புதன், 24 செப்டம்பர், 2025

பாரதியார் சக்தி பாடல்கள்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தியே

                ஞான கவி மகாகவி பாரதியார்

சக்திதாசன் என்று தம்மை அழைத்துக் கொண்ட மகாகவி பாரதியார் அன்னை பராசக்தியைப் போற்றும் உன்னதத் திருவிழாவான நவராத்திரியைக் கொண்டாடுவதில் மிகவும் விருப்பமுடையவராக இருந்தார்.

நவராத்திரித் திருநாளின் மகத்துவம் பற்றிய அவரது சிறு கட்டுரை –

ஒன்பதிரவு பராசக்தியைப் பூஜை செய்கிறோம். லக்ஷ்மி என்றும், சரஸ்வதி என்றும், பார்வதி என்றும் மூன்று மூர்த்தியாக நிற்பது பராசக்தி. இவ்வுலகத்தை ஆக்கல், அழித்தல், காத்தல் என மூன்று தொழில் நடத்துவது.

ஹிமாசலம் தொடங்கி குமரி முனை வரை வேதத்தை நம்பும் கூட்டத்தார் எல்லாம் இந்தப் பூஜை செய்கிறோம். ஏழைகளாக இருப்போர் பராசக்திக்கு மலரையும், நீரையும், உள்ளத்தையும் கொடுத்து வலிமை பெறுகிறார்கள். செல்வமுடையோர் விருந்துகளும், விழாக்களும் செய்கின்றனர்.

மஹாளய அமாவாசை கழிந்தது.

இருளும், ஒளியும் மாறிவருவது இவ்வுலக இயற்கை. பகலிலே பெரும்பாலும் ஒளியுண்டு, மேகங்கள் வந்து சூரியனை மறைத்தாலொழிய. சில சமயங்களில் கிரகணம் பிடிக்கும். அதையும் தவிர்த்து விட்டால், இரவிலே தான் ஒளியின் வேறுபாடுகளும் மறைவுகளும் அதிகப்படுகின்றன. பகல் தெளிந்த அறிவு. இரவென்பது மயக்கம். பகலாவது விழிப்பு. இரவு என்பது தூக்கம். பகலாவது நல்லுயிர் கொண்டு வாழ்தல். இரவு லயம்.

சக்தி. நல்ல வல்லெழுத்துச் சேர்ந்த மொழி. விக்ரமாதித்யனும், காளிதாஸனும் வணங்கிய தெய்வம். உலகத்தார் இந்தப் பராசக்தியை நல்ல மழையருள் புரியும் சரத்காலத்தின் முதல் ஒன்பதிரவும் வணங்கி பூஜைகள் செய்யவேண்டும் என்பது பூர்வீகர் ஏற்பாடு. மிகப் பயனுடைய காரியம். மேலான வழி.

ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற முத்தொழிலும் எப்போதும் நடக்கின்றன. லோக சம்ரக்ஷணை எப்போதும் செய்யப் படுகிறது. எப்போதுமே ஆராதனை செய்யவேண்டும். சரத்காலத் தொடக்கத்திலே பேரருளைக் கண்டு விசேஷ விழா நடத்துகிறோம். தவம், கல்வி, தெய்வத்தைச் சரண்புகுதல் இம்மூன்றும் கர்மயோகம் என்று பதஞ்சலி முனிவர் சொல்லுகின்றார். லௌகீகக் கவலைகளிலே இம்மூன்று தொழிலையும் எப்போதும் செய்துகொண்டிருக்க முடியாமல் தடுக்கப் படும் சாமான்ய ஜனங்கள் நவராத்திரி ஒன்பது நாள் இரவும் பகலும் மேற்கூறிய மூவகை நெறியில் நிலை பெறும் வண்ணமான விதிகள் ஆகமங்களிலே கூறப்பட்டன. ஒன்பது நாளும் தியானம், தவம், கல்வி இவற்றிலே செலவிடத் திறமையில்லாதோர் கடைசி ஒன்பதாம் நாள் மாத்திரமேனும் விரதம் காக்கவேண்டும். இந்தப் பூஜையின் பொருள் மிகவும் தெளிந்தது.

சக்தியால் உலகம் வாழ்கிறது.
நாம் வாழ்வை விரும்புகிறோம்.
ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம்

 விநாயகர் நான்மணி மாலை

வெண்பா

(சக்தி பெறும்) பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும்

சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா-அத்தனே!

(நின்)தனக்குக் காப்புரைப்பார்;நின்மீது செய்யும் நூல்

இன்றிதற்கும் காப்புநீ யே. 1

கலித்துறை

நீயே சரணம் நினதரு ளேசர ணஞ்சரணம்

நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன்;

வாயே திறவாத மெனத் திருந்துன் மலரடிக்குத்

தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே. 2


விருத்தம்

செய்யுந் தொழிலுன் தொழிலேகாண்

சீர்பெற் றிடநீ அருள்செய் வாய்.

வையந் தனையும் வெளியினையும்

வானத்தையும்முன் படைத்தவனே!

ஐயா!நான்மு கப்பிரமா!

யானை முகனே!வாணிதனைக்

கையா லணைத்துக் காப்பவனே!

கமலா சனத்துக் கற்பகமே! போற்றி போற்றி


காளி ஸ்தோத்திரம்

யாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீ நிறைந்தாய்;

தீது நன்மையெல்லாம்-நின்தன்-செயல்க ளன்றி யில்லை.

போதும் இங்கு மாந்தர்-வாழும்-பொய்மை வாழ்க்கை யெல்லாம்

ஆதிசக்தி,தாயே!-என் மீ-தருள் புரிந்து காப்பாய்.


எந்த நாளும் நின்மேல்-தாயே!இசைகள் பாடி வாழ்வேன்;

கந்த னைப்ப யந்தாய்,-தாயே!கருணை வெள்ள மானாய்!

மந்த மாரு தத்தில்-வானில்-மலையி னுச்சி மீதில்,

சிந்தை யெங்கு செல்லும்-அங்குன்-செம்மை தோன்று மன்றே


கர்ம் யோக மொன்றே-உலகில்-காக்கு மென்னும் வேதம்;

தர்ம நீதி சிறிதும்-இங்கே-தவற லென்ப தின்றி,

மர்ம மான பொருளாம்-நின்தன்-மலர டிக்கண் நெஞ்சம்,

செம்மை யுற்று நாளும்-சேர்ந்தே-தேசு கூட வேண்டும்.


என்த னுள்ள வெளியில்-ஞானத்-திரவி யேற வேண்டும்;

குன்ற மொத்த தோளும்-மேருக்-கோல மொத்த வடிவும்,

நன்றை நாடு மனமும்-நீயெந்-நாளு மீதல் வேண்டும்;

ஒன்றை விட்டு மற்றோர்-துயரில்-உழலும் நெஞ்சம் வேண்டா.


வான கத்தி னொளியைக்-கண்டே-மனம கிழ்ச்சி பொங்கி,

யானெ தற்கும் அஞ்சேன்-ஆகி-எந்த நாளும் வாழ்வேன்;

ஞான மொத்த தம்மா!-உவமை-நானு ரைக்கொ ணாதாம்!

