ஞாயிறு, 5 அக்டோபர், 2025

தெய்வம் தந்த சேய்கள்

 

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்றவரை கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

மனித பிறப்பில் ஆண், பெண் என இரண்டு பிறப்பு உண்டு. ஆணும் பெண்ணும் அல்லாத இரண்டும் கலந்த குணாதிசயம், செயல்பாடுகளையுடைய பிறப்பு எனக் கூறப்படுவது திருநங்கை பிறப்பாகும். இவர்களின் செயல்பாடுகள் செயல்கள் நடவடிக்கைகள் அனைத்தும் பெண்மையின் சுபாவத்தை, பொதுவாக ஒத்துப் போகும். 

இத்தகைய பிறப்புகளுக்கு ஜோதிட ரீதியான கிரக அமைப்புகளும் உள்ளன. சூரியனும் சந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டால் அந்த ஜாதகன் அலியாகப் பிறப்பான். சனியும் புதனும் இணைந்து இருந்தாலும் அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலும் அவன் அலியின் குணாதிசயங்களை ஒத்து இருப்பான். செவ்வாய் சூரியனுடன் சேர்ந்து ரிஷபம், துலாம் போன்ற ராசிகளின் தொடர்பு ஏற்பட்டாலும் அல்லது சந்திரனின் அம்சம் பெற்றாலும் அந்த ஜாதகம் அலியாவான். 

மேலும், புதனுடைய வீடுகளாகிய, மிதுனம், கன்னி இந்த இரு வீடுகளில் ஒன்று லக்னமாகி; புதன் லக்னத்துக்கு ஆறாம் வீட்டில் இருக்க, அந்த ஆறாம் வீட்டுக்கு அதிபதி லக்கினத்தில் இருக்க அந்த ஜாதகன் ஆண்மைக்குறைவு உடையவனாக அல்லது அலியாக இருப்பான் இதை அல்லாது ஆன்மீக சான்றோர்களும், ரிஷிகளும் பிறக்கும் வாரிசுகள் அலியாகப் பிறப்பதற்கு ஒரு சில விளக்கங்களைக் கொடுத்துள்ளனர். 

 1. திருநங்கை(அலி )பற்றிய தொல்காப்பியம்

தொல்காப்பியம் – பொருளதிகாரம்

தமிழின் முதலாவது இலக்கண நூலான தொல்காப்பியத்தில், மனிதப் பிறப்புகள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

ஆண்

பெண்

அலி

ஆண்பால், பெண்பால், அலிப்பால் என மூன்று பிறப்புகள் உண்டு”

(தொல்காப்பியம், பொருளதிகாரம், பால் இயல்)

இங்கு “அலி”என்றால் பாலினம் தெளிவாகக் காணப்படாத, அல்லது நடுநிலைப்படைப்பு எனப் பொருள்.

அலி எனும் சொல் சங்க இலக்கியங்களிலும், குறிப்பாக  அகநானூறு, புறநானூறு, பத்துப்பாட்டு போன்றவற்றிலும் வந்துள்ளது.

இதைப் பார்த்து, தமிழர்கள் அன்றே   

மூன்றாவது பாலினத்தை (Third Gender / Intersex / Transgender)  சமூக அங்கீகாரத்துடன் ஏற்றுக்கொண்டனர் என்பது தெளிவாகிறது.



 2. திருநங்கை(அலி) பற்றிய திருமூலர் (திருமந்திரம்)

திருமூலர், திருமந்திரம் இரண்டாம் தந்திரம், “கர்ப்பக் கிரியை” பாடல்களில், அலி பிறப்புக்கான காரணத்தை விளக்குகிறார்:

ஆண்மிகில் ஆணாகும், பெண்மிகில் பெண்ணாகும்,

பூணிரண்டு ஒத்துப் பொருந்தின் அலியாகும்”

 (திருமந்திரம் – பாடல் 478)

 விளக்கம்:

ஆண்மைக் குணம் (விந்து) அதிகமாயின் ஆண் பிறப்பு

பெண்மைக் குணம் (சோணம்) அதிகமாயின் பெண் பிறப்பு

இரண்டும் சமச்சீராக இருந்தால் அலி பிறப்பு

மேலும், கருவில் உயிர் எவ்வாறு நிலை கொள்கிறது என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்:

குழவி ஆணாம் வலத்தது ஆகில்,

குழவியும் பெண்ணாம் இடத்தது ஆகில்,

குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்,

 குழவி அலியாகும் கொண்டகால் ஒக்கிலே.”

