ஓம் அகத்தீசாய நம
ஓம் வாலைதாய் திருவடிகளே போற்றி
ஐந்தாம் பாகம், குழந்தை பாக்கியம் மற்றும் தடைகள் – முன்வினை & கிரக காரணம் ஒப்பீட்டு ஆய்வு
முன்னுரை
ஜோதிட சாஸ்திரத்தில் ஐந்தாம் பாவம் என்பது குழந்தை பாக்கியம், புத்தி, மந்திர சக்தி, புண்ணியம் போன்றவற்றை குறிக்கிறது. இப்பாவம் சுபமாகவும் வலிமையுடனும் இருந்தால் சந்தான சுகம் எளிதில் கிடைக்கும். ஆனால் சில நேரங்களில் குழந்தைப் பாக்கியத்தில் தடை, தாமதம் அல்லது இல்லாமை ஏற்படுகிறது. இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன:
-
முன்வினை (கர்மா) – முந்தைய பிறவிகளின் பாவ/புண்ணிய விளைவுகள்.
-
கிரக காரணம் – பிறந்த ஜாதகத்தில் கிரக நிலைகள் ஏற்படுத்தும் விளைவுகள்.
இரண்டையும் ஆராய்ந்து பார்ப்போம்.
முன்வினை காரணம்
ஆன்மீக சாஸ்திரங்களில், சந்தான தடை பெரும்பாலும் முந்தைய பிறவியில் குழந்தைகள் மீது செய்த அநீதிகள் (குழந்தை கொலை, கருக்கலைப்பு, பராமரிப்பு தவறு போன்றவை) காரணமாகக் கருதப்படுகிறது.
-
கர்ம விதியின்படி, ஒரு பிறவியில் விதைத்த காரணம் மற்றொரு பிறவியில் பலனளிக்கும்.
-
“பிறவிப் புண்ணியம் பிள்ளைகளாய் வரும்” என்பது இதற்கான சாஸ்திர அடிப்படை.
-
அதாவது குழந்தை பாக்கியம் என்பது கர்ம புண்ணியத்தின் பிரதிபலிப்பு எனலாம்.
கிரக காரணம்
ஜோதிட ரீதியாக ஐந்தாம் பாகத்தில் ஏற்படும் பாபகிரகத் தொடர்புகள் குழந்தை பாக்கியத்தைக் குறைக்கும்:
-
ஐந்தாம் பாவ அதிபதி –
-
பலவீனமாக இருந்தால் அல்லது கேடு பெற்றால் குழந்தை பாக்கியத்தில் தடை ஏற்படும்.
-
சனி, கேது, ராகு போன்ற கிரகங்களின் தாக்கம் அதிகமாயின் தாமதம் ஏற்படும்.
-
-
குரு கிரகம் –
-
குரு சந்தான காரகன் எனப்படுகிறான். குருவின் பலவீனம் அல்லது பாபகிரக சேர்க்கை இருந்தால் குழந்தைப் பாக்கியம் பாதிக்கும்.
-
-
சனி & கேது –
-
ஐந்தாம் பாவத்தில் இருப்பது அல்லது அதிபதியை பாதிப்பது குழந்தை பாக்கியத்தில் தாமதத்தை உண்டாக்கும்.
-
-
அரிஷ்ட யோகம் –
-
சில சந்தர்ப்பங்களில் ஐந்தாம் பாவம், அதிபதி, குரு ஆகியவை ஒருங்கிணைந்து கேடு பெற்றால் முழுமையான சந்தான தடையும் கூட உண்டாகும்.
-
முன்வினை மற்றும் கிரக காரணம்
-
முன்வினை என்பது காரண நிலை; அதாவது அடிப்படை விதை.
-
கிரக நிலைகள் என்பது அந்த விதையின் வெளிப்பாடாகும் கருவி.
-
ஜோதிட சாஸ்திரம் கூறுவது: “கர்மவசத்தில் ஏற்படும் விளைவுகளை கிரகங்கள் வெளிப்படுத்துகின்றன”.
