யம்பல மாமந்தக்
குளக்க ருவூரில் சேறு மெத்த;
தெம்பி லிடைக்காட்டுப் பாதைக ளாய் வந்து
சேர்ந் தாராய்ந்துபார் வாலைப் பெண்ணே!
பண்டுமே ஆழக் கிணற்றுக்குள் ளேரண்டு
கெண்டை யிருந்து பகட்டுதடி;
கண்டிருந் துமந்தக் காக்கையு மேயஞ்சி
கழுகு கொன்றது பாருங்கடி!
ஆற்றிலே யஞ்சு முதலைய டியரும்
புற்றிலே ரண்டு கரடியடி;
கூற்றனு மூன்று குருடன டிபாசங்
கொண்டு பிடிக்கிறான் வாலைப் பெண்ணே!
முட்டை யிடுகு தொருபற வைமுட்டை
மோசம் பண்ணு தொருபறவை;
வட்டமிட் டாரூர் கண் ணியிலி ரண்டு
மானுந் தவிக்குது வாலைப் பெண்ணே!
அட்டமா வின்வட்டம் பொட்டலி லேரண்டு
அம்புலி நிற்குது தேர்மேலே;
திட்டமாய் வந்து அடிக்குதில் லைதேகம்
செந்தண லானதே வாலைப் பெண்ணே!
முக்கோண வட்டக் கிணற்றுக்குள் ளேமூல
மண்டல வாசிப் பழக்கத்திலே
அக்கோண வட்டச் சக்கரத் தில்வாலை
அமர்ந்தி ருக்கிறாள் வாலைப் பெண்ணே!
இரண்டு காலாலொரு கோபுர மாம்நெடு
நாளா யிருந்தே அமிழ்ந்து போகும்;
கண்டபோ துகோபு ரமிருக் கும்வாலை
காணவு மெட்டாள் நிலைக்கவொட்டாள்.
அஞ்சு பூதத்தை யுண்டுபண் ணிக் கூட்டில்
ஆறா தாரத்தை யுண்டு பண்ணிக்
கொஞ்ச பெண்ணாசை யுண்டு பண்ணி வாலை
கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள்.
காலனைக் காலா லுதைத்த வளாம்வாலை
ஆலகா லவிட முண்டவளாம்;
மாளாச் செகத்தைப் படைத்தவ ளாமிந்த
மானுடன் கோட்டை இடித்தவளாம்.
மாதாவாய் வந்தே அமுதந்தந் தாள்மனை
யாட்டியாய் வந்து சுகங்கொடுத்தாள்
ஆதர வாகிய தங்கையா னாள்நமக்
காசைக் கொழுந்தியு மாமியானாள்.
சிரித்து மெல்லப் புரமெரித் தாள்வாலை
செங்காட்டுச் செட்டியைத்தா னுதைத்தாள்;
ஒருத்தியாகவே சூரர்த மைவென்றாள்
ஒற்றையாய்க் கஞ்சனைக் கொன்று விட்டாள்.
இப்படி யல்லோ இவள் தொழி லாமிந்த
ஈனா மலடி கொடுஞ்சூலி;
மைப்படுங் கண்ணியர் கேளுங்கடி அந்த
வயசு வாலை திரிசூலி.
கத்தி பெரியதோ யுறைபெரி தோவிவள்
கண்ணு பெரிதோ முகம் பெரிதோ?
சத்தி பெரிதோ சிவம் பெரிதோ நீதான்
சற்றே சொல்லடி வாலைப் பெண்ணே!
அன்னம் பெரிதல்லால் தண்ணீர் பெரிதல்ல
அப்படி வாலை பெரிதானால்
பொன்னு பெரிதல்லால் வெள்ளி பெரிதல்ல
பொய்யாது சொல்கிறேன் கேளுங்கடி
மாமிச மானா லெலும்புமுண் டுசதை
வாங்கி ஓடு கழன்றுவிடும்;
ஆமிச மிப்படிச் சத்தியென் றேவிளை
யாடிக் கும்மி அடியுங்கடி.