வான கத்தி னொளியின்-அழகை-வாழ்த்து மாறி யாதோ?


ஞாயி றென்ற கோளம்-தருமோர்-நல்ல பேரொ ளிக்கே

தேய மீதோர் உவமை-எவரே-தேடி யோத வல்லார்?

வாயி னிக்கும் அம்மா!-அழகாம்-மதியின் இன்ப ஒளியை

நேயமோ டுரைத் தால்-ஆங்கே-நெஞ்சி ளக்க மெய்தும்.


காளி மீது நெஞ்சம்-என்றும்-கலந்து நிற்க வேண்டும்;

வேளை யொத்த விறலும், பாரில்-வேந்த ரேத்து புகழும்,

யாளி யொத்த வலியும்-என்றும்-இன்பம் நிற்கும் மனமும்,

வாழி யீதல் வேண்டும்-அன்னாய்!வாழ்க நின்தன் அருளே!


விண்ணும் கண்ணும் தனியாளும்-எங்கள்

வீரை சகித நினதருளே என்தன்

கண்ணுங் கருதும் எனக்கொண்டு-அன்பு

கசிந்து கசிந்து கசிந்துருகி-நான்

பண்ணும் பூசனை கள்எல்லாம்-வெறும்

பாலை வனத்தில் இட்ட நீரோ?-உனக்

கெண்ணுஞ் சிந்தை யொன்றிலையோ?-அறி

வில்லா தகிலம் அளிப்பாயோ?


நீயே சரணமென்று கூவி-என்தன்

நெஞ்சிற் பேருறுதி கொண்டு-அடி

தாயே!யெனக்குமிக நிதியும்-அறந்

தன்னைக் காகுமொரு திறனும்-தரு

கரணமுந் தனுவும் நினக்கெனத் தந்தேன்,

காளிநீ காத்தருள் செய்யே;

மரணமும் அஞ்சேன்;நோய்களை அஞ்சேன்;

மாரவெம் பேயினை அஞ்சேன்.

இரணமுஞ் சுகமும்,பழியுநற் புகழும்

யாவுமோர் பொருளெனக் கொள்ளேன்;

சரணமென் றுனது பதமலர் பணிந்தேன்

தாயெனைக் காத்தலுன் கடனே.


எண்ணிலாப் பொருளும்,எல்லையில்,வெளியும்

யாவுமா நின்தனைப் போற்றி,

மணிணிலார் வந்து வாழ்த்தினுஞ் செறினும்

மயங்கிலேன்;மனமெனும் பெயர்கொள்

கண்ணிலாப் பேயை எள்ளுவேன்;இனியெக்

காலுமே அமைதியி லிருப்பேன்;

தண்ணிலா முடியிற் புனைந்துநின் றிலகும்

தாயுனைச் சரண்புகுந் தேனால்.


நீசருக் கினிதாந் தனத்தினும், மாதர்

நினைப்பினும்,நெறியிலா மாக்கள்

மாசுறு பொய்ந்நட் பதனிலும், பன்னாள்

மயங்கினேன்;அதையினி மதியேன்;

தேசுறு நீல நிறத்தினாள்,அறிவாய்ச்

சிந்தையிற் குலவிடு திறத்தாள்.

வீசுறுங் காற்றில் நெருப்பினில் வெளியில்

விளங்குவாள் தனைச்சரண் புகுந்தேன்.


ஐயமுந் திகப்புந் தொலைந்தன; ஆங்கே

அச்சமுந் தொலைந்தது;சினமும்

பொய்யுமென் றினைய புன்மைக ளெல்லாம்

போயின; உறுதிநான் கண்டேன்,

வையமிங் கனைத்தும் ஆக்கியும் காத்தும்

மாய்த்துமே மகிழ்ந்திடு தாயைத்

துய்யவெண் ணிறத்தாள் தனைக்கரி யவளைத்

துணையெனத் தொடர்ந்தது கொண்டே.


தவத்தினை எளிதாப் புரிந்தனள், யோகத்

தனிநிலை எளிதெனப் புரிந்தாள்;

சிவத்தினை இனிதாப் புரிந்தனள்,மூடச்

சித்தமும் தெளிவுறச் செய்தாள்;

பவத்தினை வெறுப்ப அருளினள், நானாம்

பான்மை கொன் றவன்மயம் புரிந்தாள்;

அவத்தினைக் களைந்தாள் அறிவென விளைந்தாள்,

அநந்தமா வாழ்கஇங் கவளே!

விண்டு ரைக்க அறிய அரியதாய்

விவிந்த வான வெளியென நின்றனை;

அண்ட கோடிகள் வானில் அமைத்தனை;

அவற்றில் எண்ணற்ற வேகஞ் சமைத்தனை;

மண் டலத்தை அணுவணு வாக்கினால்,

வருவ தெத்தனை அததனை யோசனை

கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை,

கோலமே!நினைக் காளியென் றேத்துவேன்.


நாடு காக்கும் அரசன் தனையந்த

நாட்டு ளோர்அர சென்றறி வார்எனில்,

பாடு தண்டைக் குழந்தை தனக்கிதம்

பண்ணும் அப்பன் அவனென் றறிந்திடும்;

கோடி யண்டம் இயகி யளிக்கும்நின்

கோலம் ஏழை குறித்திட லாகுமோ?

நாடி யிச்சிறு பூமியிற் காணுநின்

நலங்கள் ஏத்திட நல்லருள் செய்வே.


பரிதி யென்னும் பொருளிடை யேய்ந்தனை,

பரவும் வெய்ய கதிரெனக் காய்ந்தனை;

கரிய மேகத் திளெனச் செல்லுவை,

மாலு மின்னென வந்துயிர் கொல்லுவை;

சொரிய்ம நுரெனப் பல்லுயிர் போற்றுவை,

சூழும் வெள்ள மெனவுயிர் மாற்றுவை;

விரியும் நீள்கட லென்ன நிறைந்தனை,

வெல்க காளி யென தம்மை வெல்கவே.


வாயு வாகி வெளியை அளந்தனை,

வாழ்வெ தற்கும் உயிர்நிலை ஆயினை,

தேயு வாகி ஒளிருள் செய்குவை,

செத்த வற்றைக் கருப்பொருள் ஆக்குவை;

பாயு மாயிரஞ் சக்திக ளாகியே

பாரி லுள்ள தொழில்கள் இயற்றுவை;

சாயும் பல்லுயிர் கொல்லுனைவ,நிற்பன

தம்மைக் காத்துச் சுகம்பல நல்குவை.


நிலத்தின் கீழ்பல் லுலோகங்கள் ஆயினை,

நீரின் கீழெண் ணிலாநிதி வைத்தனை;

தலத்தின் மீது மலையும் நதிகளும்,

சாருங் காடுஞ் சுனைகளும் ஆயினை;

குலத்தி லெண்ணற்ற பூண்டு பயிரினம்

கூட்டி வைத்துப் பலநலந் துய்த்தனை;

புலத்தை யிட்டிங் குயிர்கள் செய்தாய்,அன்னே!