(திருமந்திரம் – பாடல் 482)

 இங்கே,

வலப்புறம் கருவானால் ஆண்,

இடப்புறம் கருவானால் பெண்,

இரண்டுபுறமும் சேர்ந்தால் இரட்டைக் குழந்தை,

 வாயு சமநிலை குலைந்தால் அலி பிறப்பு

 3. தொல்காப்பியமும் திருமூலரும் காட்டும் பொதுவான உண்மை

தொல்காப்பியம் சமூக அங்கீகார அடிப்படையில் மூன்றாவது பாலினம் (அலி) என்பதை ஏற்றுக்கொள்கிறது.

திருமூலர்→ உயிரியல்/யோக அடிப்படையில் திருநங்கைகள்(அலி) பிறப்புக்கான காரணத்தை விளக்குகிறார்.

அதாவது,

தொல்காப்பியம்: “இது இயற்கையான பிறவிகளில் ஒன்றாகும்” என்று சொல்கிறது.

திருமூலர்: “கருவில் உயிரணு சமநிலை காரணமாக அது தோன்றுகிறது” என்று சித்த விஞ்ஞான ரீதியாக விளக்குகிறார்.


தமிழ் சித்த மெய்யியல் சிந்தனையில்,திருநங்கைகள் (அலி) பிறப்பு எப்போதுமே ஒரு  இயற்கைப் பிறவி என்று கருதப்பட்டது.


தொல்காப்பியம் – “மூன்றாவது பாலினம்” என்பதை இலக்கண ரீதியாக அங்கீகரிக்கிறது.

திருமூலர் – அந்தப் பிறவி உயிரியல் காரணங்களால் உருவாகிறது என விளக்குகிறார்.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது:

திருநங்கை(அலி )பிறப்பு குறைபாடு அல்ல; அது இறைவனின் இயற்கையான படைப்பு




கர்ப்பம் –  ஆண் – பெண் – திருநங்கை(அலி) – கூன் – குருடு – முடம் – குள்ளம்" குறித்து திருமூலர் திருமந்திரத்தில் கூறியுள்ள பாடல்கள் மிகவும் ஆழமானவை.

சுருக்கமாக விளக்கம்:

திருமூலர் திருமந்திரம் இரண்டாம் தந்திரம், 14வது பகுதி கர்ப்பக்கிரியையில் 41 பாடல்களாக குழந்தைப் பிறப்பின் தன்மைகள், பிறவிக்காரணங்கள், உடல் மற்றும் மன குறைகள் எவ்வாறு உருவாகின்றன என்பதைக் கூறுகிறார்.


 1. ஆண் பெண் திருநங்கை(அலி) பிறப்பு காரணம் திருமூலர்

ஆண்மிகில் ஆணாகும், பெண்மிகில் பெண்ணாகும்

பூணிரண்டு ஒத்துப் பொருந்தின் அலியாகும்"

(திருமந்திரம் 478)


விந்து–சோணம் (சுக்கிலம், சோணம்)விந்து.சுரோணிதம் ஜீவ சத்து சமச்சீராக கலக்கும்போது அலி (நடுநிலைப் பாலினம்)பிறக்கும்.

ஆண்மை மிகுந்தால் ஆண், பெண்மை மிகுந்தால் பெண்.


 2. குள்ளம் (குட்டை), முடம், கூனம் உருவாதல்

"பாய்கின்ற வாயுக் குறையிலே குறளாகும்

பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்

காய்கின்ற வாயு நடுப்படில் கூனாகும்"

(திருமந்திரம் 480)


3. மந்த புத்தி, ஊமை, குருடு பிறப்பது

மாதா உதரம் மலமிகில் மந்தனாம்

 மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்

மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லே"*

 (திருமந்திரம் 481)

கர்ப்பிணி தாயின் உடல் நிலை மற்றும் உண்ணும் உணவு காரணமாக:

* அதிக மலம் மிகுந்தால் – மந்த புத்தி,

* அதிக சலம் (கபம்) இருந்தால் – ஊமை,

* இரண்டும் சேர்ந்தால் – குருடு குழந்தை.


4. ஆண் – பெண் – இரட்டை –மூன்றாம் பாலினம்(அலி) குழந்தை பிறப்புகாரணம்

குழவி ஆணாம் வலத்தது ஆகில் குழவியும் பெண்ணாம் இடத்தது ஆகில்

குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்

குழவி அலியாகும் கொண்டகால் ஒக்கிலே"*

(திருமந்திரம் 482)

 கருவின் *நாடி நிலையின்படி

வலப்புறம் இருந்தால் ஆண்,இது சூரியகலை ஆண் தத்துவம்

இடப்புறம் இருந்தால் பெண்,இது சந்திரகலை பெண் தத்துவம் 

இரண்டுபுறமும் இருந்தால் இரட்டைக் குழந்தை,சுழுமுனை நாடி 

அபான வாயு எதிராக இருந்தால் அலி.