பண்டு முளைப்ப தரிசியே யானாலும்
விண்டுமி போனால் விளையாதென்று
கண்டுகொண் டுமுன்னே அவ்வைசொன் னாளது
வுண்டோ வில்லையோ வாலைப் பெண்ணே!
மண்ணுமில் லாமலே விண்ணுமில்லை கொஞ்சம்
வாசமில் லாமலே பூவுமில்லை;
பெண்ணுமில்லாமலே யாணுமில் லையிது
பேணிப்பாரடி வாலைப் பெண்ணே!
நந்தவனத்திலே சோதியுண் டுநிலம்
நித்திய பேருக்கு நெல்லுமுண்டு;
விந்தையாய் வாலையைப் பூசிக்க முன்னாளில்
விட்ட குறைவேணும் வாலைப் பெண்ணே!
வாலையைப் பூசிக்கச் சித்தரா னார்வாலைக்
கொத்தாசை யாய்ச்சிவ கர்த்தரானார்;
வேலையைப் பார்த்தல்லோ கூலிவைத் தாரிந்த
விதந்தெ ரியுமோ வாலைப் பெண்ணே!
வாலைக்கு மேலான தெய்வமில் லைமானங்
காப்பது சேலைக்கு மேலுமில்லை;
பாலுக்கு மேலான பாக்கியமில் லைவாலைக்
கும்மிக்கு மேலான பாடலில்லை.
நாட்டத்தை கண்டா லறியலா குமந்த
நாலாறு வாசல் கடக்கலாகும்;
பூட்டைக் கதவைத் திறக்கலா கும்இது
பொய்யல்ல மெய்யடி வாலைப் பெண்ணே!
ஆணும்பெண் ணும்கூடி யானதனாற் பிள்ளை
ஆச்சுதென் றேநீரும் பேசுகின்றீர்;
ஆணும்பெண் ணுங்கூடி யானதல் லோபேதம்
அற்றொரு வித்தாச்சு வாலைப் பெண்ணே!
இன்றைக் கிருப்பதும் பொய்யல்ல வேவீடே
என் வாழ்க்கை யென்பதும் பொய்யல்லவே;
அன்றைக் கெழுத்தின் படிமுடி யும்வாலை
ஆத்தாளைப் போற்றடி வாலைப் பெண்ணே!
வீணாசை கொண்டு திரியா தேயிது
மெய்யல்ல பொய்வாழ்வு பொய்க்கூடு
காணாத வாலையைக் கண்டுகொண் டாற்காட்சி
காணலா மாகாய மாளலாமே.
பெண்டாட்டி யாவதும் பொய்யல்ல வோபெற்ற
பிள்ளைக ளாவதும் பொய்யல்லவோ?
கொண்டாட்ட மான தகப்பன்பொய் யேமுலை
கொடுத்த தாயும் நிசமாமோ?
தாயும் பெண் டாட்டியுந் தான்சரி யேதன்யம்
தாமே யிருவருந் தாங்கொடுத்தார்;
காயும் பழமுஞ் சரியா மோஉன்றன்
கருத்தைப் பார்த்துக்கொள் வாலைப் பெண்ணே!
பெண்டாட்டி மந்தைமட்டும்வரு வாள்பெற்ற
பிள்ளை மசானக் கரையின் மட்டும்;
தெண்டாட்டுத் தர்மம் நடுவினி லேவந்து
சேர்ந்து பரகதி தான் கொடுக்கும்.
பாக்கிய மும்மகள் போக்கிய மும்ராச
போக்கிய மும்வந்த தானாக்கால்
சீக்கிரந் தருமஞ் செய்யவேண் டுங்கொஞ்சத்
திருப்ப ணிகள்மு டிக்கவேண்டும்.
திருப்பணி களைமு டித்தோ ருஞ்செத்துஞ்
சாகாத பேரி லொருவரென்றும்
அருட்பொ லிந்திடும் வேதத்தி லேயவை
அறிந்து சொன்னாளே வாலைப் பெண்ணே!