போற்றி!போற்றி!நினதருள் போற்றியே!


சித்த சாகரஞ் செய்தனை ஆங்கதிற்

செய்த கர்மப் பயனெனப் பல்கினை;

தத்துகின்ற திரையுஞ் சுழிகளும்

தாக்கி யெற்றிடுங் காற்றுமுள் ளோட்டமுஞ்

சுத்த மோனப் பகுதியும் வெண்பனி

சூழ்ந்த பாகமும் சுட்டவெந் நீருமென்று

ஒத்த நீக்கடல் போலப் பலவகை

உள்ள மென்னுங்க கடலில் அமைந்தனை.


வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்

வெளியி லிரத்தக் கயொடு பூதம் பாட-பாட்டின்

அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக்-களித்

தாடுங் காளீ!சாமுண் டீ!கங் காளீ!

அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை

நாடச் செய்தாய் என்னை.


ஐந்துறு பூதம் சிந்திப் போயொன் றாகப்-பின்னர்

அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக-அங்கே

முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத்-தோடே

முடியா நடனம் புரிவாய,அடு தீ சொரிவாய்!

அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை

நாடச் செய்தாய் என்னை.


பாழாம் வெளியும் பதறிப் போய்மெய் குலையச்-சலனம்

பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய-அங்கே

ஊழாம் பேய்தான்"ஓஹோ ஹோ"வென் றலைய;-வெறித்

துறுமித் திரிவாய்,செருவெங் கூத்தே புரிவாய்!

அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை

நாடச் செய்தாய் என்னை.


சத்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச்-சட்டச்

சடசட சட்டெனுடைபடு தாளங்கொட்டி-அங்கே

எத்திக் கினிலும் நின்விழி யனல் போய் எட்டித்-தானே

எரியுங் கோலங் கண்டே சாகும் காலம்.

அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை

நாடச் செய்தாய் என்னை.


காலத் தொடுநிர் மூலம் படுமூ வுலகும்-அங்கே

கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும்-சிவன்

கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும்-கையைக்

கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்!

அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை

நாடச் செய்தாய் என்னை.

      ஊழிக் கூத்து

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்

வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாட-பாட்டின்

அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக்-களித்

தாடுங் காளீ!சாமுண் டீ!கங் காளீ!

அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை

நாடச் செய்தாய் என்னை.


ஐந்துறு பூதம் சிந்திப் போயொன் றாகப்-பின்னர்

அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக-அங்கே

முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத்-தோடே

முடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்!

அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை

நாடச் செய்தாய் என்னை.


பாழாம் வெளியும் பதறிப் போய்மெய் குலையச்-சலனம்

பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய-அங்கே

ஊழாம் பேய்தான்"ஓஹோ ஹோ"வென் றலைய;-வெறித்

துறுமித் திரிவாய்,செருவெங் கூத்தே புரிவாய்!

அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை

நாடச் செய்தாய் என்னை.


சத்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச்-சட்டச்

சடசட சட்டெனுடைபடு தாளங்கொட்டி-அங்கே

எத்திக் கினிலும் நின்விழி யனல் போய் எட்டித்-தானே

எரியுங் கோலங் கண்டே சாகும் காலம்.

அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை

நாடச் செய்தாய் என்னை.


காலத் தொடுநிர் மூலம் படுமூ வுலகும்-அங்கே

கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும்-சிவன்

கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும்-கையைக்

கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்!

அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை

நாடச் செய்தாய் என்னை.

காளிக்குச் சமர்ப்பணம்

இந்த மெய்யும் கரணமும் பொறியும்

இருபத் தேழு வருடங்கள் காத்தனன்;

வந்த னம்;அடி பேரருள் அன்னாய்!

வைர வீ! திறற் சாமுண்டி! காளி!

சிந்த னைதெளிந் தேனினி யுன்தன்

திரு வருட்கென அர்ப்பணஞ் செய்தேன்;

வந்தி ருந்து பலபய னாகும்

வகைதெ ரிந்துகொள் வாழி யடி!நீ.


   பேதை நெஞ்சே                    மனசங்கற்பம்

இன்னுமொரு முறைசொல்வேன்,பேதை நெஞ்சே!

எதற்குமினி உளைவதிலே பயனொன் றில்லை;

முன்னர்நம திச்சையினாற் பிறந்தோ மில்லை;

முதலிறுதி இடைநமது வசத்தில் இல்லை;

மன்னுமொரு தெய்வத்தின் சக்தி யாலே

வையகத்திற் பொருளெல்லாம் சலித்தல் கண்டாய்!

பின்னையொரு கவலையுமிங் கில்லை,நாளும்

பிரியாதே விடுதலையைப் பிடித்துக் கொள்வாய்!


நினையாத விளைவெல்லாம் விளைந்து கூடி,

நினைத்தபயன் காண்பதவன் செய்கையன்றோ?

மனமார உண்மையினைப் புரட்டலாமோ?

மஹாசக்தி செய்தநன்றி மறக்க லாமோ?

எனையாளும் மாதேவி,வீரார் தேவி,

இமையவருந் தொழுந்தேவி, எல்லைத் தேவி,

மனைவாழ்வு பொருளெல்லாம் வகுக்குந் தேவி,

மலரடியே துணையென்று வாழ்த்தாய் நெஞ்சே!


சக்தியென்று புகழ்ந்திடுவோம் முருகன் என்போம்;

சங்கரனென் றுரைத்திடுவோம்,கண்ணன் என்போம்;

நித்தியமிங் கவள்சரணே நிலையென் றெண்ணி,

நினக்குள்ள குறைகளெல்லாந் தீர்க்கச் சொல்லி

பக்தியினாற் பெருமையெல்லாம் கொடுக்கச் சொல்லி,

பசிபிணிக ளில்லாமற் காக்கச் சொல்லி,

உத்தமநன் னெறிகளிலே சேர்க்கச் சொல்லி,.

உலகளந்த நாயகிதாள் உரைப்பாய்,நெஞ்சே!


செல்வங்கள் கேட்டால்நீ கொடுக்க வேண்டும்.

சிறுமைகளென் னிடமிருந்தால் விடுக்க வேண்டும்;

கல்வியிலே மதியினைநீ தொடுக்க வேண்டும்.

கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்,

தொல்லைதரும் அகப்பேயைத் தொலைக்க வேண்டும்

துணையென்று நின்னருளைத் தொடரச் செய்தே

ந்லலவழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்.

‘நமோநமஓம் சக்தி’ யென நவிலாய் நெஞ்சே!


பாட்டினிலே சொல்லுவதும் அவள்சொல் லாகும்;

பயனனிறி உரைப்பாளோ? பாராய், நெஞ்சே!

