வியாழன், 25 செப்டம்பர், 2025

விபூதி எனும் மகாமருந்து

சிவமயம்

நீறில்லா நெற்றி பாழ்' என்பது ஓளவை வாக்கு. திருநீற்றின் பெருமை சொல்லவே உருவானது திருஞானசம்பந்தரின் திருநீற்றுப் பதிகம்'. மந்திரச் சொற்களுக்கு நிகரானது திருநீறு. சைவ சமயத்தவரின் அடையாளமாக மட்டுமல்லாமல், தெய்விக ஆற்றல் தரும் புனிதச் சின்னமாகவே திருநீறு போற்றப்படுகிறது. பிறப்பெடுக்கும் எவரும் முடிவில் பிடி சாம்பலாகத்தான் வேண்டும் என்பதால், எதிலும் அளவுக்கு அதிகமான ஆசை வைக்காமல் இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதுதான் திருநீறு. 

`நீறு' என்றால் சாம்பல்; `திருநீறு' என்றால் மகிமை பொருந்திய நீறு என்று பொருள். 

திருநீறு `விபூதி' என்றும் அழைக்கப்படும். விபூதி என்றால் ஞானம், ஐஸ்வர்யம் என்றெல்லாம் பொருள் தரும். `பிறப்பு, இறப்பு என்னும் கொடுமையான பிறவிச் சுழலிலிருந்து விடுவித்து, ஈசனின் திருவடிகளில் நம்மைக் கொண்டு சேர்க்கும் மாமருந்து திருநீறு’ என்று போற்றுகிறது திருஞானசம்பந்தரின் திருநீற்றுப் பதிகம்.

நான்குவகை திருநீறு

திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை

கல்பம்

அணுகல்பம்

உபகல்பம்

அகல்பம்

கல்பம்

கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பது கல்பத் திருநீறு எனப்படும்.

அணுகல்பம்

ஆரண்யங்களில் (காடுகளில்) கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.

உபகல்பம்

மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.

அகல்பம்

அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.

ஐந்து வகை திருநீறு

இரட்சை

சாரம்

பஸ்மம்

பசிதம்

விபூதி


இரட்சை

சுமனை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது ஈசானிய முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது சிவப்பு நிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு இரட்சை என்று அழைக்கப்பெறுகிறது.

சாரம்

சுசீலை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது தற்புருச முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு சாரம் என்று அழைக்கப்பெறுகிறது.

பஸ்மம்

சுரபி என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது அகோர முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு பஸ்மம் என்று அழைக்கப்பெறுகிறது.

பசிதம்

பத்திரை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது வாமதேவ முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு பசிதம் என்று அழைக்கப்பெறுகிறது.

விபூதி

தந்தை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது சத்தியோசாத முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது கபில நிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு விபூதி என்று அழைக்கப்பெறுகிறது

அணியும் முறை

வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக்கொள்ளல் வேண்டும். எடுக்கும் போது திருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போது சிவாயநம அல்லது சிவசிவ என்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக் கொள்ளுதல் வேண்டும். ஒன்று நெற்றி முழுவதும் அல்லது 3 படுக்கை வசக் கோடுகளாகத் தரிக்க வேண்டும். காலை, மாலை, பூசைக்கு முன்னும் பின்னும், ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும்.நெற்றியில் முழுவதும் பரவிப் பூசுவதை "உத்தூளனம்" எனப்படும். மூன்று படுக்கை வசக்கோடுகளாக பூசுவதை "திரிபுண்டரம்" எனப்படும்.

திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல வழிகாட்டும். இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே!

திருநீறு அணிவதால் செய்த பாவங்கள் நீங்கும் என்றும், திருநீறின் பெருமையை அறிந்து முறைப்படி அணியாமல் வெறுமனே பூசிக் கொள்பவர்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றும் சைவ நூல்களில் கூறப்பட்டுள்ளது திருநீறு அணிவதால் பாவங்கள் போகின்றன 

திருநீறு அணியும் இடங்கள்

உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை

தலை நடுவில் (உச்சி)

நெற்றி

மார்பு

தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.

இடது தோள்

வலது தோள்

இடது கையின் நடுவில்

வலது கையின் நடுவில்

இடது மணிக்கட்டு

வலது மணிக்கட்டு

இடது இடுப்பு

வலது இடுப்பு

இடது கால் நடுவில்

வலது கால் நடுவில்

முதுகுக்குக் கீழ்

கழுத்து முழுவதும்

வலது காதில் ஒரு பொட்டு

இடது காதில் ஒரு பொட்டு

மந்திரமாவது நீறு" - திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம். மன் + திரம் = மந்திரம். மும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்தபின் எஞ்சியது நீறு. நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.

புருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம் உள்ளது.அப்பகுதியில் முக்கோண வடிவாக எரிவதை யோகியர் என்பர், அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர். புருவ நடுவின் மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரியவெளியுள்ளது. அவ்விடத்தில் அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே நீறு இடுவர்.


விபூதி தயாரிக்கும் முறையை சாஸ்திரங்கள் அற்புதமாக விளக்கியுள்ளன.

காராம்பசுவின் சாணத்தை நிலத்தில் விழும் முன் பிடித்து, அதன் கோமயத்தால் ஈரமாக்கி, உருண்டைகள் பிடித்து காய வைக்க வேண்டும்.