மெத்தை தனிலே படுத்திருந் துநாமும்
மெல்லிய ரோடு சிரிக்கும்போது
யுத்தகா லன்வந்து தான்பிடித் தால்நாமும்
செத்த சவமடி வாலைப் பெண்ணே!
ஏழை பனாதிக ளில்லையென் றாலவர்க்
கிருந்தா லன்னங கொடுக்க வேண்டும்;
நாளையென் றுசொல்ல லாகா தேயென்று
நான்மறை வேத முழங்குதடி.
பஞ்சை பனாதி யடியாதே யந்தப்
பாவந் தொலைய முடியாதே;
தஞ்சமென் றோரைக் கெடுக்கா தேயார்க்கும்
வஞ்சனை செய்ய நினையாதே.
கண்டதுங் கேட்டதுஞ் சொல்லாதே கண்ணில்
காணாத வுத்தரம் விள்ளாதே;
பெண்டாட்டிக் குற்றது சொல்லாதே பெற்ற
பிள்ளைக் கிளப்பங் கொடுக்காதே.
சிவன்ற னடியாரை வேதிய ரைச்சில
சீர்புல ஞானப் பெரியோரை
மவுன மாகவும் வையா தேயவர்
மனத்தை நோகவும் செய்யாதே.
வழக்க ழிவுகள் சொல்லா தேகற்பு
மங்கையர் மேல்மனம் வையாதே;
பழக்க வாசியைப் பார்த்துக்கொண் டுவாலை
பாதத்தைப் போற்றடி வாலைப்பெண்ணே!
கூடிய பொய்களைச் சொல்லாதே பொல்லாக்
கொலைக ளவுகள் செய்யாதே
ஆடிய பாம்பை யடியா தேயிது
அறிவு தானடி வாலைப் பெண்ணே!
காரிய னாகினும் வீரியம் பேசவும்
காணா தென்றவ்வை சொன்னாளே;
பாரினில் வம்புகள் செய்யா தேபுளிப்
பழம்போ லுதிர்ந்து விழுந்தானே.
காசார் கள்பகை செய்யா தேநடுக்
காட்டுப் புலிமுன்னே நில்லாதே;
தேசாந்த ரங்களுஞ் செல்லா தேமாய்கைத்
தேவடி யாள்தனம் பண்ணாதே.
தன்வீ டிருக்க அசல்வீடு போகாதே
தாயார் தகப்பனை வையாதே;
உன்வீட்டுக் குள்ளேயே யூக மிருக்கையில்
ஓடித் திரிகிறாய் வாலைப் பெண்ணே!
சாதி பேதங்கள் சொல்லுகி றீர்தெய்வம்
தானென் றொருவுடல் பேதமுண்டோ?
ஓதிய பாலதி லொன்றாகி யதிலே
உற்பத்தி நெய்தயிர் மோராச்சு.
பாலோடு முண்டிடு பூனையு முண்டது
மேலாக காணவுங் காண்பதில்லை;
மேலந்த வாசையைத் தள்ளிவிட் டுள்ளத்தில்
வேண்டிப் பூசையைச் செய்திடுங்கள்.
கோழிக் கறுகாலுண் டென்றுசொன் னேன்கிழக்
கூனிக்கு மூன்றுகா லென்று சொன்னேன்;
கூனிக்கி ரண்டெழுத் தென்றுசொன் னேன்முழுப்
பானைக்கு வாயில்லை யென்று சொன்னேன்.
ஆட்டுக் கிரண்டுகா லென்றுசொன் னேனம்
மானைக்குப் பானைக்கு நிற்குமேல் சூல்
மாட்டுக்குக் காலில்லை யென்றுசொன் னேன் கதை
வகையைச் சொல்லடி வாலைப் பெண்ணே!
கோயிலு மாடும் பறித்தவ னுங்கன்றிக்
கூற்று மேகற் றிருந்தவனும்
வாயில்லாக் குதிரை கண்டவ னுமாட்டு
வகைதெ ரியுமோ வாலைப் பெண்ணே!