சுவாசமும் உயிராக்கமும் நுண்ணிய தொடர்பு உடையது

5. அழகான குழந்தை /  

கருத்தரிக்காமைகாரணம்

"கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்

கொண்ட குழவியும் கோமளம் ஆயிடும்

கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்கொண்டதும் இல்லையாம் கோல்வளையாட்கே"*

 (திருமந்திரம் 483)

வாயு (பிராண சக்தி) சமநிலை இருந்தால் அழகான குழந்தை,

சமநிலை இல்லாவிட்டால் கருத்தரிக்கவே முடியாது.

மூச்சின் இயக்கம் உயிரின் ஆக்க நிலைக்கு ஆதாரம்

 திருமூலரின் முக்கியமான கருத்து:

*மனிதப் பிறப்பில் உள்ள அனைத்து வேறுபாடுகளும் (ஆண், பெண், அலி, குள்ளம், கூன், முடம், குருடு) கர்ப்பக்கால வாயு நிலை, தாயின் உடல் நிலையுடன் தொடர்புடையவை

உடல் அறிவில் ஆண் பெண் திருநங்கை என்ற பாலின பாகுபாடு உண்டெனினும் ஆன்ம நிலையில் ஒன்றுதான் ஆன்மா மாறாத தெய்வநிலையில் இருக்கும்

உயிரின் அடிப்படையில் வேறுபாடு இல்லை; உடலின் கலவையால் மட்டுமே பாலினம் மற்றும் குறைகள் தோன்றுகின்றன

அலிகள் இயற்கை படைப்புகளில் வந்தவர்களே அவர்களுக்கு முன்பிறவி மற்றும் இப்பிறவியில் கர்ப்ப காலத்தில் பிறவி நிச்சியிக்கபட்டுள்ளது

பும்சவனம் என்பது கர்ப்பகாலத்தில் நடக்கும் ஒரு வைதீக சடங்கு வளையல்காப்பு அதில் பும்சவனம் ஆண்குழந்தை (பெண்)பெறும் சடங்கு என்பதே பொருள்

ஆணும் பெண்ணும் இல்லாத மூன்றாம் பாலினத்தவரை நபும்சக என்று அழைக்கிறது வடமொழி

ந-பும்சக என்றால் ‘பால் இல்லாத’ என்று பொருள். ஆண்பால், பெண்பால் எதும் இல்லாதது. இதுவும் அல்ல, அதுவும் அல்ல. அதனால் அலி (பால் ஏதும் இல்லாதது). அலி வேறு, பேடி வேறு.


பெண் தோற்றமும், ஆண் இயல்பும் – அலி.

ஆண் தோற்றமும், பெண் இயல்பும் – பேடி.

திருக்குறளில் அலி

பகையத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து

அஞ்சும் அவன்கற்ற நூல் (குறள் : 727)

தோற்றத்தில் ஆண் போல் நின்றும், போர்முனையில் அஞ்சி ஒளிந்து கொள்பவன் கையில் வாள் எப்படி பயனற்றுப் போகிறதோ, அப்படி அவையைக் கண்டு அஞ்சி ஒதுங்குபவன் படித்த நூலும் பயனுற்றுப் போகும்.

திருவாய் மொழியில் அலி

ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்

காணலும் ஆகான் உனளல்லன் இல்லையல்லன்

பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்

கோணை பொதுடைத்தெம் பெம்மானைக் கூறுதலே.

(நம்மாழ்வார் திருவாய்மொழி)

கால மாற்றம் ஏற்படுத்திய சமூக மாற்றம், அலிகளை கேவலப்படுத்தி மகிழத்தக்கக்கூடிய இழிபிறிவிகளாகக் கருதச் செய்தது. அதற்கேற்ப அலி/ பேடி என்ற சொற்பயன்பாடும் ஒரு கேலிப் பொருளானது. இந்த நிலை மாறவேண்டும் பாலின தேர்வை நாம் எடுத்துக்கொள்ள முடியாது அதை இயற்கை படைப்பு அதை மனப்பூர்வமாக ஏற்று கொள்ள வேண்டும்

மகாபாரதத்தில் அரவானின் தந்தையான அர்ஜூனனும் தான் பெற்ற சாபம் காரணமாக, அலியாக (பிரகன்நளை) சில காலம் வாழ்ந்த கதையுமுண்டு. இது, அரவான் – மோகினி கதையாடலுக்கு முன்பாகவே மகாபாரதத்தில் வரும் நிகழ்வு. மற்றொரு இதிகாசமான இராமாயணத்தில், ராமன் வனவாசம் செல்கையில் நாட்டு மக்கள் அனைவரும் அவர் பின் சென்றனர். அவர்கள் திரும்பிச் செல்லும் பொருட்டு ராமர் ”ஆண்கள், பெண்கள் அனைவரும் திரும்பி நாட்டுக்குச் செல்லுங்கள்” என்றார். ஆண்களையும், பெண்களையும் மட்டும் தானே திரும்பிச் செல்லுமாறு சொன்னார். எனவே, நாம் செல்ல வேண்டியதில்லை என்று அலிகள் அனைவருமே ராமர் வனவாசம் முடிந்து நாடு திரும்பும் வரை அவருக்காக பதினான்கு ஆண்டுகள் காத்திருந்த கதையும் உண்டு.