அதை, திரிபுர ஸம்ஹார காலம் என்று வர்ணிக்கக் கூடிய கார்த்திகை மாத பெளர்ணமியும், கிருத்திகை நக்ஷத்திரமும் இணைந்த கார்த்திகை தீபத் திருநாளில், எரியூட்ட வேண்டும். (சில ஆன்மீகர்கள் அன்று ஏற்றப்படும், சொக்கப்பனையில் தான் எரிக்கப்பட வேண்டும் என்பர்)

அது திறந்த வெளியில் தானாகவே ஆறவேண்டும். மார்கழி மாதம் முழுவதும் - பனி பொழிந்து, அந்த சாணச் சாம்பல் சற்றே நிறம் மாறிக்கொண்டிருக்கும். தை மாதம் முழுவதும் அச்சாம்பலை கிளறிக்கொண்டேயிருக்க வேண்டும். பனி பெய்ய பெய்ய சாம்பலின் கரிய நிறம் மாறி வெளிறும்.

மாசி மாதத்தின் மஹா சிவராத்திரியின் காலை நேரத்தில் அச்சாம்பலை எடுத்து, வஸ்திரகாயம் செய்ய வேண்டும்.

வஸ்திரகாயம் - ஒரு பானையின் வாயில் தூய்மையான துணியைக் கட்டி, சாம்பலை எடுத்து, துணியின் மேல் கையால் தேய்க்க தேய்க்க, மென்மையான துகள்கள் பூசிக்கொள்ளத் தகுந்த விபூதியாக பானையினுள் சேரும்

அதை, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த பிறகு, சிவபக்தர்கள் தரிக்க வேண்டும்.

1 சுத்தமான பசுஞ் சாண விபூதி – 1.1/2 கிலோ

2. படிகார பஸ்பம் – 10 கிராம்
3. கல் நார் பஸ்பம் – 10 கிராம்
4. குங்கிலிய பஸ்பம் – 10 கிராம்
5. நண்டுக்கல் பஸ்பம் – 10 கிராம்
6. ஆமை ஓடு பஸ்பம் – 10 கிராம்
7. பவள பஸ்பம் – 10 கிராம்
8. சங்கு பஸ்பம் – 10 கிராம்
9. சிலா சத்து பஸ்பம் – 10 கிராம்
10. சிருங்கி பஸ்பம் – 10 கிராம்
11. முத்துச் சிப்பி பஸ்பம் 10 கிராம்
12. நத்தை ஓடு பஸ்பம் 10 கிராம்

இவைகள் அனைத்தையும் ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி நன்றாக கலந்து ஒரு செம்பு பாத்திரத்தில் அல்லது காந்தம் பிடிக்காத எவர்சில்வர் பாத்திரத்தில் சேமித்து வைத்துக் கொண்டு உபயோகிக்கவும் . இது சுமார் ஒரு வருட உபயோகத்திற்கு வரும்.
இது பசும்சாணத்தோடு பல ஜீவராசிகளின் உயிர் பஸ்பங்களை முறைப்படி அளவோடு கலந்து தயாரிக்கப்படுவதால் இதற்கு ஜீவ பஸ்ப விபூதி என்று பெயர்.இது சித்தர்கள் கைமருந்தான விபூதி இதை தயாரிப்பது  கவணமாக பஸ்மம் மருத்துவ பரிசோதனை தெறிந்திருக்க வேண்டும் இது ஒரு தகவலுக்கானது. 

இதனை நீரில் குழைத்து இடும்போது ஒருவித கதிர்வீச்சு வெளிப்படும். இதுவே மிகப்பெரிய சக்தியாகும். இதில் உயிர் உள்ள ஜீவ பஸ்பங்கள் சேர்ததிருப்பதால் மிளகுப் பிரமாணம் எடுத்து சாப்பிட உடலில் இருக்கும் நோய் தீரும். மந்திரங்கள் ஜபித்து இடும்போது தொழில் பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள் தீரும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதனை பயன்படுத்த வேண்டும்.


தத்தம் சமயங்களின் பெருமைகளை அறிந்து கொண்டு அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு சொல்லி தரவேண்டும். திருநீறு மேலான பவித்ரமானது என்பதே நமது முன்னோர் ஆசி

ஏதாவது நோயுற்றால் வீபுதி பிடித்து போடுவது நமது தாத்தா பாட்டிகளின் அன்பு நிறைந்த ஆன்மீகம்

எந்த காவல் தெய்வமாயினும் விபூதி தந்து ஆசி செய்வது தெய்வீக சான்று

சிவபெருமானின் தேகத்தில பூத்த திருநீற்றை சக்திக்கு கவசமாக தந்து பராசக்தி நந்திக்கு தந்து நந்தி தேவபசுவான காமதேனுக்கு தந்ததால் காமதேனுமூலம் பசுக்களுக்கு மகிமைதரும் பசுஞ்சாணத்தில் கலந்ததால் பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கபடும் திருநீறு சிவனின் திருமேனி பூத்த நீறாக அனைவரும் அணிவது மரபு

சித்தர்கள் இயற்கையான முத்துசிப்பி  முத்து சங்கு போன்ற ஜீவ மூலங்களை கொண்டு புடமிட்டு தூய பஸமம் ஆக்கி பிணிதீர்க்க ஜீவ பஸ்ம விபூதி செய்து பிணி போக்கினர் 

விபூதி என்றாலே மேலான ஐஸ்வர்யம் என்பார்கள் ஆன்மீக பெரியோர்கள் அந்த வீபூதியை முறைப்படி தரித்து தத்துவம் அகப்புற ஐஸ்வர்யத்தை அடைவோம்

அடியேன் இராமய்யா. தாமரைச்செல்வன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமண் எனும் ஸ்ரீ சூர்ணமகிமை

                     ஸ்ரீ மன் நாராயணாய நம                           ஸ்ரீ மன் நாராயணன் ஸ்ரீ வைஷ்ணவனின்  பொதுவான  லக்ஷணங்கள்  மூன்று. (1) கழுத...