கேட்டதுநீ பெற்றிடுவாய்,ஐயமில்லை;

கேடில்லை,தெய்வமுண்டு,வெற்றி யுண்டு;

மீட்டுமுனக் குரைத்திடுவேன், ஆதிச சக்தி,

வேதத்தின் முடியினிலே விளங்கும் சதி,

நாட்டினிலே சனகனைபோல் நமையும் செய்தாள்;

‘நமோநம,ஓம் சக்தி‘ யென நவிலாய் நெஞ்சே!

நவராத்திரிப் பாட்டு



மாதா பராசக்தி)

பரா சக்தி
(மூன்றும் ஒன்றாகிய மூர்த்தி)

மாதா பராசக்தி வையமெலாம் நீ நிறைந்தாய்?
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே?
ஏதாயினும் வழிநீ சொல்வாய் எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே

வாணி

வாணி கலைத்தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே.

ஸ்ரீதேவி

பொன்னரசி நாரணனார் தேவி,புகழரசி
மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்.
அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள்,ஸ்ரீதேவி
தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே.

பார்வதி

மலையிலே தான்பிறந்தாள்,சங்கரனை மாலையிட்டாள்,
உலையிலே யூதி உலகக் கனல்வளர்ப்பாள்,
நிலையில் உயர்ந்திடுவாள்,நேரே அவள்பாதம்
தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே.

நவராத்திரிப் பாட்டு

(உஜ்ஜயினீ)

உஜ்ஜயினீ நித்ய கல்யாணீ!
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி (உஜ்ஜயினீ)

உஜ்ஜய காரண சங்கர தேவீ
உமா ஸரஸ்வதீ ஸ்ரீ மாதா ஸா. (உஜ்ஜயினீ)

வாழி புனைந்து மஹேசுவர தேவன்,
தோழி பதங்கள் பணிந்து துணிந்தனம், (உஜ்ஜயினீ)

சத்ய யுகத்தை அகத்தி லிருத்தி,
திறத்தை நமக்கரு ளிச்செய்யும் உத்தமி. (உஜ்ஜயினீ)

நவராத்திரிப் பாட்டு


(மாதா பராசக்தி)


பரா சக்தி

(மூன்றும் ஒன்றாகிய மூர்த்தி)

மாதா பராசக்தி வையமெலாம் நீ நிறைந்தாய்?

ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே?

ஏதாயினும் வழிநீ சொல்வாய் எமதுயிரே!

வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே

வாணி

வாணி கலைத்தெய்வம் மணிவாக் குதவிடுவாள்

ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்

காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய்

மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே.

ஸ்ரீதேவி

பொன்னரசி நாரணனார் தேவி,புகழரசி

மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்.

அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள்,ஸ்ரீதேவி

தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே.

பார்வதி

மலையிலே தான்பிறந்தாள்,சங்கரனை மாலையிட்டாள்,

உலையிலே யூதி உலகக் கனல்வளர்ப்பாள்,

நிலையில் உயர்ந்திடுவாள்,நேரே அவள்பாதம்

தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே.

            ஓம் சக்தி


நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்

நிறைந்த சுடர்மணிப் பூண்,

பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம்,இவள்

பார்வைக்கு நேர்பெருந்தீ

வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி

வையக மாந்தரெல் லாம்,

தஞ்சமென் றேயுரைப் பீர்அவள் பேர்,சக்தி

ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.


"நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி

நலத்தை நமக்கிழைப் பாள்;

அல்லது நீங்கும்"என் றேயுலகேழும்

அறைந்திடு வாய் முர சே!

சொல்லத் தகுந்த பொருளன்று காண்!இங்கு

சொல்லு மவர்தமை யே,

அல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்

ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.


நம்புவ தேவழி யென்ற மறையதன்னை

நாமின்று நம்பிவிட் டோம்

கும்பிட்டெந்நேரமும்"சக்தி"யென் றாலுனைக்

கும்பிடு வேன்,மன மே!

அம்புக்கு தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்

அச்ச மில்லாத படி

உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்

ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.


பொன்னைப் பொழிந்திடு மின்னை வளர்த்திடு,

போற்றி உனக்கிசைத் தோம்;

அன்னை பராசக்தி என்றுரைத் தோம்;தளை

அத்தனை யுங்களைந் தோம்;

சொன்ன படிக்கு நடந்திடு வாய், மன

மே தொழில் வேறில்லை,காண்;

இன்னும தேயுரைப் போம்,சக்தி ஓம் சக்தி,

ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.


வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு

ளாக விளங்கிடு வாய்!

தெள்ளு கலைத்தமிழ் வாணி! நினக்கொரு

விண்ணப்பஞ் செய்திடு வேன்;

எள்ளத் தனைப் பொழு தும்பய னின்றி

இராதென்றன் நாவினி லே

வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல், சக்தி

வேல், சக்தி வேல்,சக்தி வேல்!

ஓம் சக்தி பாடல்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்-பரா சக்தி

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி -ஓம் சக்தி

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்


கணபதி ராயன்-அவனிரு

காலைப் பிடித் திடுவோம்;

குண முயர்ந் திடவே-விடுதலை

கூடி மகிழ்ந்திடவே (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)



சொல்லுக் கடங்காவே-பரா சக்தி

சூரத் தனங்க ளெல்லாம்;

வல்லமை தந்திடுவாள்-பரா சக்தி

வாழியென்றேதுதிப்போம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)


வெற்றி வடிவேலன்-அவனுடை

வீரத்தினைப் புகழ்வோம்

சுற்றி நில்லாதே போ!-பகையே!

துள்ளி வருகுது வேல். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)


தாமரைப் பூவினிலே-சுருதியைத்

தனியிருந் துரைப்பாள்

பூமணித் தாளினையே-கண்ணி லொற்றிப்

புண்ணிய மெய்திடுவோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)


பாம்புத் தலைமேலே-நடஞ் செயும்

பாதத்தினைப் புகழ்வோம்;

மாம்பழ வாயினிலே-குழலிசை

வண்மை புகழ்ந்திடுவோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)


செல்வத் திருமகளைத்-திடங்கொண்டு

சிந்தனை செய்திடுவோம்;

செல்வமெல்லாம் தருவாள்-நமதொளி

திக்க னைத்தும் பரவும். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)


         போற்றி அகவல்

போற்றி உலகொரு மூன்றையும் புணர்ப்பாய்!

மாற்றுவாய்,துடைப்பாய்,வளர்ப்பாய,காப்பாய்!

கனியிலே சுவையும் காற்றிலே இயக்கமும்

கலந்தாற் போலநீ அனைத்திலும் கலந்தாய்

உலகெலாந் தானாய் ஒளிர்வாய், போற்றி

5

அன்னை, போற்றி!அமுதமே போற்றி!