திருநங்கை மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களை கிறுத்தவ மதத்தின் வேத நூலான பைபிளில் அன்னகர் என்ற சொல், தமிழ் மொழியில் பைபிள் அச்சான நாளிலிருந்தே கண்ணியமாக பயன்படுத்தபட்டு வருகிறது

தமிழ் இலக்கியத்தில் அலி, பேடி, இடமி, இப்பந்தி, கிலிபம், சண்டகம், கோஷா என முப்பதுக்கும் மேற்பட்ட பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஹிஜிரா அரபு மொழியில் அரவாணிகளைக் குறிப்பதற்கான சொல்லாக முக்கானத்துன் உள்ளது. ஆணாகப்பிறந்து தன்னை பெண்ணாக பாவிக்கும் முஸ்லிம் நம்பிக்கை கொண்ட மூன்றாம் பாலினமாக கருதமுடியும். இது ஹனித், ஹன்த என்று அழைக்கப்படுகிறது. 


அரவான் மற்றும் திருநங்கைகள்

அரவான், நல்வாழ்வின் அருளாளன்,
மனிதர்களின் துன்பம் அகற்றும் துணை.
பக்தியுடன் வந்தால் தெய்வ அருள் கொடுப்பான்,
சமயமும் சமூகமும் இணையும் பாதை காட்டுவான்.

திருநங்கைகள், ஒற்றுமையின் சின்னம்,
பூஜைகளில் பங்குபெற்று மனம் வலிமை சேர்ப்பர்.
அவர்கள் வழியில் சமூகமும் ஆன்மாவும் ஒளிர்கின்றது,
பக்தியும் அன்பும் வாழ்வில் மலர்கின்றது.



திருநங்கை மதிப்பின் ஆன்மீக உணர்வு

இந்த உலகில் எல்லா உயிர்களும் இறைவனின் படைப்புகள். மனித வாழ்க்கையின் பரிமாணங்களில் ஒவ்வொரு ஜீவியும் தனித்துவம் கொண்டவர். அதேபோல், திருநங்கை சமூகமும் ஒருபடி உயர்ந்த ஆன்மீக உரிமைகள் கொண்டவர்கள். அவர்கள் வாழ்கையின் அசைவுகள், போராட்டங்கள் மற்றும் சாதனைகள் அனைத்தும் சமூகத்திற்கு ஓர் முக்கிய பங்களிப்பாகும்.

திருநங்கை என்ற சொல், உடலியல் மட்டும் அல்லாமல், மன மற்றும் ஆன்மீக சக்தியின் தனித்துவத்தையும் குறிக்கிறது. அவர்களின் வாழ்வுப் பாதையில் சமூக பாரம்பரியங்கள் மற்றும் பாகுபாடுகள் இருந்தாலும், ஆன்மீக உயர்வின் நோக்கத்தில் அவர்கள் சமத்துவம், கண்ணோட்டம், அன்பு மற்றும் கருணையை பரப்பி வருகிறார்கள்.

நாம் அனைவரும் அவர்களை மதித்து, அன்புடன் அணுக வேண்டும். திருநங்கை சமூகத்தினரின் உரிமைகள், கண்ணோட்டங்கள், வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தும் மனிதநேயத்தின் ஒரு வெளிப்பாடாக பார்க்கப்பட வேண்டும். அன்பு, நேயம், புரிதல் மற்றும் மதிப்புடன் நமது மனங்களை விரிவாக்குவதில் தான் உண்மையான ஆன்மீக உயர்வு.

திருநங்கை சமூகத்தை மதிப்பது என்பது வெறும் சமூக நியாயம் மட்டுமல்ல; அது ஆன்மீக உணர்வின் அழகான வெளிப்பாடும், மனிதநேயத்தின் உயர்ந்த சான்றும் ஆகும். அன்பும் மதிப்பும் கொண்டு அணுகுவோம்; அவர்களின் வாழ்கை இந்த சமுதாயத்தின் ஒளியாய் பரவி வளரட்டும்.


இறைவன் படைப்பை மதித்து ஆன்ம உரிமையை கொடுத்து மகிழ்வோம் 

அடியேன். இராமய்யா. தாமரைச்செல்வன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தெய்வம் தந்த சேய்கள்

  வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி யான் எனது என்றவரை கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்த...