இத்தனை சாத்திரந் தாம்படித் தோர்செத்தார்
என்றா லுலகத்தோர் தாம்சிரிப்பார்;
செத்துப்போய்க் கூடக் கலக்கவேண்டு மவன்
தேவர்க ளுடனே சேரவேண்டும்.
உற்றது சொன்னக்கா லற்றது பொருந்தும்
உண்டோ உலகத்தி லவ்வைசொன்னாள்;
அற்றது பொருந்து முற்றது சொன்னவன்
அவனே குருவடி வாலைப் பெண்ணே!
பூரண நிற்கும் நிலையறி யான்வெகு
பொய்சொல்வான் கோடிமந் திரஞ்சொல்வான்
காரண குருஅ வனுமல் லவிவன்
காரிய குருபொ ருள்பறிப்பான்.
எல்லா மறிந்தவ ரென்றுசொல் லயிந்தப்
பூமியி லேமுழு ஞானியென்று
உல்லாச மாக வயிறு பிழைக்கவே
ஓடித் திரிகிறார் வாலைப் பெண்ணே!
ஆதிவா லைபெரிதானா லும்அவள்
அக்காள் பெரிதோ சிவன்பெரிதோ!
நாதிவா லைபெரி தானா லும்அவள்
நாயக னல்ல சிவம்பெரிது.
ஆயுசு கொடுப்பாள் நீரிழி வுமுதல்
அண்டாது மற்ற வியாதியெல்லாம்
பேயும் பறந்திடும் பில்லிவினாடியில்
பத்தினி வாலைப்பெண் பேரைச் சொன்னால்.
நித்திரை தன்னிலும் வீற்றிருப் பாளெந்த
நேரத்தி லும்வாலை முன்னிருப்பாள்;
சத்துரு வந்தாலும் தள்ளிவைப் பாள்வாலை
உற்றகா லனையுந் தானுதைப்பாள்.
பல்லாயி ரங்கோடி யண்டமு தல்பதி
னான்கு புவனமும் மூர்த்திமுதல்
எல்லாந் தானாய்ப் படைத்தவ ளாம்வாலை
எள்ளுக்கு ளெண்ணெய்போல் நின்றவளாம்.
தேசம் புகழ்ந்திடும் வாலைக்கும் மித்தமிழ்
செய்ய எனக்குப தேசஞ்செய்தாள்
நேசவான் வீரப் பெருமாள் குருசாமி
நீள் பதம் போற்றிக்கொண் டாடுங்கடி.
ஆறு படைப்புகள் வீடு கடைசூத்ர
அஞ்செழுத் துக்கும் வகையறிந்து
கூறு முயர்வல வேந்த்ரன் துரைவள்ளல்
கொற்றவன் வாழக்கொண் டாடுங்கடி!
ஆடுங்கள் பெண்டுக ளெல்லோ ருமந்த
அன்பான கொங்கணர் சொன்ன தமிழ்
பாடுங்கள் சித்தர்க ளெல்லோ ரும்வாலை
பரத்தைப் போற்றிக்கொண் டாடுங்கடி
சித்தர்கள் வாழி சிவன்வா ழிமுனி
தேவர்கள் வாழி ரிஷிவாழி
பத்தர்கள் வாழி பதம்வா ழிகுரு
பாரதி வாலைப்பெண் வாழியவே!

சனி, 16 ஏப்ரல், 2016

கடன் தொல்லை தீர அகத்தியர் அருளிய பாடல்
(தினமும் காலை 5 மணிக்கு எழுந்து விளக்கேற்றி இந்தப் பாடலைப் படிக்கவும்.)