புதியதிற் புதுமையாய் முதியதில் முதுமையாய்,

உயிரிலே உயிராய் இறப்பிலும் உயிராய்,

உண்டெனும் பொருளில் உண்மையாய் என்னுளே

நானெனும் பொருளாய்,நானையே பெருக்கித்

10

தானென மாற்றுஞ் சாகாச் சுடராய்,

கவலைநோய் தீர்க்கும் மருந்தின் கடலாய்

பிணியிருள் கெடுக்கும் பேரொளி ஞாயிறாய்,

யானென தின்றி யிருக்குநல் யோகியர்

ஞானமா மகுட நடுத்திகழ் மணியாய்

15

செய்கையாய்,ஊக்கமாய,சித்தமாய்,அறிவாய்

நின்றிடுந் தாயே,நித்தமும் போற்றி!

இன்பங் கேட்டேன்,ஈவாய் போற்றி!

துன்பம் வேண்டேன், துடைப்பாய் போற்றி! அமுதங் கேட்டேன்,அளிப்பாய் போற்றி!

20

சக்தி,போற்றி!தாயே,போற்றி!

முக்தி போற்றி! மோனமே போற்றி!

சாவினை வேண்டேன்,தவிர்ப்பாய் போற்றி


                      சக்தி பாடல்


துன்ப மிலாத நிலையே சக்தி,

தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி;

அன்பு கனிந்த கனிவே சக்தி,

ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி;

இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி,

எண்ணத் திருக்கும் எரியயே சக்தி,

முன்புநிற் கின்ற தொழிலே சக்தி,

முக்தி நிலையின் முடிவே சக்தி.


சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி,

சொல்லில் விளங்கும் சுடரே சக்தி;

தீம்பழந் தன்னில் சுவையே சக்தி,

தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி;

பாம்பை அடிக்கும் படையே சக்தி;

பாட்டினில் வந்த களியே சக்தி;

சாம்பரைப் பூசி மலைமிசை வாழும்

சங்கரன் அன்புத் தழலே சக்தி.


வாழ்வு பெருக்கும் மமதியே சக்தி,

மாநிலம் காக்கும் மதியே சக்தி;

தாழ்வு தடுக்குஞ் சதிரே சக்தி,

சஞ்சலம் நீக்குந் தவமே சக்தி,

வீழ்வு தடுக்கும் விறலே சக்தி,

விண்ணை யளக்கும் விரிவே சக்தி;

ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி,

உள்ளத் தொளிரும் விளக்கே சக்தி.


       சக்தி விளக்கம்


ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் - அதை

அன்னை எனப்பணிதல் ஆக்கம்,

சூதில்லை காணும்இந்த நாட்டீர் ! - மற்றத்

தொல்லை மதங்கள் செய்யும் தூக்கம்

மூலப் பழம்பொருளின் நாட்டம் - இந்த

மூன்று புவியும் அதன் ஆட்டம்

காலப் பெருங்களத்தின் மீதே - எங்கள்

காளிநடம் உலகக் கூட்டம்

காலை இளவெயிலின் காட்சி - அவள்

கண்ணொளி காட்டுகின்ற மாட்சி

நீள விசும்பின்இடை இரவில் - சுடர்

நேமி அனைத்தும் அவள் ஆட்சி

நாரணன் என்று பழவேதம் - சொல்லும்

நாயகன் சக்தி திருப்பாதம்,

சேரத்தவம் புரிந்து பெறுவார் - இங்குச்

செல்வம் அறிவு சிவபோதம்

ஆதிசிவனுடை சக்தி - எங்கள்

அன்னை அருள்பெறுதல் முக்தி ;

மீதி உயிர்இருக்கும் போதே - அதை

வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி

பண்டை வி தியுடைய தேவி - வெள்ளை

பாரதி அன்னை அருள் மேவி

கண்ட பொருள்விளக்கும் நூல்கள் - பல

கற்றல் இல்லாதவன்ஓர் பாவி

மூர்த்திகள் மூன்று, பொருள் ஒன்று - அந்த

மூலப்பொருள் ஒளியின் குன்று

நேர்த்தி நிகழும்அந்த ஒளியை - எந்த

நேரமும் போற்றுசக்தி என்று

வையம் முழுதும் கண்ணிகள்

வையம் முழுதும் படைத்தளிக் கின்ற

மஹாசக்தி தன்புகழ் வாழ்த்து கின்றோம்;

செய்யும் வினைகள் அனைத்திலும் வெற்றி

சேர்ந்திட நல்லருள் செய்க வென்றே!


பூதங்கள் ஐந்தில் இருந்தெங்குங் கண்ணிற்

புலப்படும் சக்தியைப் போற்று கின்றோம்;

வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை

மேன்மையுறச் செய்தல் வேண்டு மென்றே!


வேகம் கவர்ச்சி முதலிய பல்வினை

மேவிடும் சக்தியை மேவு கின்றோம்;

ஏக நிலையில் இருக்கும் அமிர்தத்தை

யாங்கள் அறிந்திட வேண்டு மென்றே!


உயிரெனத் தோன்றி உணவுகொண் டேவளர்ந்

தோங்கிடும் சக்தியை ஓதுகின்றோம்;

பயிரினைக் காக்கும் மழையென எங்களைப்

பாலித்து நித்தம் வளர்க்க வென்றே.


சித்தத்தி லேநின்று சேர்வ துணரும்

சிவசக்தி தன்புகழ் செப்பு கின்றோம்;

இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும்

எமக்குத் தெரிந்திடல் வேண்டு மென்றே.


மாறுத லின்றிப் பராசக்தி தன்புகழ்

வையமிசை நித்தம் பாடு கின்றோம்;

நூறு வயது புகழுடன் வாழ்ந்துயர்

நோக்கங்கள் பெற்றிட வேண்டு மென்றே.


ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

ஓம் சக்தி என்றுரை செய்தி டுவோம்;

ஓம் சக்தி என்பவர் உண்மை கண்டார்;சுடர்

ஒண்மைகொண்டார்,உயிர் வண்மை கொண்டார்.

மஹாசக்திக்கு விண்ணப்பம்


மோகத்தைக் கொன்றுவிடு-அல்லா லென்தன்

மூச்சை நிறுத்திவிடு;

தேகத்தைச் சாய்த்துவிடு-அல்லா லதில்

சிந்தனை மாய்த்துவிடு;

யோகத் திருத்திவிடு-அல்லா லென்தன்

ஊனைச் சிதைத்துவிடு;

ஏகத் திருந்துலகம்-இங்குள்ளன

யாவையும் செய்பவளே!


பந்தத்தை நீக்கிவிடு-அல்லா லுயிர்ப்

பாரத்தைப் போக்கிவிடு;

சிந்தை தெளிவாக்கு-அல்லா லிதைச்

செத்த வுடலாக்கு;

இந்தப் பதர்களையே-நெல்லாமென

எண்ணி இருப்பேனோ?

எந்தப் பொருளிலுமே-உள்ளே நின்று

இயங்கி யிருப்பவளே.


உள்ளம் குளிராதோ?-பொய்யாணவ

ஊனம் ஒழியாதோ?

கள்ளம் உருகாதோ?-அம்மா!பக்திக்

கண்ணீர் பெருகாதோ?

வெள் ளைக் கருணையிலே இந்நாய் சிறு

வேட்கை தவிராதோ?