-
எனவே முன்வினை இல்லாமல் கிரகங்கள் எதையும் நிகழ்த்தாது; கிரகங்கள் கர்ம பலனை வெளிப்படுத்தும் சக்தி மட்டுமே.
குழந்தை வரம் வேண்டி தொன்மையான சாஸ்திரங்களில் பல மந்திரங்கள் சொல்லப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பக்தி, நம்பிக்கை, நித்ய ஜபம் ஆகியவற்றோடு செய்யப்படும் பொழுது பலன் தருவதாக நம்பப்படுகிறது.
பரிகாரங்கள் (ஆன்மீக சாஸ்திர அடிப்படையில்)
-
பிரார்த்தனை & பூஜை
-
குருவுக்கான வழிபாடு, சந்தான கஷ்ட நிவாரண ஹோமம்.
-
ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி, சனீஸ்வரன், நாக பூஜை வழிபாடுகள்.
-
-
தானம் & புண்ணியம்
-
குழந்தைகளுக்கு உணவு, கல்வி உதவி, மருத்துவ உதவி செய்தல்.
-
வறுமை பிள்ளைகளுக்கான அன்பும் கருணையும் கர்ம விளைவுகளைத் தணிக்கும்.
-
-
மந்திர ஜபம்
-
“சந்தான கோபால க்ருஷ்ண மந்திரம்”
-
“ஓம் நமோ நாராயணாய” ஜபம்.
-
-
ஆன்மீக சாந்தி
-
யோகா, தியானம், நாமஸ்மரணை மூலம் மன அமைதி.
-
கர்ம புண்ணியம் வளர்க்கும் சுயபரிசோதனை வாழ்க்கை.தான தருமங்களால் கர்ம சுமை நீங்கி நலம் உண்டாகும்
ஓம் அகத்தீசாய நமக
சித்தர் சூத்திரம் இருபத்தி ஒன்று
சூத்திரம் 1
ஆண் பெண் இருவரும் உடல் சுத்தம், மன சுத்தம், உணவு சுத்தம் காத்தால் கருப்பை மலரும்.சூத்திரம் 2
புகை, மது, இரவுநேர அலைச்சல் – குழந்தை பாக்கியத்தைத் தடுக்கும்.சூத்திரம் 3
ஆணுக்கு வீரியம் வளரும் – கரிசலாங்கண்ணி சாறு.சூத்திரம் 4
ஆணுக்கு உயிர் வலிமை தரும் – மூசிலி லேகியம்.சூத்திரம் 5
ஆணின் உயிர்ச்சத்தம் காக்கும் – நாவல் விதை சூரணம்.சூத்திரம் 6
பெண்ணின் கருப்பை சுத்தம் செய்யும் – அஸோகா பட்டை கஷாயம்.சூத்திரம் 7
பெண்ணின் கருத்தரிப்பை எளிதாக்கும் – சேனைக்கிழங்கு பாகம்.சூத்திரம் 8
கருப்பை மலரச் செய்கிறது – மருதாணி இலை சாறு.சூத்திரம் 9
ஆணின் உயிர் வலிமை தரும் – பால், நெய், பேரீச்சம், பாதாம்.சூத்திரம் 10
ஆணின் வீரிய சக்தி கூட்டும் – கீரை, முருங்கை, சுருள்கீரை.சூத்திரம் 11
பெண்ணின் கருப்பை வலிமை தரும் – உளுந்தங்கஞ்சி.சூத்திரம் 12
பெண்ணின் கருத்தரிப்பு சக்தி ஊட்டும் – எள்ளுருண்டை.சூத்திரம் 13
பெண்ணின் மாதவிடாய் சுழற்சி ஒழுங்காக்கும் – கேழ்வரகு கூழ்.சூத்திரம் 14
வாழை, மாதுளை, கருவுற உதவும் பழம்.சூத்திரம் 15
யோகம் – உடலை சுத்தம் செய்கிறது.சூத்திரம் 16
பிராணாயாமம் – இரத்த ஓட்டம் சீராக்கிறது.சூத்திரம் 17
தியானம் – மன அமைதி தருகிறது.சூத்திரம் 18
மந்திர ஜபம் – ஆன்மீக ஆற்றல் கூட்டுகிறது.சூத்திரம் 19
அதிகாலை எழுதல் – கர்ப்ப வளம் தரும்.சூத்திரம் 20
இயற்கை உணவு – கருவுறும் சக்தியை பாதுகாக்கும்.சூத்திரம் 21
உடல் சுத்தம் – உள்ளம் சுத்தம் – உணவு சுத்தம் சேர்ந்தால், குழந்தை பாக்கியம் நிச்சயம் அருளாகும்
குழந்தை பிறப்பு, ஆண் – பெண் பாக்கியம் தொடர்பான மூலிகை, சித்த – ஆயுர்வேத மருத்துவ வழிகள்
-
குழந்தையின் ஆண்/பெண் பிறப்பு என்பது இறைவனின் அருள் மற்றும் இயற்கையின் இயங்கும் விதி.
