சனி, 1 நவம்பர், 2025

ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்

                              ஓம் சிவமயம்

ஐப்பசி மாதத்தில் நடைபெறும் மிக முக்கியமான ஆன்மிக விழாக்களில் ஒன்று அனைத்து சிவாலயங்களில் நடைபெறும் அன்னாபிஷேகம் ஆகும். ஒவ்வொரு மாத பெளர்ணமியும் சிவ வழிபாட்டிற்கு மிகவும் ஏற்றதாகும். ஒவ்வொரு தமிழ் மாதத்தில் வரும் பெளர்ணமி அன்று சிவ பெருமானுக்கு ஒவ்வொரு பொருளால் அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். அப்படி ஐப்பசி மாத பௌர்ணமியில் நடைபெறும்


விசுவாவசு வருஷம் ஐப்பசி மாதம் பௌர்ணமி தொடக்கம் மற்றும் முடிவு
நவம்பர் மாதம் நான்காம் தேதி 04.11.2025 செவ்வாய்க்கிழமை இரவு 9:45 மணிக்கு பௌர்ணமி திதி பிறக்கிறது.நவம்பர் மாதம் 5ஆம் தேதி 05.11.2025
புதன்கிழமை இரவு 7:30 மணிக்கு பௌர்ணமி திதி நிறைவடைகிறது


சிவ பெருமானுக்கு சுத்த அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுவது மிக மிக விசேஷமானதாகும்.

சுத்தமான பச்சரிசியை குழைவாக வடித்து, அதை நன்கு ஆற வைத்து, பிறகு அந்த அன்னத்தை கொண்டு, சிவ பெருமானின் லிங்க திருமேனி முழுவதையும் போர்த்தி விடுவார்கள். அதோடு காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை கொண்டு சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். ஐப்பசி மாத பெளர்ணமியில் நடைபெறும் இந்த அபிஷேகத்திற்கு மகா அன்னாபிஷேகம் என்று பெயர். அன்னாபிஷேகம் அன்று சிவ பெருமானுக்கு சாத்தப்படும் ஒவ்வொரு அன்னத்திலும் ஒரு சிவ லிங்கம் இருப்பதாக ஐதீகம். இதனால் ஒரு அன்னாபிஷேகம் தரிசனம் கண்டால், கோடி சிவ லிங்கங்களை ஒரே நேரத்தில் தரிசித்த மகா புண்ணியம் கிடைக்கும். அதோடு அவரின் தலைமுறைக்கே அன்ன தரித்திரியம் என்பது ஏற்படாது.

சிவபெருமானுக்கு பலவிதமான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டாலும், வருடத்திற்கு ஒரு முறை சில குறிப்பிட்ட பொருட்களால் செய்யப்படும் அபிஷேகங்கள் மிகப் பெரிய புண்ணியமாக கருதப்படுகிறது. கார்த்திகை மாத சோமவாரமான திங்கட்கிழமைகளில் செய்யப்படும் சங்காபிஷேகம் எப்படி சிறப்பு வாய்ந்ததோ, அதே போல் ஐப்பசி மாத பெளர்ணமியில் சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுவது சிறப்புக்குரியதாகும். ஈசன், உலக உயிர்கள் அனைத்திற்கும் படியளந்த தினமாக இந்த நாளை புராணங்கள் குறிப்பிடுகின்றன. இறைவன் அனைத்து பொருளிலும் பரபிரம்மமாக நிறைந்திருக்கிறார் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.


ஐப்பசி பவுர்ணமியன்று அன்னாபிஷேகம் 

அம்மாவின் அன்பை உணர்த்துவதில் உணவுக்கு முக்கிய பங்குண்டு. உணவும், மன உணர்வும் நெருங்கிய தொடர்பு கொண்டவை. உணவே நம் மன உணர்வாக மாறுகிறது. மற்றவர் கொடுத்ததை சாப்பிடும் போது சிலர், இது எங்க அம்மா சமைத்த மாதிரியே இருக்கு என சொல்வதுண்டு. அன்னையோடு அறுசுவை உண்டி போம் என அம்மாவின் அருமையைச் சொல்கிறார் பட்டினத்தார். இதனடிப்படையில் அம்மையப் பராக வீற்றிருந்து உலகைக் காக்கும் சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம். ஐப்பசி பவுர்ணமியன்று உச்சிக்கால பூஜையின் போது இதை நடத்துவர். அன்னம் பரப்பிரம்ம சொரூபம் என சோற்றை கடவுளின் வடிவமாகப் போற்றுவர்.