விள்ளற் கரியவளே அனைத்திலும்

மேவி யிருப்பவளே


          சக்தி திருப்புகழ்


சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ என்றோது;

சக்தி சக்தி சக்தீ என்பார்-சாகார் என்றே நின்றோது;

சக்தி சக்தி என்றே வாழ்தல்-சால்பாம் நம்மைச் சார்ந்தீரே!

சக்தி சக்தி என்றீ ராகில்-சாகா உண்மை சேர்ந்தீரே!

சக்தி சக்தி என்றால் சக்தி-தானே சேரும் கண்டீரே!

சக்தி சக்தி என்றால் வெற்றி-தானே சேரும் கண்டீரே!

சக்தி சக்தி என்றே செய்தால்-தானே செய்கை நேராகும்;

சக்தி சக்தி என்றால் அஃது-தானே முக்தி வேராகும்.

சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ என்றே ஆடாமோ?

சக்தி சக்தி சக்தீ யென்றே-தாளங் கொட்டிப் பாடாமோ?

சக்தி சக்தி என்றால் துன்பம்-தானே தீரும் கண்டீரே!

சக்தி சக்தி என்றால் இன்பம்-தானே சேரும் கண்டீரே!

சக்தி சக்தி என்றால் செல்வம்- தானே ஊறும் கண்டீரோ?

சக்தி சக்தி என்றால் கல்வி-தானே தேறும் கண்டீரோ?

சக்தி சக்தி சக்தீ சக்தீ-சக்தீ சக்தீ வாழீ நீ!

சக்தி சக்தி சக்தீ சக்தீ-சக்தீ சக்தீ வாழீ நீ!

சக்தி சக்தி வாழீ என்றால்-சம்பத் தெல்லாம் நேராகும்;

சக்தி சக்தி என்றால் சக்தி-தாசன் என்றே பேராகும்.

                   மஹா சக்தி

சந்திர னொளியில் அவளைக் கண்டேன்,

சரண மென்று புகுந்து கொண்டேன்;

இந்திரி யங்களை வென்று விட்டேன்,

எனதென் ஆசையைக் கொன்று விட்டேன்.


பயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள்,

பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்;

துயரி லாதெனைச் செய்து விட்டாள்,

துன்ப மென்பதைக் கொய்து விட்டாள்.


மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்;

வீசி நிற்கும் வளியைச் செய்தாள்;

வான்க ணுள்ள வெளியைச் செய்தாள்,

வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள்.


               காளி தருவாள்


எண்ணி லாத பொருட்குவை தானும்,

ஏற்றமும், புவி யாட்சியும் ஆங்கே

விண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளிம்

வெம்மை யும்பெருந் திணமையும் அறிவும்,

தண்ணி லாவின் அமைதியும் அருளும்

தருவள் இன்றென தன்னை யென்காளி;

மண்ணி லார்க்குந் துயரின்றிச் செய்வேன்,

வறுமை யென்பதை மண்மிசை மாய்ப்பேன்.


தானம் வேள்வி தவங்கல்வி யாவும்

தரணி மீதில் நிலைபெறச் செய்வேன்,

வானம் மூன்று மழைதரச் செய்வேன்

மாறி லாத வளங்கள் கொடுப்பேன்;

மானம் வீரியம் ஆண்மை நன்னேர்மை

வண்மை யாவும் வழங்கறச் செய்வேன்,

நான்வி ரும்பின காளி தருவாள்


           மஹா சக்தி பஞ்சகம்


கரணமுந் தனுவும் நினக்கெனத் தந்தேன்,

காளிநீ காத்தருள் செய்யே;

மரணமும் அஞ்சேன்;நோய்களை அஞ்சேன்;

மாரவெம் பேயினை அஞ்சேன்.

இரணமுஞ் சுகமும்,பழியுநற் புகழும்

யாவுமோர் பொருளெனக் கொள்ளேன்;

சரணமென் றுனது பதமலர் பணிந்தேன்

தாயெனைக் காத்தலுன் கடனே.


எண்ணிலாப் பொருளும்,எல்லையில்,வெளியும்

யாவுமா நின்தனைப் போற்றி,

மணிணிலார் வந்து வாழ்த்தினுஞ் செறினும்

மயங்கிலேன்;மனமெனும் பெயர்கொள்

கண்ணிலாப் பேயை எள்ளுவேன்;இனியெக்

காலுமே அமைதியி லிருப்பேன்;

தண்ணிலா முடியிற் புனைந்துநின் றிலகும்

தாயுனைச் சரண்புகுந் தேனால்.


நீசருக் கினிதாந் தனத்தினும், மாதர்

நினைப்பினும்,நெறியிலா மாக்கள்

மாசுறு பொய்ந்நட் பதனிலும், பன்னாள்

மயங்கினேன்;அதையினி மதியேன்;

தேசுறு நீல நிறத்தினாள்,அறிவாய்ச்

சிந்தையிற் குலவிடு திறத்தாள்.

வீசுறுங் காற்றில் நெருப்பினில் வெளியில்

விளங்குவாள் தனைச்சரண் புகுந்தேன்.


ஐயமுந் திகப்புந் தொலைந்தன; ஆங்கே

அச்சமுந் தொலைந்தது;சினமும்

பொய்யுமென் றினைய புன்மைக ளெல்லாம்

போயின; உறுதிநான் கண்டேன்,

வையமிங் கனைத்தும் ஆக்கியும் காத்தும்

மாய்த்துமே மகிழ்ந்திடு தாயைத்

துய்யவெண் ணிறத்தாள் தனைக்கரி யவளைத்

துணையெனத் தொடர்ந்தது கொண்டே.


தவத்தினை எளிதாப் புரிந்தனள், யோகத்

தனிநிலை எளிதெனப் புரிந்தாள்;

சிவத்தினை இனிதாப் புரிந்தனள்,மூடச்

சித்தமும் தெளிவுறச் செய்தாள்;

பவத்தினை வெறுப்ப அருளினள், நானாம்

பான்மை கொன் றவன்மயம் புரிந்தாள்;

அவத்தினைக் களைந்தாள் அறிவென விளைந்தாள்,

அநந்தமா வாழ்கஇங் கவளே!

        மஹாசக்தி வாழ்த்து

விண்டு ரைக்க அறிய அரியதாய்
விவிந்த வான வெளியென நின்றனை;
அண்ட கோடிகள் வானில் அமைத்தனை;
அவற்றில் எண்ணற்ற வேகஞ் சமைத்தனை;
மண் டலத்தை அணுவணு வாக்கினால்,
வருவ தெத்தனை அததனை யோசனை
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை,
கோலமே!நினைக் காளியென் றேத்துவேன்.

நாடு காக்கும் அரசன் தனையந்த
நாட்டு ளோர்அர சென்றறி வார்எனில்,
பாடு தண்டைக் குழந்தை தனக்கிதம்
பண்ணும் அப்பன் அவனென் றறிந்திடும்;
கோடி யண்டம் இயகி யளிக்கும்நின்
கோலம் ஏழை குறித்திட லாகுமோ?
நாடி யிச்சிறு பூமியிற் காணுநின்
நலங்கள் ஏத்திட நல்லருள் செய்வே.