-
சித்த, ஆயுர்வேத நூல்கள் கர்ப்ப சாஸ்திரம் (Garbha Samhita) என்று கூறும் பகுதியில் கர்ப்பம் நிலை பெறுதல், வளம் வளர்தல், நல்ல ஆரோக்கியம் என்பதையே முக்கியமாக வலியுறுத்துகின்றன
1. கருப்பை சுத்திகரிப்பு (Garbhashaya Shuddhi)
கர்ப்பம் எளிதில் நிலை பெற மாதவிடாய் சுழற்சி முடிந்த பின் சில சுத்திகரிப்பு கஷாயங்கள் குடிக்க வழக்கமாகும்.
-
மஞ்சள் + சுக்கு + வெல்லம் கஷாயம் – கருப்பை புணர்ச்சி சுத்தம்.
-
நெல்லிக்காய், மாதுளை– ரத்த சுத்திகரிப்பு.
2. பீஜ சக்தி வலுப்படுத்துதல் (Beeja Shakti)
ஆண், பெண் இருவரின் கரு பீஜம் (விந்தணு, கருவூசி) ஆரோக்கியமாக இருக்க சித்தர் பின்பற்றியவை:
-
அஸ்வகந்தா (Amukkara) – ஆண் உயிர்க்கணம் வலுப்படுத்தும்.
-
சதாவரி (தண்ணீர்விட்டாங்கிழங்கு)(Shatavari) – பெண் கருப்பை ஆரோக்கியத்திற்கு.
-
நெல்லிக்காய் லேகியம் ஆண் பெண் இருவருக்கும்.நன்று
ஓம் தன்வந்தரி பகவானே போற்றி
3. கர்ப்ப ஸ்தாபக மூலிகைகள்
கருவை நிலைநிறுத்தவும், குழந்தை வளமாக வளரவும்:
-
முருங்கை சர்வாங்கா(முருங்கை இலை, பூ, விதை) – சிறந்த புஷ்டி.
-
வில்வ இலை, பெருங்காயம் – கருப்பை பீடைகள் குறைக்க.
-
சிறுகுரிஞ்சி, மாதுளை – இரத்த வளம்.
4. கர்ப்பிணி பராமரிப்பு (Masika Paricharya)
சிறப்பான மாதாந்திர உணவுக் கட்டுப்பாடுகள்:
-
1ம் மாதம் – பால், நெய்
-
2ம் மாதம் – கஞ்சி, கரிசலாங்கண்ணி
-
3ம் மாதம் – பால் + சக்கரை வள்ளிக்கிழங்கு
-
4ம் மாதம் – திராட்சை, மாதுளை
-
5ம் மாதம் – நெல்லிக்காய்
-
6ம் மாதம் – முருங்கை இலை, பசலை
-
7ம் மாதம் – பால் + கஸ்தூரி மஞ்சள்
-
8ம் மாதம் – இஞ்சி, சிறுதானிய கஞ்சி
-
9ம் மாதம் – வெண்ணெய், பசுமை பழங்கள்
5. ஆன்மீக வழிகள்
-
கர்ப்பிணி சாந்தம், சுபசிந்தனை, தியானம் – குழந்தையின் குணத்தை மேம்படுத்தும் என்று சித்தர்கள் கூறுகின்றனர்.