செல்வம் பெருகவும், கடன் தொல்லை தீரவும் உதவும் வகையில் பாடல் ஒன்றை அகத்திய மாமுனி எழுதி இருக்கிறார். இந்தப் பாடலை தினமும் பக்தியுடன் பாடி வந்தால் இல்லத்தில் சுபிட்சம் பெருகும். இந்தப் பாடல் எழுதிய ஏடுகள் வீட்டில் இருந்தால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. இதைத் தனது பாடலிலேயே அகத்தியர் குறிப்பிட்டுள்ளார். கி.பி.1564 முதல் 1604ம் ஆண்டு வரை தென்பாண்டி நாட்டை ஆண்ட அதிவீரராம பாண்டியர் என்பவரால் இந்தப் பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. சிறப்புமிக்க அந்தப் பாடல் வருமாறு:
மூவுலகும் இடரியற்றும் அடலவுணர் உயிரொழிய முனிவு கூர்ந்த
பூவை உறழ் திருமேனி அருட்கடவுள் அகன்மார்பில் பொலிந்து தோன்றித்
தேவர் உலகினும் விளங்கும் புகழ்க்கொல்லா புரந்தினிது சேர்ந்து வைகும்
பாவை இருதாள் தொழுது பழமறைதேர் குறுமுனிவர் பழிச்சுகின்றார்
கொழுதியிசை அளிமுரலும் தாமரையென் பொகுட்டிலுறை கொள்கைபோல
மழையுறழுந் திருமேனி மணிவண்ணன் இதயமலர் வைகு மானே!
முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே கரகமலம் முகிழ்ந்தெந் நாளுங்
கழிபெருங்காதலில் தொழுவோர் வினைதீர அருள்கொழிக்குங் கமலக்கண்ணாய்!
கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி செழுங்கமலக் கையாய் செய்ய
விமலைபசுங் கழைகுழைக்கும் வேனிலான் தனையீன்ற விந்தை தூய
அழுதகும்ப மலர்க் கரத்தாய் பாற்கடலுள் அவதரித்தோய் அன்பர் நெஞ்சத்
திமிரகன்றிட வொளிருஞ் செஞ்சுடரே என வணக்கம் செய்வான் மன்னோ.
மடற்கமல நறும்பொருட்டில் அரசிருக்கும் செந்துவர்வாய் மயிலே மற்றுன்
கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன் உலகமெலாங் காவல் பூண்டான்
யடைத்தனன் நான்முகக் கிழவன் பசுங்குழவி மதிபுனைந்த பரமன் தானும்
துடைத்தனன் நின் பெருங்கீர்த்தி எம்மனோரால எடுத்துச் சொல்லற் பாற்றோ
மல்லல் நெடும் புவியனைத்தும் பொதுநீக்கித் தனிபுரக்கு மன்னர் தாமும்
கல்வியினில் பேரறிவில் கட்டழகில் நிகரில்லாக் காட்சியோடும்
வெல் படையில் பகை துரந்து வெஞ்சமரில் வாகை புனை வீரர் தாமும்
அல்லிமலர்ப் பொகுட்டுறையும் அணியிழைநின் அருள்நோக்கம் அடைந்துளாரே!
செங்கமலப் பொலந்தாதில் திகழ்தொளிரும் எழில் மேனித் திருவே வேலை
அங்கன்உல கிருள்துலக்கும் அலர்கதிராய் வெண் மதியாய் அமரர்க்கூட்டும்
பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே நெடுங் கானில் யொருப்பில் மண்ணில்
எங்குலை நீ அவனன்றோ மல்லல்வளம் சிறந்தோங்கி இருப்பதம்மா!

வெள்ளி, 25 மார்ச், 2016

கங்கையின் பாவத்தை போக்கிய “குப்த கங்கை” !!!
நன்னிலத்திற்கு அருகில் உள்ளது திருவாஞ்சியம் என்ற திருத்தலம். திருமகள் திருமாலை வாஞ்சித்து(விரும்பி) மணந்ததால் இத்தலத்தைத் திருவாஞ்சியம் என்று அழைத்தனர்.