பரிதி யென்னும் பொருளிடை யேய்ந்தனை,
பரவும் வெய்ய கதிரெனக் காய்ந்தனை;
கரிய மேகத் திளெனச் செல்லுவை,
மாலு மின்னென வந்துயிர் கொல்லுவை;
சொரிய்ம நுரெனப் பல்லுயிர் போற்றுவை,
சூழும் வெள்ள மெனவுயிர் மாற்றுவை;
விரியும் நீள்கட லென்ன நிறைந்தனை,
வெல்க காளி யென தம்மை வெல்கவே.

வாயு வாகி வெளியை அளந்தனை,
வாழ்வெ தற்கும் உயிர்நிலை ஆயினை,
தேயு வாகி ஒளிருள் செய்குவை,
செத்த வற்றைக் கருப்பொருள் ஆக்குவை;
பாயு மாயிரஞ் சக்திக ளாகியே
பாரி லுள்ள தொழில்கள் இயற்றுவை;
சாயும் பல்லுயிர் கொல்லுனைவ,நிற்பன
தம்மைக் காத்துச் சுகம்பல நல்குவை.

நிலத்தின் கீழ்பல் லுலோகங்கள் ஆயினை,
நீரின் கீழெண் ணிலாநிதி வைத்தனை;
தலத்தின் மீது மலையும் நதிகளும்,
சாருங் காடுஞ் சுனைகளும் ஆயினை;
குலத்தி லெண்ணற்ற பூண்டு பயிரினம்
கூட்டி வைத்துப் பலநலந் துய்த்தனை;
புலத்தை யிட்டிங் குயிர்கள் செய்தாய்,அன்னே!
போற்றி!போற்றி!நினதருள் போற்றியே!

சித்த சாகரஞ் செய்தனை ஆங்கதிற்
செய்த கர்மப் பயனெனப் பல்கினை;
தத்துகின்ற திரையுஞ் சுழிகளும்
தாக்கி யெற்றிடுங் காற்றுமுள் ளோட்டமுஞ்
சுத்த மோனப் பகுதியும் வெண்பனி
சூழ்ந்த பாகமும் சுட்டவெந் நீருமென்று
ஒத்த நீக்கடல் போலப் பலவகை
உள்ள மென்னுங்க கடலில் அமைந்தனை

      சிவசக்தி புகழ்

ராகம்-தன்யாசி தாளம்-சதுஸ்ர ஏகம்

ஓம், சக்திசக்தி சக்தியென்று சொல்லு-கெட்ட
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு;
சக்திசக்தி சக்தியென்று சொல்லி-அவள்
சந்நிதியி லேதொழுது நில்லு.

ஓம்,சக்திமிசை பாடல்பல பாடு-ஓம்
சக்திசக்தி என்று தாளம் போடு;
சக்திதருஞ் செய்கை நிலந் தனிலே-சிவ
சக்திவெறி கொண்டுகளித் தாடு.

ஓம்,சக்திதனை யேசரணங் கொள்ளு என்றும்
சாவினுக்கொ ரச்சமில்லை தள்ளு,
சக்திபுக ழாமமுதை அள்ளு-மது
தன்னிலினிப் பாகுமந்தக் கள்ளுன.

ஓம், சக்திசெய்யும் புதுமைகள் பேசு-நல்ல
சக்தியற்ற பேடிகளை ஏசு;
சக்திதிருக் கோயிலுள்ள மாக்கி-அவள்
தந்திடுநற் குங்குமத்தைப் பூசு.

ஓம், சக்தியினைச் சேர்ந்ததிந்தச் செய்கை -இதைச்
சார்ந்துநிற்ப தேநமக்கோ ருய்கை;
சக்தியெனும் இன்பமுள்ள பொய்கை-அதில்
தண்ணமுத மாரிநித்தம் பெய்கை.

ஓம்,சக்திசக்தி சக்தியென்று நாட்டு-சிவ
சக்தியருள் பூமிதனில் காட்டு;
சக்திபெற்ற நல்லநிலை நிற்பார்-புவிச்
சாதிகளெல் லாமதனைக் கேட்டு.

ஓம்,சக்திசக்தி சக்தியென்று முழங்கு-அவள்
தந்திரமெல் லாமுலகில் வழங்கு;
சக்தியருள் கூடிவிடு மாயின்-உயிர்
சந்ததமும் வாழும்நல்ல கிழங்கு

ஓம்,சக்திசெய்யுந் தொழில்களை எண்ணு நித்தம்
சக்தியுள்ள தொழில்பல பண்ணு;
சக்திதனை யேயிழந்து விட்டால்-இங்கு
சாவினையும் நோவினையும் உண்ணு.

ஓம், சக்தியரு ளாலுலகில் ஏறு-ஒரு
சங்கடம்வந் தாலிரண்டு கூறு;
சக்திசில சோதனைகள் செய்தால்-அவள்
தண்ணருளென் றேமனது தேறு.

ஓம்,சக்திதுணை என்று நம்பி வாழ்த்து-சிவ
சக்திதனையே அகத்தில் ஆழ்த்து;
சக்தியும் சிறப்பும் மிகப் பெறுவாய்-சிவ
சக்தியருள் வாழ்கவென்று வாழ்த்து


யோக சித்தி் வரங் கேட்டல்

விண்ணும் கண்ணும் தனியாளும்-எங்கள்

வீரை சகித நினதருளே என்தன்

கண்ணுங் கருதும் எனக்கொண்டு-அன்பு

கசிந்து கசிந்து கசிந்துருகி-நான்

பண்ணும் பூசனை கள்எல்லாம்-வெறும்

பாலை வனத்தில் இட்ட நீரோ?-உனக்

கெண்ணுஞ் சிந்தை யொன்றிலையோ?-அறி

வில்லா தகிலம் அளிப்பாயோ?


நீயே சரணமென்று கூவி-என்தன்

நெஞ்சிற் பேருறுதி கொண்டு-அடி

தாயே!யெனக்குமிக நிதியும்-அறந்

தன்னைக் காகுமொரு திறனும்-தரு

வாயே

                    வெற்றி

எடுத்த காரியம் யாவினும் வெற்றி,
எங்கு நோக்கினும் வெற்றிமற் றாங்கே
விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி,
வேண்டி னேனுக் கருளினள் காளி;
தடுத்து நிற்பது தெய்வத மேனும்
சாகு மானுட மாயினும் அஃதைப்
படுத்து மாய்பபள் அரட்பெருங் காளி,
பாரில் வெற்ற எனக்குறு மாறே.