தஞ்சாவூர் பெரிய கோயிலிலுள்ள சிவலிங்கம் (பிரகதீஸ்வரர்) உலகிலேயே பெரிய லிங்கமாகும். ஆறடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், 13 அடி உயரமும், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனிக் கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தைச் சுற்றி வரத் தேவையான இடம் கருவறையைச் சுற்றி உள்ளது. வாசல் வழியாகத் தெரியும் சிவலிங்கத்தின் அளவு மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. அபிஷேக, ஆராதனைக்கு வசதியாக இருபுறமும் படிகள் உள்ளன. ஐப்பசி பவுர்ணமியன்று 100 மூடை அரிசியை சமைத்து சோறாக்கி அபிஷேகம் செய்வதால் மலை போல சோறு சிவலிங்கத்திற்கு சுற்றி நிரம்பி விடும். படியளக்கும் பரம்பொருளான இவரை தரிசிக்க வாழ்வு செழிக்கும்.


ஐப்பசி மாதம்  சரத் பூர்ணிமா என்ற ஐப்பசி பௌர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறும் சாம வேதத்திலே *“அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னாதோ”* என்று கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுதுபடைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். சிவன் பிம்பரூபி, அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை. தில்லையிலே அனுதினமும் காலை பதினோறு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார். இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.


ஆகமத்தில் அன்னாபிஷேகம்: வழிபாட்டில் பௌர்ணமி அன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடசத்திரத்திற்கு உரிய பொருளால் சிவபெருமானை வழிபடுவது விஷேமானதாகும். ஐப்பசி மாதம் இவ்வாறே அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது. அதை ஏன் ஐப்பசி மாத பௌர்ணமியில் செய்ய ணேவ்டும்? மற்ற மாதங்களில் செய்யலாமே? ஐப்பசி மாதப் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாக நீங்கி பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறார். ஆன்மிக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாகவும் இதற்கு ஆதாரம் இருக்கிறது. அக்டோபர், நவம்பர் (ஐப்பசி) மாதத்தில்தான் நிலவு, பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது என்கிறது வானவியல். நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. இதை உணர்ந்த நமது ரிஷிகள் அந்த மாதத்தில் அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கண்டறிந்து நடைமுறைப் படுத்தினார்கள். முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது. சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே அனைத்து ஜீவராசிகளும், இரண்டும் வேறல்ல. அபிஷேக அன்னப் போர்வையால் ஐயன் அகமும் புறமும் குளிரும் போது எல்லா ஜீவராசிகளும் அவனது பேரருட் கருணையினால் குளிர்வது இயற்கைதானே.


அன்னத்தின் சிறப்பு : ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகின்றது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கை. இந்த அன்னம் அபிஷேக நிலையில் ஆண்டவன் மேனி முழுவதும் தழுவி அவனை அகப்ப்டுத்தி அடைக்கலமாகின்றது. அதன் மூலம் ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது. எனவே அவனே பரம்பொருள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது

அன்னாபிஷேகப் பலன்கள்:

 சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று ஒரு பழமொழி உண்டு. அது பொதுவாக, எந்த வேலையும் செய்யாமல் ஓசிச் சோறு உண்டு வெட்டியாக காலம் கழிப்பவரைக் குறித்துச் சொல்லப்படுவதாக இருக்கிறது. ஆனால் உண்மைப் பொருள் அதுவல்ல. சோறாகிய அன்னத்தை அதாவது அன்னாபிஷேகத்தைக் கண்டவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பதே காலப் போக்கில் இவ்வாறு மாறிவிட்டது. வியாபாரத்தில் பிரச்னை இருப்பவர்களும், நஷ்டமடைந்தவர்களும் அன்னாபிஷேகத்தை தரிசித்துப் பிரசாதத்தை உண்டால் வியாபாரம் நிமிரும். பள்ளிக் குழந்தைகளுக்கும் ஏற்றது இது. சில குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள். ஆனால் தேர்வு நேரத்தில் எல்லாம் மறந்து போகும். அந்தக் குழந்தைகள் அன்னாபிஷேகப் பிரசாதத்தை உண்டால் எல்லாம் நன்றாக நினைவில் நிற்கும்.

இறைவன் அருள் பெற பெரியோர் வகுத்த பூஜைகளை எளிமையாகவும் பக்தி அன்புடன் கடைபிடித்து உலக நலம் மற்றும் மக்கள் நலம் அடைய வேண்டும் என்பதே குருமார்கள் நமக்கு காட்டிய நல்வழி பயன்

          காலதீபிகம் அஸ்ட்ரோ சர்வீஸ்


                      அடியேன். 

       இராமய்யா. தாமரைச்செல்வன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்

                              ஓம் சிவமயம் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் மிக முக்கியமான ஆன்மிக விழாக்களில் ஒன்று அனைத்து சிவாலயங்களில் நடைபெறும்...