-
சந்திரன், குரு, சுக்கிரன் பாவங்கள் ஆரோக்கியமாக இருந்தால் கர்ப்ப பாக்கியம் சுலபமாகும் என்று ஜோதிட சாஸ்திரமும் சொல்கிறது.
சித்த, ஆயுர்வேதம் பாலினத் தேர்வை சொல்லவில்லை. ஆனால் ஆண், பெண் இருவருக்கும் ஆரோக்கியமான குழந்தை பிறக்க தேவையான உணவு, மூலிகை, பழக்கவழக்கங்களை மட்டும் வலியுறுத்துகிறது.
ஐந்தாம் பாவத்தில் ஏற்படும் சந்தான தடைகள் முன்வினை காரணமும் கிரக காரணமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. கர்ம விதியின் விளைவுகளை கிரகங்கள் வெளிப்படுத்துகின்றன. எனவே ஜோதிடப் பரிகாரங்களோடு ஆன்மீக சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட தானம், தர்மம், புண்ணியம் ஆகியவற்றை மேற்கொள்வது குழந்தை பாக்கியத்தைப் பெற்றுத்தரும் முக்கியமான வழி எனலாம்.
குலதெய்வ வழிபாடு
குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரிய வழிப்பாடாக திகழ்கிறது. நம்முடைய குலத்தை காக்கக்கூடிய தெய்வத்தை தான் குலதெய்வம் என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட குலதெய்வத்திடம் தான் நம்முடைய குலம் வளர வேண்டும் என்று நாம் வேண்ட வேண்டும். முதலில் குலதெய்வத்திடம் நாம் பிரார்த்தனை செய்த பிறகுதான் வேறு எந்த தெய்வத்தையும் வேண்ட வேண்டும் என்பது பொதுவான விதியாக கருதப்படுகிறது.
குலதெய்வத்திர்க்கு பொங்கல் இட்டு படைக்கவேண்டும். மாவிளக்கு போடுதல். பெரும்படையல் என்று குலவழக்கபடி குலதெய்வத்தை வேண்டுவதால் நம் முன்னோர்கள் ஆசியும் வாழையடி வாழையாக வாழ ஆசி கிடைக்கும்
புத்திரபாக்கியம் அருளும் முக்கிய திருத்தலங்கள்
கருவளர்சேரி
சகல உயிர்களுக்கும் தாயான அம்பாள் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள ‘கருவளர்சேரி’ என்ற ஊரில் ‘அருள்மிகு அகிலாண்டேஸ்வரி’யாக அருள்பாலிக்கிறாள்.
கும்பகோணம் - வலங்கைமான் பாதையில் மருதாநல்லூரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கருவளர்சேரி திருத்தலத்துக்கு வந்து அம்பிகையை வழிபடுவோருக்கு ஜாதக ரீதியான தோஷங்கள் அனைத்தையும் விலக்கி குழந்தை வரத்தை அருளுகிறாள்.