எண்ணு மெண்ணங்கள் யாவினும் வெற்றி,
எங்கும் வெற்றி, எதனிலும் வெற்றி,
கண்ணு மாயிரு ரும்மென நின்றாள்
காளத் தாயிங் கெனக்கருள் செய்தாள்;
மண்ணும் காற்றும் புனலும் அனலும்
வானும் வந்து வணங்கிநில் லாவோ?
விண்ணு ளோர்பணிந் தேவல்செய் யாரோ?
வெல்க காளி பதங்களென் பார்க்கே

அன்னையை வேண்டுதல்

எண்ணிய முடிதல் வேண்டும்,

நல்லவே எண்ணல் வேண்டும்;

திண்ணிய நெஞ்சம் வேண்டும்,

தெளிந்தநல் லறிவு வேண்டும்;

பண்ணிய பாவ மெல்லாம்

பரிதி முன் பனியே போல,

நண்ணிய நின்முன் இங்கு

நசித்திடல் வேண்டும் அன்னாய்


காணி நிலம் வேண்டும்

காணி நிலம் வேண்டும்-பராசக்தி

காணி நிலம் வேண்டும்;-அங்கு,

தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்

துய்ய நிறத்தினதாய்-அந்தக்

காணி நிலத்திடையே-ஓர் மாளிகை

கட்டித் தரவேணும்;-அங்கு,

கேணி யருகினிலே-தென்னைமரம்

கீற்று மிளநீரும்


பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்

பக்கத்திலே வேணும்;-நல்ல

முத்துச் சுடர்போலே-நிலாவொளி

முன்புவர வேணும்?அங்கு

கத்துங் குயிலோசை-சற்றே வந்து

காதிற்பட வேணும்;-என்றன்

சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்

தென்றல்வர வேணும்.


பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு

பத்தினிப் பெண்வேணும்;-எங்கள்

கூட்டுக் களியினிலே-கவிதைகள்

கொண்டுதர வேணும்;-அந்தக்

காட்டு வெளியினிலே,-அம்மா!நின்தன்

காவலுற வேணும்;என்தன்

பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்

பாலித்திட வேணும்.


                முத்துமாரிபாடல்

உலகத்து நாயகியே!-எங்கள் முத்து

மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

உன் பாதம் சரண்பகுந்தோம்,-எங்கள் முத்து

மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

கலகத் தரக்கர்பலர்,-எங்கள் முத்து

மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

கருத்தி னுற்றே புகுந்துவிட்டார்,-எங்கள் முத்து

மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

பலகற்றும் பலகேட்டும்-எங்கள் முத்து

மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

பய னொன்று மில்லையடி-எங்கள் முத்து

மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

நிலையெங்கும் காணவில்லை,-எங்கள் முத்து

மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

நின்பாதம் சரண் புகுந்தோம்,-எங்கள் முத்து

மாரியம்மா, எங்கள் முத்து மாரி!


துணிவெளுக்க மண்ணுண்டு,-எங்கள் முத்து

மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

தோல்வெளுக்கச் சாம்பருண்டு,-எங்கள் முத்து

மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

மணி வெளுடக்கச் சாணையுண்டு,-எங்கள் முத்து

மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

மனம்வெளுக்க வழியில்லை,-எங்கள் முத்து

மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

பிணிகளுக்கு மாற்றுண்டு,-எங்கள் முத்து

மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

பேதைமைக்கு மாற்றில்லை,-எங்கள் முத்து

மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

அணிகளுகொ ரெல்லையில்லாய்,-எங்கள் முத்து

மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

அடைக்கலமிங் குனைப்புகுந்தோம்,-எங்கள் முத்து

மாரியம்மா, எங்கள் முத்து மாரி!


       தேச முத்துமாரி

தேடியுனைச் சரணடைந்தேன்,தேச முத்து மாரி!

கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய்

பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாங் களைவாய்;

கோடிநலஞ் செய்திடுவாய்,குறைகளெல்லாந் தீர்ப்பாய்

எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி;

ஒப்பியுன தேவல்செய்வேன் உனதருளால் வாழ்வேன்

ஆதாரம் சக்தி யென்றே அருமறைகள் கூறும்;

யாதானுந் தொழில் புரிவோம்;யாதுமவள் தொழி

லாம்

துன்பமே இயற்கையெனும் சொல்லைமறந் திடுவோம்;

இன்பமே வேண்டி நிற்போம்;யாவுமவள் தருவாள்

நம்பினார் கெடுவ தில்லை;நான்கு மறைத் தீர்ப்பு;

அம்பி கையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம்.

  பாரதியார் வடமொழி தமிழ்மொழி இரண்டிலும் புலமை பெற்ற ஞான கவி ஆயினும் தமிழிலே  சிறந்த பாடல்களை தந்த பாரதியார் புதுவையில் குள்ளச்சாமி என்ற ஞான அவதூதி குருவின் ஞானதீட்சை பெற்றதுடன் அரிய யோக ஞான தவப்பேறு பெற்று மகாசக்தி காளியிடம் கண்ணனிடம் மானசீகமாக பேசி உலக மக்களுக்காக விண்ணப்பம் செய்து இறைவனிடம் சக்தியிடம் மன்றாடல் செய்து அழுது வேண்டிய அற்புத ஞானகவியை புரட்சி கவி என்று மட்டுமே மக்களுக்கு அறிமுகம் செய்துவைத்தது ஆச்சரியம்

தன்னை ஒரு சித்தர் நேயன் சித்தர் மரபை சார்ந்தவன் என்று அழைப்பதை பாரதியாரின் ஆன்மா விரும்பியது 

அடியேன் தமிழ்முறை வழிபாடுகளில் பாரதியாரின் பக்தி பாடல்களை பாடுவதை அகஸ்தியர் சித்தர் பெருமக்களும் ஆசி செய்து இருக்கிறார்கள்

ஞானத்தை நோக்கி செல்பவருக்கு இறைவனின் அடியவன் என்ற அங்கீரமே பெரிதாய் இருக்கும் அதற்கு சான்றாக இறைவனின் சன்னிதியில் இறைவழிபாடுகளில் அவர்கள் வழிவந்த பாடல்களை பாடும் போது அவர்களின் ஞானதவம் சரியான பயன்பாடு ஆவதற்கு ஆன்மா வாழ்த்தும்

பாரதியின் பக்தி பாடல் சொற்சுவை பக்தியின் ஆழம் வேண்டுதல் ஆன்ம சுதந்திரம் அடிநாதமாக இருக்கும் 

அகஸ்தியர் ஆசியோடு மகாகவி சக்தி பாடல்களை தொகுத்து தந்து இருக்கிறேன் இதில் பிழை ஏதும் இருந்தால் அது என் பிழை பாரதி பிழைஇல்லை. மூலபாடல்களை கண்டு பிழையற ஓதி போற்றி பயன்பெருவீர் என்று குருவருளால் வேண்டி கொள்காறேன்

நன்றி திரட்டி தந்த அடியவர்களுக்கு


அடியேன் இராமய்யா. தாமரைச்செல்வன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமண் எனும் ஸ்ரீ சூர்ணமகிமை

                     ஸ்ரீ மன் நாராயணாய நம                           ஸ்ரீ மன் நாராயணன் ஸ்ரீ வைஷ்ணவனின்  பொதுவான  லக்ஷணங்கள்  மூன்று. (1) கழுத...