திங்கள், 20 அக்டோபர், 2025

ஐப்பசி மாத சிறப்புகள்

 துலாமாதம் எனும் ஐப்பசி                       மாத சிறப்புகள்


தமிழ் காலக் கணிப்பு முறைப்படி ஆண்டின் ஏழாவது மாதம் ஐப்பசி ஆகும். சூரியன் துலா இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 54 நாடி, 07 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 அல்லது 30 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.


ஐப்பசி மாதத்தில் சிறப்புமிக்க பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றது. ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம், தீபாவளிப் பண்டிகை, கந்த சஷ்டி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றது.



துலா ஸ்நானம்: ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அனைத்துப் புனித நதிகளும் காவிரி நதியில் சங்கமிப்பதாக ஐதீகம். 

கந்தர் சஷ்டி: முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் ஸ்கந்த சஷ்டி விரதம் இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. 

தீபாவளி: ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படும் முக்கியப் பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. 

அன்னாபிஷேகம்: ஐப்பசி பௌர்ணமி தினத்தில், பெரும்பாலான சிவாலயங்களில் சிவலிங்கத் திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. 

ஐஸ்வர்யங்கள்: இந்த மாதம் அடைமழைக்காலம் என்றாலும், ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் மாதமாகவும் கருதப்படுகிறது. 



ஐப்பசி விசேஷங்கள்


ஐப்பசி பௌர்ணமி: சிவனின் லிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று வருடந்தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு சமைத்த சாதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. நாம் உண்ணுவதற்கு உணவளித்த சிவனுக்கு நன்றி கூறும் விதமாக இந்த அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
 
ஐப்பசி சதயம்: தஞ்சை பெரியகோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று அரசு சார்பில் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 
வளர்பிறை ஏகாதசி: ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி 'பாபாங்குசா" என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் வறுமை அகலும், பசிப்பிணி நீங்கும், பாவ விமோச்சனம் பெறலாம்

தேய்பிறை ஏகாதசி: ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி “இந்திரா ஏகாதசி” என்று அழைக்கப்படுகிறது. இந்திரா ஏகாதசியில் விரதமிருந்தால் நாம் செய்த பாவம் மட்டுமின்றி நம் முன்னோர்களின் பாவங்களும் நீங்கும்.
 

கடைமுகம்: ஐப்பசி மாத கடைசி நாள் கடைமுகம் என்று அழைக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் அனைத்துப் புண்ணிய நதிகளும் கலந்து புனிதத்தை அள்ளி வழங்கும் என்பர். இந்த மாதத்தில், காவிரி நீராடல் புண்ணியம் மிகுந்தது. அதுவும், ஐப்பசி கடைசி நாளன்று மேற்கொள்ளப்படும் புனித நீராடலை கடை முழுக்கு என்பர். ஐப்பசி மாதம் கடைசி நாளில் காவிரியில் முழுகி, மயூரநாதரை வழிபட்டால் நன்மை உண்டாகும். மேலும் நம் பாவங்கள் கரைந்தோடும்.
 
தீபாவளி : ஐப்பசி மாதம், தேய்பிறை (கிருஷ்ணபட்ச) சதுர்த்தசி திதியில் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது.
 

கந்த சஷ்டி: கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும்.



ஐப்பசியில் வீடு குடிபோகலாமா


ஐப்பசி மாதம் வீடு குடி போகலாம். ஐப்பசி மாதத்தில் வீடு குடி போவது நல்லது என்று கருதப்படுகிறது, மேலும் இது கிரகபிரவேசம் செய்யவும் உகந்த மாதமாகும். சித்திரை, வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் தை மாதங்களும் வீடு குடி போவதற்கு உகந்தவையாகும். 
வீடு குடி போக உகந்த மாதங்கள்: சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை. 
வீடு குடி போக உகந்த மாதங்கள் அல்லாதவை: ஆடி, புரட்டாசி, மார்கழி மற்றும் சில சமயங்களில் பங்குனி மாதங்களில் தவிர்க்க வேண்டும். 

ஐப்பசி பழமொழிகள்


ஐப்பசி அழுகல் தூற்றல்.

ஐப்பசி அறக் காய்ந்தால் அண்ணன் இட்ட பயிரும் சரி; தம்பி இட்ட பயிரும் சரி.

ஐப்பசி அறக் காய்ந்தால் ஆடு ஒரு மாடு; மாடு ஒரு மலை.5765

ஐப்பசிக்கும் கார்த்திகைக்கும் மழை இல்லா விட்டால் அண்ணனுக்கும் சரி, தம்பிக்கும் சரி.

ஐப்பசி தலை வெள்ளமும் கார்த்திகை கடை வெள்ளமும் கெடுதி.

ஐப்பசி நட்ட கரும்பு ஆனை வால் ஒத்ததாம்.

ஐப்பசி நெல் விதைத்தால் அவலுக்கும் நெல் ஆகாது.

ஐப்பசிப் பிறை கண்ட வேளாளா, கைப்பிடி நாற்றைக் கண்டு கரையேறு.5770

(கைப்பாதி கொண்டு.)
ஐம்பசிப் பணி அத்தனையும் மழை.

(அப்போதே மழை.)
ஐப்பசி மருதாணி அரக்காகப் பற்றும்.

ஐப்பசி மாதத்தில் சம்பா நட்டால் ஆனைக் கொம்பு முளைக்கும்.

ஐப்பசி மாதத்து எருமைக் கடாவும் மார்கழி மாதத்து நம்பியானும் சரி.

ஐப்பசி மாதத்து நடவும் அறுபது பிராயத்திற் பிள்ளையும். பயன் இல்லை


ஐப்பசி மாதத்து நாற்றை அருகில் சாத்து.

ஐப்பசி மாதத்து வெயிலில் அன்று உரித்த தோல் அன்றே காயும்.

ஐப்பசி மாதம் அடை மழை.

ஐப்பசி மாதம் அழுகைத் துாற்றல்; கார்த்திகை மாதம் கனத்த மழை.

(அழுகல் தூற்றல்; அடை மழை.)

ஐப்பசி மாதம் பசு கறக்குமுன் பன்னிரண்டு பாட்டம் மழை.

ஐப்பசி மேல்காற்று அப்போதே மழை.

ஐப்பசி விதைப்பாட்டிற்கு ஐயப்பாடு இல்லை.

ஐப்பசி வெள்ளாமை அரை வெள்ளாமை.




ஐப்பசி மாதம் சூரியன் நீச்சம் பெற்ற மாதம் ஆத்ம காரகன் சூரியன் நீச்சம் பெற்ற காலத்தில் ஆத்ம நலம் தரும் வழிபாடுகளில் ஈடுபட்டு ஆத்ம பலம் பெறுவோம்

அடியேன் 
இராமய்யா. தாமரைச்செல்வன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஐப்பசி மாத சிறப்புகள்

  துலாமாதம் எனும் ஐப்பசி                       மாத சிறப்புகள் தமிழ் காலக் கணிப்பு முறைப்படி ஆண்டின் ஏழாவது மாதம் ஐப்பசி ஆகும். சூரியன் துலா ...