திருக்கருகாவூர்
அடுத்து நம் நினைவுக்கு வருவது திருக்கருகாவூர். கும்பகோணத்தில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருக்கருகாவூர். கருகாக்கும் நாயகியாய் அருள்பாலிப்பவள் கர்ப்பரட்சாம்பிகை தாய் குழந்தை வரம் மற்றும் சுகபிரசவம் ஆசி தருபவள்
புட்லூர் அங்காள பரமேஸ்வரி
திருவள்ளூர் அருகே உள்ள சிறிய ஊர் புட்லூர். அங்கே ஊருக்கு நடுவே அங்காள பரமேஸ்வரி கோயில் இருக்கிறது. இது ஒரு வித்தியாசமான அம்மன் கோயில். கரு சுமந்த வயிறோடு, பெரிய உருவில் மல்லாந்து படுத்திருக்கும் தோற்றத்தில் காட்சி தருகிறாள் அன்னை. தாய்மை கோலத்தில் உள்ள இந்த தயாபரியை வணங்கினால் குழந்தைபாக்கியம் மட்டுமல்ல, சுகப்பிரசவமும் நடக்கும்
புதுக்காமூர் புத்திரகாமேஸ்வரர் ஆலயம்
ஆரணிக்கு அருகே உள்ள புதுக்காமூர் புத்திரகாமேஸ்வரர் ஆலயம் புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் செல்ல வேண்டிய திருக்கோயில். இத்திருக் கோயிலில் அம்பாள் பெயர் பெரிய நாயகி.ஆகும்
ஸ்ரீ முஷ்ணம் அரசமர வழிபாடு
வராக அவதாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது ஸ்ரீ முஷ்ணம் திருத்தலம். இந்த ஆலயம் திருமுட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் வட்டத்தில் அமைந்துள்ள ஊர் தான் ஸ்ரீ முஷ்ணம்.பூவராக ஸ்வாமி
குழந்தை வரம் தரும் குருவாயூர்
குருவாயூர் கோவில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் ஆகும். இந்த இடம் தென் இந்தியாவின் துவாரகா என்றும் அறியப்படுகிறது.
திருப்புட்குழி
திருப்புட்குழி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சி புரத்தில் பாலுசெட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கே செல்லும் சென்னை - வேலூர் சாலையில் அமைந்துள்ளது.
அறுபடை முருகன் ஸ்தலமும் புத்திரபேரு அளிக்கும் திருத்தலங்களே ஆகும்
சஷ்டி விரதம் கார்த்திகை விரதம் செவ்வாய் கிழமை விரதம் வெள்ளிகிழமை விரதங்களும் குழந்தை பேருக்கான ஆசியாகும்
குழந்தை பாக்கியம் வேண்டி சஷ்டி திதிகளில் விரதமிருந்து பாம்பன் சுவாமிகள் அருளிய வேற்குழவி வேட்கை பாடலை தினமும் காலை மற்றும் மாலையில் படித்து வர முருகன் அருளால் குழந்தை பாக்யம் கிடைக்கும்
ஓம் ஆறுமுகா போற்றி
வேற்குழவி வேட்கை :
1. பதின்ஏழு ஒன்றும் விழைசெய்ய பாதம் ஓலிடநன்
மதிபோல் மாமை முகமண்டலம் பகுக்க நகும்
கதியே வேற் குழவி நின்னை காதலால் தழுவ
நிதியே வாராயோ கைகள் நீளுகின்றனவே
2. சீவி முடித்த சிகை செம்போன் சுட்டி நன்குழைகள்
மேவும் உறுப்பு நிழல் செய்ய வாகும் வேற்குழவி
ஏவல் கொடுத்து அருள எண்ணிஎன் முன்வாராயோ
கூவை வெறுத்த கண்கள் இச்சை கொள்ளுகின்றனவே
குழந்தை வரம் தரும் திருப்புகழ்
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப ...... முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த ...... பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி ...... லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி ...... தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க ...... வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த ...... குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் ...... முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த ...... பெருமாளே.
குழந்தை வரம் தரும்
அபிராமி அந்தாதி
ககனமும் வானும் புவனமும் காண, விற் காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவம்பெருமாற்கு, தடக்கையும் செம்
முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ?–வல்லி. நீ செய்த வல்லபமே.
