வியாழன், 4 ஜூலை, 2019

குமரகுருபரர் அருளிய சகல கலாவல்லி மாலை எளிதாக படிக்கும் வண்ணம்.....

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்தாங்க என்வெள்ளைஉள்ளத்
தண்தாமரைக்குத் தகாதுகொலோ? சகம்ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே! 1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய்! பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே! கனதனக்குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே! 2

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருட்கடலில்
குளிக்கும்படிக்கு என்றுகூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே! 3

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! 4

பஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற் பாத பங்கேருகம்என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடும்தாள் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய் சகலகலாவல்லியே! 5

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே! 6

பாட்டும் பொருளும் பொருளால்பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ஓதிமப் பேடே! சகலகலாவல்லியே! 7

சொல்விற்பனமும் அவதானமும் கவிசொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமைகொள்வாய்! நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிதுஎன்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும்செல்வப் பேறே! சகலகலாவல்லியே. 8

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத் தாயே! சகலகலா வல்லியே! 9

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே! 10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.