மயிலாடுதுறை – பேரளம் தொடர்வண்டிப் பாதையில், நன்னிலம் தொடர்வண்டி நிலையத்திற்கு மேற்கே 9 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு வாழவந்தநாயகி உடனுறை வாஞ்சியநாதர் திருக்கோயில். காவிரித் தென்கரைத் தலங்களுள் 70-ஆவது தலம்.
இங்குள்ள இறைவன் வாஞ்சியநாதர். இறைவி வாழவந்த நாயகி, மங்கள நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
ஸ்ரீ வாஞ்சியம் திருத்தலத்திலுள்ள “குப்த கங்கை’ என்னும் தீர்த்தக் குளத்தில் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும். கங்கையில் மூழ்கி தங்கள் பாவத்தைப் போக்குவதால் தனக்கு ஏற்படும் பாவத்தைப் போக்க என்ன செய்யலாம் என்று சிவபெருமானிடம் கங்கை வேண்டினாள். அவரும், தான் மிகவும் விரும்பி இருக்கும் இடமும், பிரளய காலத்திலும் அழிவில்லாத தலமுமான ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு வந்து உன் பாவங்களைப் போக்கிக் கொள்ளலாம் என்றார். கங்கையும் இத்தலத்தில் குப்த கங்கை என்னும் தீர்த்தமாக எழுந்தருளியுள்ளாள். எனவே, இத்தலத்திற்கு வந்து குப்த கங்கையில் நீராடி, இறைவனுக்கு ஆயுள் விருத்தி ஹோமம் செய்து நெய் தீபம் ஏற்றி அன்னதானம் வழங்கினால் சகல பாவங்களும் தீரும் என்பது ஐதீகம்.
உலக உயிர்களைக் கொள்வதால் தனக்கு ஏற்படும் பாவம் நீங்க வழி தேடி தலங்கள் தோறும் சென்றார் இயமதர்மராஜன். இறுதியில் திருவாரூர் தியாகேசப் பெருமானிடம் வேண்டினார். அருட்காட்சியளித்த ஈசன் ஸ்ரீவாஞ்சியம் வா என்று கூற, இயமதர்மனும் அங்கு சென்று ஸ்ரீவாஞ்சிநாதரை தரிசித்து பாவச்சுமையில் இருந்து விடுபட வேண்டினார். உலகத்தை இயக்குபவன் நானே! இதில் உன் செயல் ஒன்றும் இல்லை. எனவே, உன்னை பாவம் வந்து சேராது என்று கூறினார்.
மகிழ்ந்த இயமதர்மன் இத்தலத்தில் தான் எப்போதும் சேத்திர பாலகராக இருக்க வேண்டும் என்றும், மாசி மாதம் பரணி நட்சத்திரத்தன்று தன்னையே வாகனமாகக் கொண்டு இறைவன் உலா வந்தால், உலக உயிர்களைக் கொல்லும் பாவம் நீங்கும் என்றும் இத்திருத்தலத்துக்கு வந்து வழிபடுவோர் மோட்சம் அடைய வேண்டும் என்றும் வேண்டினார். தன்னை வழிபட வருபவர்கள் முதலில் குப்த கங்கையில் நீராடி எமதர்மனை வழிபடலாம் என்று அருளினார் இறைவன்.
தலவிருட்சம் சந்தனமரம். இயமன் பூசித்துப் பேறு பெற்றதால், இறப்பவர்களுக்கு இயமவாதனை இல்லை. இயமனுக்குத் தனிக் கோயிலும் இருக்கின்றது. இது முத்தியளிக்கும் தலங்களுள் ஒன்றாகும். இங்கு மூவராலும் பதிகங்கள் பாடப் பெற்ற திருத்தலம்.

சீரடி சாய் நாதர் ஆயிரம் போற்றி

சீரடி சாய் நாதர் ஆயிரம் தத்துவ நாமம் தத்துவ சஹஸ்ரநாமம் – போற்றி (பகுதி 1) ஓம் சாயிநாதா போற்றி ஓம் ஓம் சத்குருநாதா போற்றி ஓம் ஓம் கருணை...