எளிய தமிழில்
மண்ணிலும் விண்ணிலும் தேவரும் மனிதரும் காண வில்தாங்கிய
மன்மதனவனை நெற்றிக்கண்கொண்டெறித்து தட்சிணாமூர்த்தியாகித்
தவம்புரி எந்தை சிவனிடம் பன்னிரு திருக்கரமும் சிவந்தஆறு
முகமண்டல ஜோதியா ய்மலர் ஞானஉரு குருபர ஷண்முகன்
உதித்தது மன்னையே அபிராமியே உன்னாற்றலே
ஓம் நமசிவாய
தென்னாடுடைய சிவனே போற்றி
குழந்தை வரம் வேண்டும்
வெண்காட்டு பதிகம்
திருவெண்காடு பண் - சீகாமரம்
திருஞானசம்பந்தர் 2 ஆம் திருமுறை
இப்பதிகம் பாடியே மெய்கண்டார் பிறந்தார் என்பது சிறப்பு
கண் காட்டு நூதலானும் கனல் காட்டும் கையானும்
பெண் காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும்
பண் காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே. 1
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவு
ஆயினவே வரம்பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குள நீர்
தோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீ வினையே.2
மண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதி இரவி
எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண்திசையும்
பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர் கோன் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே.3
விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூ மறையக்
கடல் விண்ட கதிர்முத்த நகைகாட்டும் காட்சியதே.4
வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக் கீழ்
மாலைமலி வண் சாந்தால் வழிபடு நன் மறையவன் தன்
மேலடர் வெங் காலனுயிர் விண்ட பினை நமன் தூதர்
ஆலமிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவரே.5
தண்மதியும் வெய்யரவும் தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
பண் மொழியால் அவன் நாமம் பல ஓதப் பசுங்கிள்ளை
வெண்முகில் சேர் கரும்பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே. 6
சக்கரம் மாற்கு ஈந்தானும் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரை மேல் அசைத்தானும் அடைந்த அயிராவதம் பணிய
மிக்கதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளம் நன்கு உடையானும் முக்கணுடை இறையவனே.7
பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்தன் உரம் நெரித்தன்று அருள் செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கரு மஞ்ஞை நடமாடக் கடல் முழங்க
விண்மொய்த்த பொழில் வரி வண்டு இசைமுரலும் வெண்காடே 8
கள்ளார் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள்
ஒள்ளாண்மை கொளற் கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
வெள்ளானை தவஞ்செய்யும் மேதகு வெண்காட்டான் என்று
உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே.9
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டு மொழி பொருளென்னும்
பேதையர்கள் அவர் பிறிமின் அறிவுடையீர் இது கேண்மின்
வேதியர்கள் விரும்பிய சீர் வியன் திருவெண்காட்டான் என்று
ஓதியவர் யாதுமொரு தீதிலர் என்று உணருமினே.10
தண்பொழில் சூழ் சண்பையர் கோன் தமிழ் ஞானசம்பந்தன்
விண்பொலி வெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண் காட்டைப்
பண்பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்திவை வல்லார்
மண்பொழிய வாழ்ந்தவர் போய் வான் பொலியப் புகுவாரே.11
ஓம் லோபமித்ரா சமேத அகத்தீசரே போற்றி
குழந்தை பாக்கியம் என்பது வம்சம் தழைக்க வாழையடி வாழையாக குலம்விளங்க அந்த புவனேஸ்வரி தருகின்ற அருள் என்பார்கள்
திருமணமாகி விட்டாலும் குழந்தை பாக்கியம் தரும் பூர்வாங்க ஆசி தங்கள் பிதுர்களுக்கே உள்ளது அவர்கள் ஆசியாலும் குலதெய்வத்தின் ஆசியாலே குந்தை பாக்கியம் உருவாக காரணமாகும் என்பது முன்னோர் வழியான செய்தி
அனைத்து உயிர்களையும் படைகின்ற பரமேஸ்வரன் பரமேஸ்வரியின் கருணையால் எல்லோருக்குமே ஒரு வரமாக கருதபடும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்
ஐந்தாமிடத்தின் குறையால் உண்டாகிற தடைகள் கரு உருவாக தடையாக உள்ள பிணிகள் தீரவேண்டும்
கணவன் மனைவி ஒற்றுமையோடு இருந்து இறைவனை வேண்டி குழந்தை பாக்கியத்தை அடைய பொருமையும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையும் கொண்டிருக்க வேண்டும்
எல்லாம் வல்ல இறைசக்தியை தொழுது குரு அருளாலும் பஞ்சம ஸ்தானம் வலுபெற்று குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு அருள் செய்ய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோம்
அடியேன் இராமய்யா. தாமரைச்செல்வன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக